“8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி க்கு புதிய படம் – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்”

 “8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி க்கு  புதிய படம்  – திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்”

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும், மேலும், படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பின்னர்தான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி கட்டணம் இருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே போல் உலக அழகிப் போட்டி, ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு அம்சங்களையும் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் திரையரங்க உரிமையாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:- தியேட்டரின் கட்டணத் தொகையை அதிகபட்சம் ரூபாய் 250 வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல், குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 40 என்பது ஏற்கனவே உள்ளது. அதனை அப்படியே தொடரவும் எங்கள் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

எல்லா திரையரங்கு மற்றும் திரைப்படத்திற்கு ரூபாய் 250 கட்டணம் வசூலிக்கும் நோக்கில் கோரிக்கை வைக்கப்படவில்லை. தியேட்டர் மற்றும் திரைப்படத்தைப் பொறுத்து நிர்ணயம் செய்யவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களாக வெளியான திரைப்படங்கள் நல்ல திரைப்படமாக இல்லாததால் மக்கள் திரையரங்கிற்கு வரவே இல்லை. அண்மையில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தது. அதற்கு முன்னர் வெளியான போர் தொழில் திரைப்படத்திற்கும் குட்நைட் திரைப்படத்திற்கும் மக்கள் திரையரங்கிற்கு அதிகப்படியாக வந்தார்கள். புதிய கண்டெண்ட் கொடுத்தால் மக்கள் நிச்சயம் திரையரங்கிற்கு வருவார்கள். நல்ல கதை இருந்தால் புது கதாநாயகனை வைத்து படம் எடுத்தால், படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். ஆனால் இயக்குநர்கள் அந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. இது இயக்குநர்களிடம் உள்ள தவறு இதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் அதிகபட்சம் ரூபாய் 50 தான் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில திரையரங்கில் அதைவிட குறைவாகவும் வசூலிக்கப்படுகிறது. மால்களில் திரையரங்க உரிமையாளர்களிடம் பார்க்கிங் உரிமை இல்லாததால், அங்கு கட்டணத்தை மால் உரிமையாளர்கள்தான் நிர்ணயம் செய்கிறார்கள். நல்ல நல்ல படங்கள் வந்தால் மக்கள் அதிகம் திரையரங்கிற்கு வருவார்கள், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும், இதனால் திரையுலகமும் நன்றாக இருக்கும் என கூறினார்.

திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஓடிடியில் 4 வாரங்களில் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதாலும், அதற்கான விளம்பரங்கள் ஒரு வார காலம் கொடுக்கப்படுவதாலும், திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைவதாக சங்க நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, வரும் காலங்களில் 8 வாரங்களுக்குப் பிறகுதான், ஓடிடிக்கு புதிய திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதற்கான விளம்பரங்களை 4 வாரங்களுக்குப் பிறகுதான் வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவெடுப்போம். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூடி ஆலோசிப்போம். ஓடிடியில் வெளியிடப்படும் திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியிடப்படுவதால்தான், அதற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, ஓடிடி மூலம் அத்திரைப்படங்களுக்கு வரும் தொகையில், 10 சதவீத ராயல்டி தொகையை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

அதேபோல், அரசாங்கத்திடம் திரையரங்கு கட்டணத்தை உயர்த்துமாறு கோரியுள்ளோம். இது தொடர்பாக அரசிடம் மீண்டும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். திரையரங்குகளில் வெறுமனே திரைப்படங்களை மட்டும் வெளியிடுவதால், எங்களுக்கு சிரமமாக உள்ளது. முக்கியமாக நாங்கள் வைக்கும் கோரிக்கை, பிரபல இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்களை வைத்து மட்டும் வருடத்துக்கு ஒரு படம் எடுக்காமல், புதுமுக நடிகர்களை வைத்து வருடத்துக்கு நான்கைந்து படங்கள் கொடுத்தால், திரையரங்குகள் செழிப்பாக இருக்கும். பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதால், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்கள்தான் வருகிறது. இதுதொடர்பாக இயக்குநர் சங்கத்திடம் நாங்கள் பேச இருக்கிறோம். அதேபோல், ஐபிஎல் போட்டிகளை நிறைய பேர் பெரிய திரையில் காண தயாராக உள்ளனர். அதனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்புவோம். அதேபோல், உலக கோப்பை கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்றவைகளை ஒளிபரப்ப எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார். முன்னதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் திரையிட வேண்டும்.
  • ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகுதான் விளம்பரம் செய்ய வேண்டும்.
  • விளம்பர போஸ்டர்களுக்கு 1% (பப்ளிசிட்டி வரி) நீக்க வேண்டும்.
  • புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60%தான் பங்குத் தொகையாக கேட்க வேண்டும்.
  • திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில்வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்
  • திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
  • திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி, ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.
  • ஏற்கெனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...