வரலாற்றில் இன்று – 16.10.2020 உலக உணவு தினம்
உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மயக்கவியல் தினம்
1847ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதன்முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக மயக்கவியல் தினமாக (உலக அனஸ்தீஸியா தினம் (அ) ஈதர் தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் இவரின் நினைவு தினம்……!!
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.
பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார்.
ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு கட்டபொம்மனை வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.
அந்த சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.
இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர்மீது விசாரணை நடத்தப்பட்டது. பல நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழும் இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
முக்கிய நிகழ்வுகள்
1905ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காளப் பிரிவு இடம்பெற்றது.
1974ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்தார்.