கெத்து காட்டிய இ.பி.எஸ். || ஓரம்கட்டப்பட்ட ஓ.பி.எஸ். || நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இம்முறையும் தி.மு.க. கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இறந்தவரின் தந்தை இ.வி.கே.எஸ். இளங்கோவனே மீண்டும் போட்டியிடுகிறார்.
ஒற்றைத் தலைமைப் போட்டியில் அ.தி.மு.க. யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி அணியின் சார்பில் தென்னரசு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். பன்னீர்செல்வம் அணியின் சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலைச் சந்திக்க இரட்டை இலை சின்னத்தைப் பெற எடப்பாடி அணி உச்ச நீதிமன்றத்தை நாடியதில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எந்த வேட்பாளருக்கு உள்ளதோ அதை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இரட்டை இலை சின்னத்தை இத்தேர்தலுக்குப் பெறுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இதற்கிடையே இருதலைக்கொள்ளி எறும்பாக யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாமல் பா.ஜ.க. தவித்தது.
இதற்கிடையே எடப்பாடி ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. ஒதுக்கிய முன்பு போட்டியிட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனிடம் பேசி அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. எடப்பாடி வேட்பாளரை நிற்கவைக்க முடிவு செய்திருந்தார்.
பதுங்கு புலியாகக் காட்சி அளித்த பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. நின்றால் அதற்கு ஆதரவு தருவதாக அறிவித்து சென்னை பா.ஜ.க. அலுவலகத்துக்கே சென்று பேசினார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற பா.ஜ.க. அண்ணாமலை, மேலிட ஆலோசனையின் பேரில் எடப்பாடியைச் சந்தித்தார்.
“பன்னீர்செல்வம் வேட்பாரை வாபஸ் வாங்கச் சொல்கிறேன். நீங்கள் இரட்டை இலையிலேயே நில்லுங்கள். நாங்கள் ஆதரவு தருகிறோம்” என்று ஒட்டுவேலையை செய்தார்.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.
எடப்பாடி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. அதனால் அவருக்கு அ.தி.மு.க. சார்பாக போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
இதற்கிடையே பிரசாரம் செய்வதற்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலை பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டியலை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மாறாக எடப்பாடி அணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
பன்னீர் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் மனுவை தேர்தல் அதிகாரியிடம் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
இடைத் தேர்தல் விவகாரத்தில் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவு பன்னீர்செல்வத்துக்குப் பாதகமாக அமைந்ததால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் நிலைகுலைந்து போய் பா.ஜ.க. மேலிட வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் மேலிடத்துக் கட்டளைக்கு அடிபணிந்து பெரிய பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிகிறது.
புடிங்கிவிட்ட பா.ஜ.க.
பன்னீரை புஸ் ஆக்கிய பா.ஜ.க. அவரது மகனுக்கோ அவருக்கோ ஏதாவது செய்வதாக வாக்குறுதி கொடுத்தே அவரை ஆப் செய்து வைத்துள்ளனர் என்கிறார்கள். பன்னீர் பெரியகுளத்தில் உறவினர் இறப்புக்குப் போனவர் அங்கேயே இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. அதோடு பா.ஜ.க.வின் தூண்டுதலில் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அறிக்கை விடவும் தயார் நிலையிலேயே இருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள்.
இந்த அளவில் பா.ஜ.க.வுக்கு ஒரு நிம்மதி. இடைத்தேர்தலில் தி.மு.க.விடம் டெபாசிட் இழக்கும் அளவில் எதிர்க்கட்சி அ.தி.மு.க. போய்விடக்கூடாது. அதற்கு தமிழ்நாட்டில் முதுகில் சவாரி செய்ய ஒரு கட்சி தேவை. இந்த நிலையில் எடப்பாடியிடம் பேசி அவரை நியமித்த ஆளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டது பா.ஜ.க. காரணம் எடப்பாடி இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் வேறு சின்னத்தில் நின்று தன் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயாராக இருந்தார். ஆனால் அவர் அப்படி ஜெயித்துவிட்டால் பா.ஜ.க. பின் அவரிடமே போய் சீட்டுக்காக நிற்கவேண்டும். அவர் தரும் சீட்டைத்தான் பெறவேண்டும். அதனால் சமாதானம் செய்யும் பேர்வழியாக தோழமையை பாராட்டும்விதமாக தனக்குக்கீழ் கொண்டுவர தந்திர நாடகம் நடத்தியிருக்கிறது தமிழக பா.ஜ.க.
கெத்துகாட்டும் இ.பி.எஸ்.
எடப்பாடிக்கு தான்தான் அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை என்பதை இரட்டை இலை சின்னத்தைப் பெற்றதில் நிரூபித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்திருக்காவிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்காது. அதை பா.ஜ.க.வே செய்தவிட்டது. இப்போது எடப்பாடிக்கு ரூட் கிளியராகவிட்டாதாகவே கருத இடமிருக்கிறது.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெறும் வாக்கு சதவிகிதத்தை வைத்து எடப்படியின் அடுத்து மூவ் இருக்கும். எப்படியும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் பன்னீர் ஆதரவு, அ.ம.மு.க. விலகல், சசிகலா மௌனம், பா.ஜ.க. ஆதரவு, த.மா.கா. ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பூவை மூர்த்தி, நாடார் சங்கம் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி ரவி சண்முகம் ஆகியோரின் ஆதரவு எடப்பாடிக்கு உள்ளது.
தற்போது தி.மு.க.வுக்கு நேரடி எதிர்க்கட்சி எடப்பாடிதான். பன்னீர் புஸ் ஆகிவிட்டார் என்பதால் எடப்பாடிக்குப் பெரிய தடைக்கல் விலகிதாகவே கருதலாம்.
இடைத்தேர்தலுக்குப் பின்னான அ.தி.மு.க.வின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது உடன்பிறப்புகளின் கவலை.