கோவை – சீரடி ரயில் பயணம் தனியார்மயமானது சர்ச்சையானது
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகின்றன. இந்த நிலையில், ரயில் சேவை யிலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்காக ரயில்களை வாடகைக்கு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படை யில், கோவை – சீரடி தனியார் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது.
நாட்டின் முக்கிய ஐந்து நகரங்களிலிருந்து, மஹாராஷ்டிராவின் ஷீரடிக்கு தனியார் ரயில்களை இயக்குவதற்கு, மத்திய அரசின் ‘பாரத் கவுரவ்’ என்ற திட்டத் தில் ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. இந்த ஐந்து நகரங்களில் கோவை யும் இடம் பெற்று உள்ளது.நாட்டின் முதல் தனியார் ரயில்வே சேவையாக கோவை – ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில், 14-6-2022 அன்று மாலை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டது. ‘சவுத் ஸ்டார்’ ரயில் என்ற தனியார் நிறுவனம் இந்த ரயிலில் சேவைகளை வழங்குகிறது. முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம்.என்.சி. பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது.
கட்டண விவரம் என்ன?
கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு வழக்கமாக ஸ்லீப்பர் கட்டணம் ரூ.1,280 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனி யார் நிறுவனம் 2500 ரூபாய் வசூலிக்கிறது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 2,360 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் கட்டணம் 5000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது.
குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய் ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 8,190 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் கட்டணம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது டிக்கெட் கட்டணத்தை விட பிரிவிற்கு ஏற்ப மூன்றாயிரம் ரூபாய் அதிகம். சீரடியில் சிறப்பு தரிசனம், மூவர் தங்கும் ஏ.சி. ரூம் வசதி, பயண வழிகாட்டி மற்றும் இன்ஷூரன்ஸ் ஆகியவை இந்த பேக்கேஜ் முறையில் அடங்கும். உணவு மற்றும் பெங்களூரை அடுத்த ஆலய தரிசனம் இந்த பேக்கேஜில் வராது என நிர்வாகம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. ரயில்வே கட்டணத்தை விட தனியார் நிறுவனம் இருமடங்கு அளவிற்கு அதிகக் கட்டணத்தை வசூலிப்பது சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் விற்பனை கோவையில் ஐந்து இடத்திலும், திருப்பூர், ஈரோட்டில், தலா ஒரு இடத்திலும் டிக்கெட் கிடைக்கிறது. இதுதவிர, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூரில் உள்ள அனைத்து சாய்பாபா கோவில்களி லும், டிக்கெட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் வண்டி ரயில்வேக்குச் சொந்தம்! ரயில் தண்டவாளம், சிக்னல், நடைமேடை ரயில்வேக்கு சொந்தம்! ரயில்வே டிரைவர் காட் வண்டியை இயக்குவார்கள், ஆனால் டிக்கெட் விற்பனை , பயணிகளை பரிசோதிப்பது ஆகிய அனைத்தும் அதாவது வருமானம் மட்டும் தனியாருக்கு! இயக்கம் ரயில்வே உடையது! டிக்கெட் விற்பனை தனியாருக்கு! கட்டணம் அவர்கள் விருப்பம் போல் வைத்துக் கொள்ள அனுமதி, சீரடிக்கு செல்ல விரும்பும் பக்தர்களை சுரண்டும் நடவடிக்கை.
இந்த நிலையில் கோவை – ஷீரடி தனியார் ரயிலின் கட்டணம் பல மடங்கு அதிக மாக இருப்பதாகவும் இந்த உத்தரவை திரும்பப் பெற்று ரயில்வே துறையே இந்த ரயிலை இயக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தனியாருக்கு உரிமை கட்டணம் முன்பு 40 லட்சம் என்று தீர்மானித்து பின்னர் அதிலும் பதினோரு லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா? மத்திய இரயில்வே துறை அமைச்சர் அண்மையில் சென்னை வந்தபோது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என அடித்துச் சொன்னார்கள். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் ரயிலுக்கு இயல்பை விட இரண்டு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்கள் பயன் படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கோவை – ஷீரடி ரயிலை ரயில்வே நிர்வாகமே எடுத்து நடத்திட வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே இந்த ரயிலையும் இயக்கலாம். மக்களுக்கு பயன்படும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து தனியார்மயப்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. முதலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்பட்டது. தற்போது கட்டணங்களையும் தனியாரே நிர்ணயித்துக் கொள்ள லாம் என அறிவித்திருக்கிறது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த முருகேஷ், “ரயில்வேயை தனியார்மயப்படுத்துவதை எங்கள் சங்கம் எதிர்க்கிறது. அனுபவம் வாய்ந்த ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மூலமே இந்த ரயிலை இயக்காமல் தனியாருக்கு கொடுப் பது சரியான முடிவல்ல.
மத்திய அரசு தன் சொத்துக்களை விற்பதும் தனியாருக்கு கொடுப்பதன் மூலமாக வும் ரூ.6 லட்சம் கோடி பணம் திரட்ட இலக்கு வைத்திருந்தது. அதில் ரயில்வே துறையில் ரூ.1.5 லட்சம் கோடி திரட்ட இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதற்காக 151 வழித்தடங்களை தனியார்வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் முதல்படியாக இதைப் பார்க்க முடிகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்றார்.