எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி-ஏ.என்.மருதாசலம்
“முதல் படத்திற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அட்வான்ஸ்”
– ஏ.என்.மருதாசலம்
புரட்சி நடிகா் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’யின் தயாாிப்பாளரான ஏ.என்.மருதாசலம் செட்டியாா் அவா்கள், இன்றைய எம்.ஜி.ஆாின் வளா்ச்சிப் பற்றி அன்றே தான் அறிந்திருந்ததாகத் தொிவிக்கின்றாா்.
“புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் குடும்பத்தினரையும் மிகவும் அறிந்து நெருங்கிய வகையில் பழகுபவர்களில் நானும் ஒருவன்.
தமிழ்நாட்டில் முதன் முதலில் பேசும்படம் தமிழில் எடுத்தவர்களில் ஒருவன் நான்.
‘சென்னை ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ்’ முதல் மகாநாட்டின் தலைவராக இருந்திருக்கிறேன்.
கோவையில் பிரீமியர் சினி டோன் ஸ்டூடியோ கட்டி பல படங்கள் எடுத்திருக்கிறேன்.
1930-ம் ஆண்டு முதல் அந்தக் காலத்தில் புகழோடு ஓடிய படங்களான ‘பாமா விஜயம்’ ‘டம்பாச்சாாி’ ஆகிய படங்களை கல்கத்தா மதன் ஸ்டூடியோவில் தயார் செய்தேன்.
பின்பு சுமார் 1932-33-ல் சென்னையில் வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் திரு.ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ என்ற படத்தின் உரிமை வாங்கி படம் எடுக்க ஏற்பாடு செய்து நடிகர் நடிகைகளுக்காக விளம்பரம் செய்யப்பட்டது.
அந்த படத்தில் நடிப்பதற்காக திரு.எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், பாலையா முதலியவா்களைச் செலக்ட் செய்தோம்.
அப்பொழுதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆர் அவர்களைச் சந்தித்தேன்.
நடிகர் தேர்வின் போது அவரை நேரில் பார்த்ததில் எனக்கும் டைரக்டர் அவர்களுக்கும் மிகவும் பிடித்தது.
அப்பொழுது எம்.ஜி.ஆர் அவர்களும் அவர் அண்ணன் திரு.சக்ரபாணி அவர்களும் வந்திருந்தார்கள்.
ரூபாய் நூறு மட்டும் அட்வான்ஸாகக் கொடுத்து, நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்தப்படத்தில் எம்ஜிஆர் சப்-இன்ஸ்பெக்டராக நடித்தார். இதுதான் அவருக்கு முதல் படம்.
புகழ்பெற்ற அமெரிக்க டைரக்டர் திரு.எல்லீஸ்.ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்தார். இந்தச் சம்பவத்தைப் புரட்சிநடிகர் அவர்களே ‘சமநீதி’ பத்திரிகையில் கட்டுரையாக ஒருமுறை எழுதியிருக்கிறார்.
அவர் மேற்படி படப்பிடிப்பின்போது, ஒவ்வொரு சமயத்திலும் மிகவும் ஆர்வத்தைக் காட்டி உதவியும் செய்தார்.
அந்தச் சமயத்திலேயே எம்.ஜி.ஆர் ஒரு காலத்தில் உலகில் மிக உன்னத நிலைக்கு வரவேண்டுமென்று ஆசீர்வதிக்கிறேன், நான்.
என்னுடைய அந்த நல்ல விருப்பம் இன்றைக்கு நிறைவேறியிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சதிலீலாவதிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் அவர்கள், அனேக தமிழ்ப் படங்களில் நடித்து பொது ஜனங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் பாத்திரமாகியிருக்கிறார்.
‘மக்கள் திலகம்’ என்று சிறப்பும் பெற்றுவிட்டார். ஆனாலும் இன்றைக்கும் என் குடும்பத்தில் ஒருவராகவேப் பழகி வருகிறார்.
எம்.ஜி.ஆர் நான் என்றைக்கு சென்னை சென்றாலும், என்னையும் என் குடும்பத்தினரையும் அன்போடு வரவேற்று உபசரிப்பார்.
அவர் கோவைக்கு வரும் சமயங்களில், என்னுடைய இல்லத்திற்கு விஜயம் செய்து என்னைக் கௌரவிப்பாா்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒன்று சொல்லாமலிருக்க முடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு, ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது அவரைப் பார்க்கக் குடும்பத்துடன் சென்னை சென்றேன்.
ஆஸ்பத்திரியில் என்னை பார்த்தவுடன் கஷ்ட நிலைமையிலும் கூட என்னை எழுந்து வந்து தாவிக் கட்டிக் கொண்டார்.
அப்பொழுது இருவரும் அழுதே விட்டோம். அவருடைய தயாள குணமும் தர்மமும் தான் அந்தப் பேராபத்திலிருந்து அவரைக் காப்பாற்றியது.
இன்னும் நல்ல கீர்த்தியும் புகழும் பெற்று புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
நன்றி – சமநீதி எம்.ஜி.ஆா். மலா் (1968)
நன்றி: தாய்