கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் திடீர் பணிநீக்கம்
கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் டிரைவிங் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகள் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் பணி புரிந்தார் ஷர்மிளா. கொரோனா காலத்தில் தன்னுடைய ஆட்டோவில் பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, டிரைவர் வேலை கிடைத்தது. இதனையடுத்து அதிகம் பிரபலமானார் ஷர்மிளா. பல யுடுயூப் சேனல்களும். பிரபல இணைய தள பக்கங்களிலும் இவரது பேட்டி வெளியானது.
முகநூல் பக்கங்களில் இவரது ரீல்ஸ் லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது. ஏராளமானோர் கமெண்ட் செய்வார்கள். ஷர்மிளா இயக்கும் பேருந்தில் அரசியல் பிரபலங்கள் பலரும் பயணம் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர். கடந்த வாரம் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பயணம் செய்த நிலையில் இன்றைய தினம் கனிமொழி எம்.பி கோவையில் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த சில மணிநேரங்களிலேயே ஷர்மிளா பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது அதற்கான காரணத்தையும் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் ஷர்மிளா. இந்த நிலையில் ஷர்மிளா பணி செய்த பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் துரைக்கண்ணன் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். ஷர்மிளாவை நாங்கள் பணியில் இருந்து விலகச்சொல்லவில்லை என்றும் அவரே பேருந்தை நிறுத்தி விட்டு பணியில் இருந்து விலகுவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று கூறிய அவர், பெண் சூப்பர்வைசருக்கு ட்ரெயினிங் கொடுத்துள்ளோம். அவர்கள் பணி செய்து வருகின்றனர். எறும்பு கடிக்கிறது என்றால் தட்டி விட்டு போக வேண்டும். ஒடக்கூடாது என்றும் சொன்னார். அப்போது செய்தியாளர்கள், முகநூல் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு ஷர்மிளா விளம்பரம் தேடுவதாக நினைக்கிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த துரைக்கண்ணு நான் அதில் வரும் கமெண்டுகள் படிப்பேன். பஸ் ஓட்டும்போது இதை எல்லாம் செய்யாதீர்கள் செல்வார்கள் நான் சொன்னால் கேட்க மாட்டார்கள்.
எனக்கு இன்ஸ்டாகிராம் பற்றி எல்லாம் தெரியாது என்று சொன்ன அவர் ஷர்மிளா, வேலையை விட்டு நின்றது பற்றி டிவியில் பிளாஷ் போட்டு அதை எனது உறவினர்கள் திருநெல்வேலியில் இருந்து கூப்பிட்டு கேட்டார்கள் என்று சொன்னார். எனது பஸ்சுக்கு விளம்பரம் கிடைத்துள்ளது. இதனால் எனக்கு எந்த மன அழுத்தமோ பிரச்சினையோ எதுவும் இல்லை சார் நான் எந்த தவறும் செய்யவில்லை. இதுவரைக்கும் பஸ்சில் யார் யார் வந்தார்கள் என்று தெரியாது. ஷர்மிளாவினால் பேருந்துக்கு விளம்பரம் வந்து விட்டது என்று தெரிவித்தார்.