‘ஜெயிலர்’ ரஜினிக்குப் பாராட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 ‘ஜெயிலர்’ ரஜினிக்குப் பாராட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ரஜினிகாந்த் ரசிகர்கள்  அவரது படங்கள் வெளியாகும்போது வாணவேடிக்கைகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதே மனநிலையில் ரசிகர்கள் தற்போது வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கும் தயாராகி வருகின்றனர்.

அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து விலகிய ரஜினி சினிமாவில் முழு கவனம் செலுத்திவருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். கலாநிதி மாறன் தயாரிப்பில் அனிருத் இசையில் எடுக்கப்பட்டு வரும் இதன் பாடல் காட்சிகளை ராஜள்தானில் உள்ள ஜெய்சல்மேர் நகரத்தில் அமைந்துள்ள பெரிய மலைக்கோட்டையில் எடுத்து வருகிறார்கள். ரஜினி ரசிகர்கள் சிலர் இந்தப் படப்பிடிப்பு தளத்திற்கே போய் அவரைப் பார்த்துவிட்டு வந்திருக்கின்றனர்.

‘ஜெயிலர்’ படம் வெளியாகும் நிலையில் ரஜினி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறார்கள். மார்ச் 26ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான விழாவை நடத்த இருக்கிறார்கள்.

இதற்கு ரஜினி தீவிர ரசிகர் சோளிங்கர் ரவி திட்டமிட்டு இருக்கிறார்.  அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்குப் பாராட்டு மற்றும் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இதற்கான அனுமதியை ரஜினிகாந்த்திடம் முறையாக பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட ரஜினி மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. வாழ்வாதாரத்தை இழந்த சிலருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தோடு அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் வழி செய்து கொடுக்கப்பட்டது. இதையெல்லாம் ரஜினியின் உத்தரவோடுதான் செய்து கொடுக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாளையொட்டி, தர்மபுரியில் அவரது ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். தர்மபுரி ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற முகாமில், சுமார் 1,200 பேர்  பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இந்த ரத்தம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு ரஜினிக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை நடத்த ஏற்பாடாகி வருகிறது.

இந்த விழாவிற்காகத் தமிழகத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் சோளிங்கர் ரவி. இவர் ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயலாளராகச் செயல்பட்டார். ரஜினி பெயரில் பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ரஜினிகாந்தைப் பாராட்டும் வகையில் சில மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.

குறிப்பாக, 2017ஆம் ஆண்டு சோளிங்கரில் ‘மலரட்டும் மனிதநேயம்’ என்ற பெயரில் விழா நடத்தி இருந்தார்.  அதற்குத் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரஜினிகாந்த் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். அந்த விழாவில் ரஜினி ரசிகர்கள் பலருக்கு வாழ்வாதார அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

அந்த விழா நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் மீண்டும் ஒரு மாநாட்டை நடத்த சில மாதங்களாக ரஜினியிடம் அனுமதி கேட்டு வந்தனர். இப்போதைக்கு வேண்டாம் என்று தவிர்த்து வந்த ரஜினி தற்போது விழா நடத்த அனுமதி வழங்கி இருக்கிறார். ஆனால் எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் முழுக்க முழுக்க ரசிகர்களை மையப்படுத்தியே விழா நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ரஜினி.

மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் அந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் நண்பர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த விழாவிற்கான தலைப்பை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் விரைவில் வெளியிட உள்ளனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...