மறதி நோயாளிகளுக்கு டாட்டூ: குவியும் ஆதரவு…! – தனுஜா ஜெயராமன்.
மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது.
முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இலவசமாக டாட்டூவாக போடப்படுகிறது.
வான்ரென் டாட்டூ என்ற பார்லரின் உரிமையாளர் `ஜாங்’ இந்த இலவச டாட்டூ குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதை தொடர்ந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அல்சைமர் நோயாளிகள் அவரிடம் வந்து டாட்டூ போட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அல்சைமர் எனும் மறதிநோயால் பாதிக்கப்படுபவர்கள் பொதுவாகவே தங்களது பெயர், உறவினர்கள் மற்றும் முகவரி என அனைத்தையும் மறந்துவிடுவதுண்டு. இதனால் அடிக்கடி அவர்கள் தொலைந்து போய் விடும் அபாயமும் இருக்கிறது.
இந்த பெரும் பிரச்சனையை தீர்க்க இந்த டாட்டூ பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அழகுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த டாட்டூ தற்போது முதியவர்களின் மறதி நோய்க்கு பயன்படுவது முன்மாதிரியான யோசனை தானே என பலரும் பாராட்டி வருகிறார்கள். எப்படியோ நல்ல விஷயங்கள் நடந்தால் பாராட்ட வேண்டியது தானே!