பாராட்டு ஒரு பக்கம், குட்டு இன்னொரு பக்கம் || பிரான்ஸில் நடந்தது என்ன?
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார் பிரதமர் மோடி.
“இந்த விருதை மிகுந்த பணிவுடன் பெற்றுக் கொள்கிறேன். இதை 140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவே பார்க்கிறேன்” என்று பிரமதர் மோடி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஐரோப்பிய நாடான பிரான்ஸுக்கு அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று அந்த நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு (14,15) நாள்கள் பயணமாக பாரிஸ் சென்றிருந்தார். அங்கு அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடியை நேரில் சென்று கட்டித் தழுவி வரவேற்றார்.
பிரான்ஸ் நாட்டில் நடந்த தேசிய தினத்தில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் நம் முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் பங்கேற்றனர். அப்போது ‘சாரே ஜஹான் சே ஹச்சா’ என்ற நம் தேச பக்திப் பாடல் ஒலிக்கப்பட்டது. மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் வீர்களைப் பார்த்து சல்யூட் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்களில் நம் விமானப்படை வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினார்கள்.
பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட விருதை இதற்குமுன் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, பிரிட்டனின் தற்போதைய அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய பார்லிமென்ட்டில் கண்டனத் தீர்மானம்
இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைப்பான ஐரோப்பிய பார்லிமென்ட், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம்
(13-7-2003) கூடி மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், “மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இதுவரை நூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளன. ஏராளமானவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இனம், மதம் ரீதியான வன்முறைகள் மணிப்பூரில் நடந்து வருகிறது. அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு மதம்சார்ந்த அரசியல் செய்கிறது. சிறுபான்மையினர், மனிதஉரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அங்கு தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.
தற்போது பிரதமர் மோடி பிரான்ஸுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருக்கும் நிலையில் ஐரோப்பிய பார்லிமென்டில் இந்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்குப் பதிலடியாக கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு “மணிப்பூர் கலவர விவகாரத்தில் ஐரோப்பிய பார்லிமென்ட் நிறைவேற்றிய தீர்மானம் காலனித்துவ மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
“இந்திய உள் விவகாரங்களில் ஐரோப்பிய பார்லிமென்ட் தலையிடுவதை ஏற்க முடியாது. மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும் அமைதியான சூழலை ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. ஐரோப்பிய பார்லிமென்ட் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவது நல்லது” என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
பாராட்டு ஒரு பக்கம், குட்டு இன்னொரு பக்கம்