ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது இறுதி அறிக்கையை அளித்துள்ளது.
ஆணையம் கடந்து வந்த பாதை
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், “ஜெய லலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக”க் குற்றம் சாட்டினார். இதன் பிறகு, எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவதற்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதுவே அ.தி.மு.க.வில் தலைவலியை இப்போது ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை தரப்பு, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, இளவரசி, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரி டம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. ஜெய லலிதா வின் சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் ஆராயப் பட்டன.
இதனிடையே 2019-ம் ஆண்டு, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக் குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆணையம் சம்பந்த மில்லாத தகவல்களைக் கேட்பதாகக் கூறி மருத்துவமனை தரப் பில் தடை கோரப்பட்டது. தொடர்பில்லாத தகவல்களையெல்லாம் ஆணை யம் கேட்பதாக மருத்துவமனை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து (2019, ஏப்ரல் 26) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவம்பர், 2021-ல் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவும் வகையில் எய்ம்ஸ் மருத்துவக் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மருத்துவக்குழு கடந்த சில தினங்களுக்கு முன் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் கோரிக்கைக்கு ஏற்ப 2021, டிசம்பரில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில் பெரிய அலுவலகத்தில் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆணையத்தின் விசாரணைக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று அதன் இறுதி அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆணையம் வைத்த குற்றச்சாட்டுகள்
ஜெயலலிதா மரணம் மீது சந்தேகத்தைக் கிளப்பியவர்கள் ஜெயலலிதா வுடன் தொடர்புடையவர்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என மொத்தம் 151 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில்லாமல் தானே முன்வந்தவர் களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
• போயஸ் கார்டனில் இருந்து சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட ஜெய லலிதா மரணமடையும் வரை சசிகலாதான் பொறுப்பு என்பதால் சசி கலாவை விசாரிக்கவேண்டும் என ஆறுமுகசாமி குறிப்பிட்டுள்ளார்.
• தனது அறிக்கை முழுக்க அப்பல்லோ செய்த சிகிச்சைகள் பற்றி அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் ஆறுமுகசாமி.
• திராட்சைப்பழம், கேக், பாதாம் அல்வா, குலோப் ஜாமூன் ஆகியவற்றை ஜெயலலிதா விருப்பிச் சாப்பிட்டதாக டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதுவே ஜெயலலிதாவின் சர்க்கரையின் அளவை அதிகரித்திருக்கிறது என்கிறது ஆணையம்.
• டாக்டர் சிவக்குமார் வீட்டில் சமையல் வேலை செய்த ராஜம்மாள் கொடுத்த விவரங்கள் உச்சகட்ட உடல் உபாதைகள் ஜெயலலிதாவுக்கு இருந்ததைக் கண்டு பிடித்தனர்.
• ராஜம்மா ‘நான் ஜெயலலிதாம்மாவின் உடல்நிலைக்கு ஏற்றபடிதான் உண வைத் தயாரித்து வழங்கினேன். அவரது சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடிய அளவுக்கு இனிப்பு உட்பட எதையும் நான் வழங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
• செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதா மயங்கிக் கீழே விழுந்தார். உடனே சசிகலா கூச்சலிட்டு எழுப்பவே ஜெயலலிதாவின் கார் டிரைவர், பெண் பணியாளர்கள் சிலர் அவரைத் தூக்கி மெத்தையில் படுக்க வைத் துள்ளனர். இது குறித்து சசிகலா டாக்டர் சிவக்குமாருக்குத் தகவல் தெரி விக்க போயஸ் கார்டனுக்கு வந்த சிவக்குமார் ஜெயலலிதாவைப் பரிசோ தித்துவிட்டு உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் அவரது நீலாங்கரை வீட்டுக்குப் போய்விட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்து ஜெயலலிதா வைப் பரிசோதனை செய்திருக்கிறார். அதன்பிறகே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
• முன்கூட்டியே ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவரது உடல்நிலை பாதிப்பு குறைந்திருக்க அதிக வாய்ப்பு உண்டு.
• ஜெயலலிதா தங்கியிருந்த அறைக்குள் எந்த மருத்துவரையும் எளிதில் டாக்டர் சிவக்குமார் அனுமதிக்கவில்லை. முதலில் சிவக்குமார் மற்றும் சசிகலாவைச் சந்தித்துவிட்டுதான் டாக்டர்கள் பேசவேண்டும் என்ற நிலை இருந்தது.
• ஜெயலலிதா மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்வரை அந்தப் பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கி வந்தன. அதற்குப் பிறகு சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டன. சசிகலா மற்றும் டாக்டர் சிவக்குமார் சொல்லித்தான் கேமராக்கள் அகற்றப்பட் டுள்ளன எனத் தெரிகிறது.
• உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை என பல விஷயங்களில் சசிகலா, சிவக் குமாரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது.
• இவர்கள் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட எந்த வி.ஐ.பி.யையும் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.
• ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டுசெல்ல வேண் டும் என்ற கோரிக்கையை சசிகலாவுடன் சேர்ந்து நிராகரித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இப்படி இன்னும் பல விசாரணை விளக்கங்கள் அடங்கிய புத்தகம் முதல்வ ரிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் மக்களின் வரிப்பணம் சுமார் 5 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது தமிழக அரசு. ஆனால் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், “தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்திலுள்ள சதியை விசாரித்து, மர்மக் குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன்” என்று தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்தார். ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று குற்றவாளிகளைக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவாரா பார்ப் போம்.