ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ படத்தின் ‘கதைத்திருட்டு’ வழக்கும் பின்னணியும்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இதன் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தின் கதை, தான் எழுதிய ‘ஜூகிபா’ எனும் கதை திருடப்பட்டு அப்படியே எடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தெடுத்தார் எழுத்தாளர், கவிஞர், ஆரூர் தமிழ்நாடன். கடந்த 13 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த சிவில் வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் முழுமையாக விடுபட முடியாமல் கிரிமினல் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை திருட்டு வழக்கும் பின்னணியும் இதுதான்… ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி டென்சோங்பா மற்றும் பலர் நடித்த எந்திரன் திரைப்படம், 2010ஆம் ஆண்டு தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. தமிழில் 1.6 பில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வசூலிலும் சாதனை படைத்த முதல் பான் இந்தியா திரைப்படமாகும்.
‘எந்திரன்’ படத்தின் மூலக்கதை, ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் 1996ஆம் ஆண்டு இனிய உதயம் இதழில் தான் எழுதிய கதையிலிருந்து திருடப்பட்டதாகக் கூறி, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன் 2010ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஷங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சிவில் வழக்கைத் தொடுத்திருந்தார். இதே ‘ஜூகிபா’ சிறுகதை 2007ஆம் ஆண்டு மீண்டும் ஒரு கதைத் தொகுப்பு நூலில் இரண்டாம் முறையாக பிரசுரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் கதை வெளியான இதழ் முறைப்படி பதிவு செய்யப்பட்ட இதழ் என்பதால், தன் கதைக்கு காப்புரிமைத் தகுதி இருப்பதாகக் குறிப்பிட்ட தமிழ்நாடன், காப்புரிமை சட்டத்திற்குப் புறம்பாகத் தன் கதை திருடப்பட்டு இருப்பதாக ‘எந்திரன்’ இயக்குநர் ஷஙகர் மீதும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது..
இத்தனை ஆண்டுகளாக இழுபட்டு வந்த அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (15-6-23 வியாழன்) தள்ளுபடி செய்தது. நீதியரசர் எஸ்.சௌந்தர், சிவில் வழக்கிற்கான தகுதி இந்த வழக்கிற்கு இல்லை என்று கூறி, வழக்கின் செலவுகளைப் பிரதிவாதிகளுக்கு வழங்குமாறு வாதிக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை, இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
‘எந்திரன்’ கதைத் திருட்டு சம்பந்தமாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நடன் தரப்பில் சிவில் மற்றும் கிரிமினல் என்று இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது சிவில் வழக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக ஆரூர் தமிழ்நாடன் தரப்பு அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே, இந்தக் கதைத் திருட்டு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் இயக்குநர் ஷங்கரும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தயாரிப்பாளரை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக அறிவித்ததோடு, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜூகிபா’ என்கிற கதைக்கும் ‘எந்திரன்’ திரைப்படத்திற்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி, இயக்குநர் மீது கதைத் திருட்டு வழக்கைத் தொடுப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று அழுத்தமாகத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, ஆரூர் தமிழ்நாடனின் குற்றச்சாட்டையும் புகாரையும் மெய்ப்பிப்பதாக அமைந்திருந்தது.
எனினும், இயக்குநர் ஷங்கர், கதைத் திருட்டு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இயக்குநர் ஷங்கரின் இந்த முறையீட்டைத் தள்ளுபடி செய்து அதிரவைத்தது. மேலும், இந்த வழக்கில் ஒருமுறை கூட ஆஜராகாமல் அலட்சியம் காட்டிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்புக்கு நீதிமன்றம் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் ‘எந்திரன்’ கதைத் திருட்டு தொடர்பான வழக்கு, இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வழக்கை இழுத்தடிக்கப் பல்வேறு முயற்சிகள் நடந்தபோதும், தமிழ்நாடன் தரப்பு, நீதி கேட்டுக் கடுமையாகப் போராடி வருகிறது.
தற்போது, இந்த வழக்கில் தமிழ்நாடனிடம் இயக்குநர் ஷங்கர் தரப்பு, அண்மையில் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்திருக்கிறது. அடுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குநர் ஷங்கரை, தமிழ்நாடன் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்த இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்த வழக்கு, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஷங்கர் தரப்பு வாய்தா கேட்டதைத் தொடர்ந்து, வரும் 27ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கின் போக்கு எப்படி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.