250வது உழவாரத் திருப்பணி HASSIM அமைப்பு சாதனை

 250வது உழவாரத் திருப்பணி HASSIM அமைப்பு சாதனை

“நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் சிறப்பு அளவிட முடியாதது. அதன் பெருமையைக் காப்பாற்றப் பாடுபடுவது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். அவர்களின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கும்” என்கிறார் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் தலைவர்  எஸ். கணேசன்.

பண்டைய காலங்களில் மன்னர்கள் கோயில்களைக் கட்டி மக்கள் வழிபாடு செய்ய வழிவகுத்தார்கள். அதோடு நில்லாமல் அக்கோயில்களுக்கு நிரந்தரமாக பூசைகள் செய்வதற்கு நிலங்களை எழுதி வைத்தார்கள். அதிலிருந்து வரும் வருவாயை வைத்துக்கொண்டு கோயில் பூசைகளையும் திருவிழாக்களையும் சிறப்புடன் நடத்தி வந்தார்கள். ஆனால் தற்போது தமிழகக் கோயில்களின் நிலைமை எப்படி உள்ளது? அந்த ஆலயங்கள் சுத்தமாக உள்ளனவா என்பது கோள்விக்குறி

அப்படி சீர்படுத்தப்படாமல் உள்ள கோயில்களை உழவாரப் பணிகள் செய்து புதுப்பித்து வருகின்றனர் மேற்கண்ட மன்றத்தினர். இவர்கள் இதுவரை 250 மாதங்களில் தமிழகத்திலுள்ள 250 கோயில்களில் உழவாரப் பணி செய்திருக்கிறார்கள்.

உழவாரப் பணியின் உருவாக்கம்

சைவக்குரவர்கள் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர். ‘தாண்டகவேந்தர்’ என்று போற்றப்படுபவர். ‘நமசிவய’ எனும் ஐந்தெழுத்தை நாவிலும், உழவாரம் என்ற விவசாயக் கருவியை கையிலும் ஏந்திக்கொண்டவர் ‘அப்பர்’ என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர்.

சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் பெருமான் அவரது சகோதரி திலகவதியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைத்து மனம் நொந்து சில காலம் சமண சமயம் சார்ந்து பல இன்னல்களுக்கு ஆளானார். சிவபக்தையான திலகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவபெருமான் திருவருளால் அப்பர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தார்.

சமண மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே அப்பரடிகள் கோயில்களில் முளைத்திருந்த புல், பூண்டுகளைத் தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி கோயில் திருப்பணியைத் தொடங்கிவைத்தார். அதற்கு அவர் பயன்படுத்திய கருவி உழவாரம்.

இன்றைக்கு அப்பர் காட்டிய நெறியைப் பின்பற்றி எத்தனையோ உழவாரப் பணி செய்யும் அமைப்புகள் இருந்தாலும் அவற்றில் சிறப்பாகத் தன் பணியை 500 சிவத்தொண்டர்களுடன் கலந்துகொண்டு வடபழநி திருக்கோயில் மற்றும் வேங்கீஸ்வர் திருக்கோயில்களில் 250ஆவது உழவாரப் பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள் ‘இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்’தினர்.  

இதற்கான வெற்றி விழாவை கடந்த வாரம் சென்னை வடபழநியில் உழவாரப் பணியைச் செய்து அங்குள்ள அரங்கில் முப்பெரும் விழாவையும் கொண்டாடி சிறப்பு மலரையும் வெளியிட்டனர். அந்த நிகழ்ச்சியில் மேனாள் நீதிபதி பி.ஜோதிமணி, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லச் செயலர் சுவாமி சத்ய ஞானானந்தர், தினமலர் வெளியீட்டாளர், வடபழநி தக்கார் திரு. எல்.ஆதிமூலம், உலக நட்புறவு மையத்தின் தலைவர் டாக்டர் ஜி. மணிலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த அமைப்பின் தலைவர் திரு. எஸ். கணேசன் அவர்களிடம் பேசினோம்.

“முதன்முதலாக நான்கைந்து நண்பர்களுடன் இணைந்து உருவாகியது இந்தப் பயணம். கடந்த 22 ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் பிரதி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கோயில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்து பக்தகோடிகள் இடையே விழிப்புணர்வு, திருக்கோயில்கள் தோறும உழவாரப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக்கை புறக்கணிக்க வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்குதல், கூட்டுப் பிரார்த்தனை போன்ற ஐம்பெரும் பணிகளைச் செய்து வருகிறோம்.

அதோடு 500க்கும் மேற்பட்ட சிவநேய அன்பர்களைக் குடும்பத்துடன் ஒன்று சேர்த்து எம்பெருமான் துணையோடு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கோயில்களில் அதிகளவில் உழவாரப் பணிகளைச் செய்து வருகிறோம்.

எங்களது உழவாரப் பணி வைணவ திருக்கோவில்களிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் சோளிங்கர் லஷ்மி நரசிம்மர் கோயில், வளர்புரம் ஆகிய திருக்கோவில்களிலும் சைவ – வைணவ பேதமின்றி உழாவாரப் பணிகள் செய்து வருகிறோம்.

மே மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொலைவில் உள்ள வெளி மாவட்டங்களில் உழவாரப்பணிகள் நடைபெற்று வருகிறது.

எங்களது இலக்கு, திருக்கோயில்கள் தோறும் நிரந்தரத் தூய்மை வேண்டி திருக்கோயில்கள் சுற்றிலும் உள்ள பகுதிகளிலிருந்து குறைந்தது 50 அடியார்களை உருவாக்குவது. அதைத் தற்போது உருவாக்கிவிட்டோம்.

இந்தப் பணிக்குத் தொடர் ஒத்துழைப்பு அளித்துவரும் அறநிலையத் துறைக்கு நன்றி” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...