கலைவாணர் எனும் மாகலைஞன் – 16 | சோழ. நாகராஜன்
16 ) ஆயிரம் பொய் சொல்லவில்லையே…
ராஜா சாண்டோவின் ஆசியோடு மதுரத்தைக் கைப்பிடித்த கிருஷ்ணனுக்கு நாகர்கோவிலில் நாகம்மாள் என்கிற மனைவி இருந்த ரகசியம் விரைவிலேயே அம்பலப்பட்டுப் போனது. அது மதுரத்துக்கு ஒரு இடிபோன்ற செய்திதான். பி.வி. ராவ் என்பவர் இயக்கத்தில் ‘பாலாமணி’ அல்லது ‘பக்காத் திருடன்’ – என்கிற படத்தில் நடிப்பதற்காகக் கலைஞர்கள் கோஷ்டி புகைவண்டியில் மும்பைக்கு – அந்நாளைய பம்பாய்க்குப் போய்க்கொண்டிருந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் மற்றும் டி.கே.சண்முகம் ஆகியோர் தனிப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நிலையத்தில் ரயில் நின்றது. நடிகர்களுக்குச் சிற்றுண்டி வாங்குவதற்காக இன்னொரு பெட்டியிலிருந்த டி.கே.எஸ். குழுவிலிருந்த சகஸ்ரநாமம் இறங்கினார். நடைமேடையில் நடந்து சென்றபோது இன்னொரு பெட்டியில் கிருஷ்ணன் இருப்பதைப் பார்த்தவர் இப்படிக் கேட்டார்:
“அண்ணா… ஊரில் மதனியும் மற்றவர்களும் சௌக்கியமா?”
இதனைக் கவனித்த மதுரத்துக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது. ஊரில் மதனியா? அப்படியானால் கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டதா?
வண்டியிலேயே சண்டை தொடங்கிவிட்டது கிருஷ்ணனுக்கும் மதுரத்துக்கும்.
“ஏன் இப்படியொரு பொய்யைச் சொன்னீர்?”
– மதுரம் வெடித்தார் நெருப்பாக. ஆனாலும் அந்த நெருப்பை அணைக்கும் வித்தை அறிந்தவராகவே கலைவாணர் என்.எஸ்.கே. இருந்தார்.
கிருஷ்ணன் இப்படிச் சொல்லிச் சமாளித்தார்:
“மதுரம்… நம் முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்?”
– இப்படிச் சொன்ன கிருஷ்ணனை ஒருகனம் நிதானத்தோடு பார்த்தார் மதுரம். அதுதான் சந்தர்ப்பம் என்று கிருஷ்ணன் தொடர்ந்தார் இப்படி:
“ஆனால் பார் மதுரம்… நான் ஆயிரம் பொய்யா சொன்னேன்? எனக்குத் திருமணம் ஆகவில்லை என்கிற ஒரேயொரு பொய்யைத்தானே சொன்னேன்?”
அதன்பிறகு கொஞ்சம் ஊடலும், கொஞ்சம் சமாதானமுமாகப் பயணம் தொடர்ந்தது… ரயில் பயணத்தோடு அவர்கள் வாழ்க்கைப் பயணமும்தான்.
அந்த நாளில் மனைவி இருக்கிறபோதே ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது என்பது அத்தனை முரண்பாட்டிற்குரிய செயலாக வழக்கத்திற்கு வரவில்லை. அத்துடன், கிருஷ்ணனின் நற்குணங்களும், பரந்த அறிவும் மதுரத்தைச் சமாதானப்படுத்தப் போதுமான காரணிகளாக இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
1936 ல் கிருஷ்ணன் நடித்த ‘சந்திரகாந்தா’ – என்ற படத்தையும் ராஜா சாண்டோதான் இயக்கினார். அது ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய நாவல். இதில் நாயகனாக அறிமுகமானார் பி.யூ. சின்னப்பா. அப்போது அவரது பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமி என்றுதான் இருந்திருக்கிறது. படம் முழுக்க காளி என்.ரத்தினம் தன் முழு திறனையும் காட்டி நடித்திருந்தார். கலைவாணருக்குச் சிறிய பாத்திரம்தான். முனியன் எனும் முடிதிருத்தும் தொழிலாளியாக அவர் நடித்தார். அவருக்கு இணையாக பி.சுசீலா என்னும் நடிகை நடித்திருந்தார்.
என்.எஸ். கிருஷ்ணனும் துவக்க காலத்தில் சாதாரணமான கதா பாத்திரங்களில், பொருளற்ற நகைச்சுவைக் காட்சிகளில்தான் நடித்துவந்தார். தனக்கென தனியானதொரு பாணியை அவர் கைக்கொண்டு, நகைச்சுவைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக மற்ற கலைஞர்கள்போலவே அவருக்கும் வாய்ப்புகள் வந்தன. கிடைத்த வாய்ப்புகளை அவர் ஏற்பதாகவும் இருந்தது.
இத்தனைக்கும் தனது முதல் படத்திலேயே, எல்லிஸ் ஆர். டங்கன் எனும் இமாலய இயக்குநரிடமே குரலெழுப்பி சொந்தக் கற்பனைக்கு உரிமை பெற்றவரான கிருஷ்ணனின் நிலைமையே இப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் வெகு விரைவிலேயே நிலைமை மாறியது என்பதும் உண்மை.
மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்த பக்த துளசிதாஸ் படத்தில் கிருஷ்ணனுக்கு பெருமாள் கோவில் அர்ச்சகர் வேடம். நாயகன் துளசிதாசாக எம்.கே. ராதா நடித்தார். படத்தில் தாசி ஜமுனாபாய் மீது துளசிதாசுக்கும், அர்ச்சகருக்கும் மோகம். கிருஷ்ணனுக்கு இணையாக கே.எஸ். அங்கமுத்து நடித்தார். இந்தப் படத்தில் டி.ஏ. மதுரத்துக்கு மகாலட்சுமி வேடம். 1937 ல் உருவானது இந்த பக்த துளசிதாஸ்.
இதே ஆண்டுதான் தியாகராஜ பாகவதர் சிந்தாமணி மற்றும் அம்பிகாபதி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். திருச்சிராப்பள்ளியில் குடியிருந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியின் மூத்த மகன்தான் தியாகராஜன். தங்களது பரம்பரைத் தொழிலான நகைப்பட்டறை வேலையிலும் நாட்டமில்லாமல், படிப்பிலும் ஆர்வமில்லாமல் சிறுவயதிலேயே இசையின்மீதும், நாடகத்தின்மீதும் பெருவிருப்பம் கொண்ட அவர் முறையான சங்கீதப் பயிற்சி பெற்று மிகச் சிறந்த பாடகராக வலம்வந்தார்.
1934 ஆம் ஆண்டில் பவளக்கொடி படம்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்த முதல் படம். அதில் அவருக்கு அர்ச்சுனன் வேடம். படத்தின் நாயகி பவளக்கொடியாக நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமி. படத்தை இயக்கியவர் அந்நாளைய புதுமை இயக்குநர் கே. சுப்ரமணியம்.
நகைச்சுவையில் தனக்கென ஒரு தனித்த புகழினைப் பெற்றிருந்த என்.எஸ். கிருஷ்ணனைத் தனது அம்பிகாபதியில் நடிக்கவைத்தார் பாகவதர். நாயகன் அம்பிகாபதியின் தோழன் கண்ணனாக கிருஷ்ணனும், நாயகி அமராவதியின் தோழிகளுள் ஒருவராக மதுரமும் நடித்தார்கள். ஆனால் இருவரும் தனித்தனியாகவே நடித்தார்கள். இந்தப் படத்தில் மதுரத்தின் நடிப்புத் திறனைப் பார்த்து வியந்த கிருஷ்ணன் இனி படங்களில் மதுரமே தனக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.
(கலைப் பயணம் தொடரும்)
1 Comment
சிறப்பான பதிவு.