இஸ்ரோ சிவன் மாணவர்களுக்குச் சொன்ன வெற்றி ரகசியம்

 இஸ்ரோ சிவன் மாணவர்களுக்குச் சொன்ன வெற்றி ரகசியம்

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்  பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி தலைமையாசிரியர் லெ.சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார். இஸ்ரோவில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்து, இஸ்ரோ சிவனின் மாலதி ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள் . 

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுடன் கலந்துரையாடி பேசும்பொழுது, “தாழ்வு மனப்பான்மையை அறவே விட்டுவிட வேண்டும். உங்களைப் பார்க்கும்பொழுது எனக்கு என்னுடைய இளமைக்கால பருவம் நினைவுக்கு வருகிறது. அரசுப் பள்ளியில் படித்து நான் இன்று  இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றிள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

நீங்களும் முயற்சி செய்தால் இஸ்ரோ தலைவரைவிட மிகப்பெரிய பதவிக்குச் செல்ல முடியும். அதற்குத் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி மூன்றும் உங்களிடம் வேண்டும். அவ்வாறு மூன்றும் இருந்தால் இந்திய தேசம் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது. 

உங்களுடைய நண்பர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அனைத்துப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் அறிவு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. அறிவை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படித்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். 

உங்களை  நீங்களே எப்பொழுதும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். முடியுமென்று எண்ணுங்கள். நமக்கு அறிவு நன்றாக உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.. நண்பர்களுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.

சயன்டிஃபிக் டெம்பர் வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். அதாவது ஏன்? எதற்கு? எப்படி? என்று எதனை எடுத்தாலும் கேள்வி  கேட்க வேண்டும். அந்த அறிவு இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும்.

நான் என்னுடைய  இளம் வயதில் மிகப் பெரிய வேலையாகத் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வரவேண்டும் என்றுதான் எண்ணினேன். பின்னாட்களில் எனக்குப் பல்வேறு விதமான தகவல்கள் கிடைக்கப் பெற்றதால் இஸ்ரோவில் பணி ஏற்று தலைவராகப் பணியிடத்திற்கு உயர்ந்தேன்.

எனவே நீங்கள் ஒரு இலக்கை  நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதையும் தாண்டி மிகப் பெரிய இடத்திற்கு நிச்சயமாகச் சென்றடைவீர்கள். நான் படிக்கும் காலங்களில் பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் படித்து முடித்து இந்தப் பதவிக்கு வந்தடைந்தேன்.

அனைத்து மாணவர்களுக்கும் அறிவு சமமானதுதான். எல்லோருக்கும் சமமான அறிவினை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி காணுங்கள். நல்லபடியாக இப்பள்ளி அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று இஸ்ரோ சிவன்  பேசினார் . 

பள்ளி மாணவ, மாணவியர் பலரும் பல்வேறு  சந்தேகங்களைக் கேட்டு பதில்களைப் பெற்றனர் . நிகழ்வில்  இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவனின் மனைவி மாலதியும் பங்கேற்றார். நிறைவாக  ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.

நிகழ்வில் புத்தகங்கள் வாசித்து அதனை அருமையாக்க கூறிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை இஸ்ரோ சிவன் வழங்கினார். நிகழ்வில் பெற்றோரும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...