ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி வடபழனி கோயில் குடமுழுக்கு விழா
சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடு களில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே வடபழநியின் பெயர் வரக் காரணம். ஒரு கோயிலை எடுத்துக்கொண்டால் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றும் ஏதோ ஒன்றினால் அந்தக் கோவில் பிரசித்திப் பெற்று விளங்கும். இத்தலத்தைப் பொறுத்தவரை மூலவர் அருள்மிகு வடபழநி ஆண்டவரின் மூலம் சிறப்புப் பெற்றுள்ளதாக விளங்குகிறது.
அறுபடை வீட்டிலுள்ள முருகன்களைப் போல் வடபழநியில் உள்ள மூலவ மூர்த்தி யும் சிறப்புடன் அமைந்துள்ளார். தம் திருப்பாதங்களில் பாதணிகளுடன் (பாதரட்சை) அருள்பாலிக்கிறார். பாதணி அணிந்திருப்பது வழிபடுவோருக்கு ஆவணத்தையும் அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் 19ஆம் நுற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது.
தென்பழநியிலிருந்து தண்டாயுதபாணியின் திருவுருவப் படத்தைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கப்பட்டதால் இக்கோயில் வடபழநி என பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. தென்பழநியிலிருந்து முருகன் திருவுருவப் படத்தைக் கொண்டுவந்த சித்தர் அண்ணாசாமி வழிவந்தவர்கள் இன்றும் வடபழநி கோயில் அருகிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது வடபழநி ஆண்டவர் கோயில் கொண்டுள்ள இடத்தில்தான் அண்ணாசாமி சித்தர் வாழ்ந்து வந்திருந்தார். அவர் ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஒரு முருகபக்தர் அண்ணா சாமியைச் சந்தித்து, கிருத்திகை நாளில் திருப்போரூர், திருத்தணி, பழநி ஆகிய தலங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால் உங்களின் வயிற்றுவலி தீரும் என்றார்.
அத்துடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்குப் புதுமையான சக்தி நிறைந்த காணிக்கை ஒன்றையும் செய்யச் சொன்னார். அதற்குப் பெயர் பாவாடம் அதாவது நாக்கை அறுத்து ஆண்டவனுக்குக் காணிக்கையாகத் தருதல். அதேபோல் ஒரு கிருத்திகை நாளில் அண்ணாசாமி திருத்தணிக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்தபின் பலி பீடத்தருகே சென்று தன் நாக்கைத் தானே அறுத்து இறைவனுக்குக் காணிக்கையாக்கினார். பிறகு தன் வீடான தற்போதைய வடபழநி ஆண்டவர் திருக்கோவி லுக்கு வந்த அண்ணாசாமி முருகனை நினைந்து உருகி முருகா…முருகா… என நா குழறியபடி வேண்டினார். என்ன அதிசயம்!
சில நாள்களிலேயே அண்ணாசாமியின் நாக்கு வளரத் தொடங்கியது. கொடுமையான வயிற்று வலியும் விடைபெற்றது. பிறகு அண்ணாசாமி, குறி சொல்லத் தொடங் கினார்
பக்திக்குப் பாத்திரமான அண்ணாசாமி சித்தரை பக்தர்கள் பெருமை யோடு மதிக்கத் தொடங்கினர். அருள்வயப்பட்டு அவர் சொல்லும் வாக்கை பக்தர்கள் அப்படியே கேட்டு நடந்தனர். சில நாட்களுக்குப் பிறகு அண்ணாசாமி பழநிக்குச் சென்றார். அங்கு மெய்ம்மறந்து முருகனைத் தரிசித்துவிட்டு படி இறங்கும்போது ஒரு பெரிய அழகிய பழநி தண்டாயுதபாணியின் திருவுருவப் படத்தைக் கண்டார்.
அப்படத்தைப் போலவே ஒரு படத்தை வாங்க நம்மிடம் பணம் இல்லையே என நினைத்துக்கொண்டே பழநியில் தாம் தங்கிருந்த இருப் பிடத்தை வந்தடைந்தார் அண்ணாசாமி. அன்றிரவு பழநி தண்டாயுதபாணி அண்ணாசாமியின் கனவில் தோன்றி, அண்ணாசாமி, நான் உன் வீட்டிலேயே எழுந்தருளப் போகிறேன். நாளை நீ வீதியில் செல்லும்போது, ஒரு படக் கடைக்காரர் நீ விரும்பிய அந்தப் படத்தை உனக்குத் தருவார். பெற்றுச் செல் என்று கூறி மறைந்தார். அதேபோல் மறுநாள் அண்ணாசாமி கோயில் வீதியில் செல்லும் போது, கோயில் வாயிலில் உள்ள ஒரு சாமிப் படங்கள் விற்கும் படக் கடைக்காரர், தானே முன்வந்து தண்டாயுதபாணியின் அழகிய உருவப் படத்தைத் தந்தார். எல்லாம் முருகன் திருவிளையாடல்.
அதன்பின் சென்னைக்கு வந்த அண்ணாசாமி, அப்படத்தைத் தாம் அருள் வாக்கு சொல்லும் குறி மேடையில் வைத்து, அந்த இடத்தைக் கீற்றுக்கொட்டகைக் கோயி லாக உருவாக்கினார். இதுவே வடபழநி ஆண்டவர் திருக்கோயிலாக இன்று தெய்வீக ஒளிவீசி காட்சி அளிக்கிறது.
அண்ணாசாமி சித்தருக்கு இரண்டு சீடர்கள் இருந்தனர். ஒருவர் ரத்தினசாமி சித்தர். இன்னொருவர் பாக்கியலிங்கத் தம்பிரான். இவ்வாறு இறைப்பணி செய்து வந்தவர் மூப்பு எய்தவே பின்னர் அவரது சீடர் ஸ்ரீரத்தினசாமி முதலியாரை இவரது பணி யினைத் தொடர்ந்து செய்யச் சொல்லி பின்னர் முக்தியடைந் தார். ஸ்ரீரத்தின சாமி முதலியாரும் ஸ்ரீவடபழநி ஆண்டவருக்கு உருவச்சிலை அமைத்து பூஜைகள் செய்து வந்தார். பின்னர் அவர் வழித்தோன்றலாக வந்தவர்தான் ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான். இவரும் முருகன்பால் பக்திகொண்டு, வரும் பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்கியும் சில நாள்களில் குறிசொல்லியும் மக்களின் மனத்தை மிகவும் கவர்ந்து வந்துள்ளார். மூன்றாவது சாதுவான இவர் 1931ஆம் ஆண்டு முக்கியடைந்தார். பின்னர் இம்மூவரின் புகழும் தமிழ்நாடெங்கும் பரவ, பெருந்திரளான மக்கள் அடிக்கடி வடபழநி ஆண்டவ னைத் தரிசிக்க வர ஆரம்பித்து பிரபலமானது இக்கோயில்.
23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால் தற்போது முருக பெருமானின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களால், வடபழநி ஆண்டவர் கோவில் மிளிருகிறது.
அரசின் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் மட்டுமல்லா மல், பல புதிய பணிகள் நடந்துள்ளன.
அவற்றில், கோவிலின் தல புராணத்தையும், முருகனின் வரலாற்றையும் விளக்கும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதும், புதிதாக உற்சவர் மண்டபம் கட்டியுள்ள தும் முக்கியமானதாகும்.
தமிழகத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ள வடபழநி ஆண்டவர் கோவில் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிந்து கொள்வதில், பக்தர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக, கோவிலின் தெற்கு நுழைவுப் பகுதியில், வடபழநி முருகன் கோவில் உருவாகிய தல புராண வரலாறு, 12 ஓவியங்களில் அழகுற வரையப்பட்டு உள்ளது.
பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும்போது, அவர்கள் கண்ணில்படும்படியாக வரையப் பட்டுள்ள இந்த ஓவியங்கள் பற்றி பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் புரிந்து கொள்ளும்படியான, எளிமையான தமிழில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பூரிப்பு ஏற்படுவது நிச்சயம். இதே போல், கோவிலின் வடக்கு பக்கம் பயனற்று இருந்த சுவரில், முருகப்பெருமானின் வரலாறான ‘கந்த புராணம்’ எழிலுடன் வரையப்பட்டுள்ளது. கி.பி. 12ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாசாரியார்.
கி.பி. 12ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாசாரியார் குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்படி, கந்த புராணத்தை இயற்றினார். 135 படலங்களையும், 10 ஆயிரத்து 345 பாடல்களையும் கொண்ட முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும், முழுமையாகவும் கூறும் கந்த புராணத்தின் சாறு பிழிந்து தந்தது போல, இந்த ஓவியங்கள் இங்கு அமையப் பெற்றுள்ளன. கும்பாபிஷேகத்தன்றும், அதன் பிறகும் வரக்கூடிய பக்தர்கள், இந்த வண்ண ஓவியங்களைப் பார்த்து மகிழப்போவது நிச்சயம்.
புதிய கொடிமரம் பிரதிஷ்டைவடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் முன்புறம், 36 அடி உயர புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்குப் பின்னர், கிரேன் உதவியுடன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கும்பாபிஷேக விழாவின் போது பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணற்றில் இருந்தும் மற்றும் முருகனின் அறுபடை திருத்தலங்களில் இருந்தும் மொத்தம் 15 இடங்களில் இருந்து புனிதநீர் வடபழனி முருகன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
இவை அனைத்தும் புதிய பித்தளை குடங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இன்று 20-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று யாகசாலையில் 1300 கலசங்களில் புனித நீர் பகிரப்பட்டது அதன் பிறகு யாக வேள்வி பூஜைக்கு பின்னர் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப் பட்டது. காலை 9 மணிக்கு மூர்த்தி ஹோமம், சம்ஹித ஹோமம், தீர்த்த சங்கிரஹ ணம், அக்னி சங்கிரஹணம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனையும் பிற்பகல் 3 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் நடைபெற்றது. பிற்பகலில் யாக சாலை பூஜைகள் தொடங்கின. மாலை 5.30 மணிக்கு கலாகர்ஷணம் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம் முதல் கால யாக பூஜை, ஹோமம் ஆகியவையும் நடக்கின்றன.
தொடர்ந்து 21-1-2022 நாளை 2ம் கால யாக பூஜையும் மற்றும் 3ஆம் கால யாக பூஜையும் 22ஆம் தேதி 4ஆம் கால யாக பூஜையும் நடக்கவிருக்கிறது. 23ஆம் தேதி காலையில் 6ஆம் கால யாக பூஜை நடக்கவிருக்கிறது. காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
வடபழநி கோவிலில் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். அவ்வாறான நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து அப்போதைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிச்சயம் அனுமதி அளிக்கப்படும் என்றார்கள் நிர்வாகிகள் தரப்பில்