பட்டுக்கோட்டை பிரபாகர் | இன்று பிறந்தநாள்…
‘கண்டேன் காதலை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காக்கிச் சட்டை’, ‘காப்பான்’ என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும், இவரது அடையாளம் க்ரைம் நாவல்கள்தாம்.
முதல் சிறுகதை ‘அந்த மூன்று நாட்கள்’ ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில் வெளியானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது போல, தந்தையின் ஆலோசனைக்கிணங்க ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ ஆனார். எஸ்.ஏ.பி., சாவி எனப் பலரும் ஊக்குவிக்கவே சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். மாலன் ஆசிரியராக இருந்த ‘திசைகள்’ இதழின் துணையாசிரியராகச் சாவி இவரை நியமித்தார்.
அதில் இவர் எழுதிய ‘ஒரு வானம்: பல பறவைகள்’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் நாவல் ‘அங்கே இங்கே எங்கே?’ சாவி நடத்திய மோனாவில் வெளியானது. அப்போது துப்பறியும் நாவல்களுக்கு வரவேற்பு இருந்ததால் அவற்றில் கவனம் செலுத்தினார். பரத்-சுசீலா கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி உலவ விட்டார். பரத்தின் துப்பறியும் திறனும், சுசீலாவின் இளமைக் குறும்புகளும் (பனியன் வாசகங்களும்) வாசகர்களைக் கவர்ந்தன. நல்ல வரவேற்பைப் பெற்றன.
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம்.
1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய ‘தொட்டால் தொடரும்’ ,’ கனவுகள் இலவசம்’ ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை.
அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள், தொடர் கதைகள், தொலைக் காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்களின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர்.
அவருடைய நாவல்களில் முக்கிய விஷயம், அதே கொலை, துப்பறிதல், சுபம் கதைகளில்கூட, ஏதாவது புதுசாக முயன்றுகொண்டிருப்பார், வர்ணனைகளில் புதுமை செய்வார், கதாநாயகியின் பனியன் வாசகங்களில் குறும்பு காட்டுவார், வெறும் வசனங்களிலேயே முழுக் கதையையும் எழுதுவார், நகைச்சுவை பொங்க மாத நாவல் எழுதுவார், இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். அதற்காகவே அவருடைய புத்தகங்களை மறுபதிப்பில்கூட வாங்கிப் படிக்கலாம் என்று தோன்றும்.
நாவல்களைப் பொறுத்தவரையில் முதல் அத்தியாயம் ஓர் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற விதமாக, ரசனையாகச் செல்லும். இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கிய கதைக்குள் நுழைவார். சில வர்ணனைகளைப் படித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அந்த வர்ணனைகளை மீண்டும் மனசுக்குள் காட்சியாக்கி ஓட்டிப் பார்த்து, அந்த ரசனையில் திளைப்பது ஒரு தனி சுவை. இதனால், அவரது நாவலைப் படித்து முடிக்க ரொம்ப நேரமாகிவிடும். ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்று தோன்றாது. அனுபவித்து அனுபவித்துப் படிக்க வேண்டும்.
இயக்குநர் கே. பாக்யராஜுடன் ஏற்பட்ட அறிமுகமும் நட்பும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் வாழ்வில் திருப்பு முனையானது. பாக்யராஜின் உதவியாளராகச் சேர்ந்து திரைக்கதை நுணுக்கங்களையும், திரைப்பட அனுபவங்களையும் கற்றுக் கொண்டார்.
சின்னத்திரைத் தொடர்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. சென்னைத் தொலைக்காட்சியில் இவரது நாடகங்கள் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றன. ‘பரமபதம்’, ‘சத்தியம்’, ‘கோபுரம்’, ‘ஜெயிப்பது நிஜம்’, ‘பரத் சுசீலா’ எனப் பல சீரியல்களுக்கு வசனம் எழுதினார். பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’, ரேவதியின் ‘கதை கதையாம் காரணமாம்’ போன்ற தொடர்களிலும் இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் குறுந்தொடர்களாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியிருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘மரம்’ சிறுகதையும், ‘கனவுகள் இலவசம்’ நாவலும் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதமியின் பொன்விழா ஆண்டை ஒட்டி வெளியான மாற்றுமொழிச் சிறுகதைகளில் இவரது ‘இன்னொரு தாய்’ சிறுகதை ஆங்கிலத்தில் வெளியாகிச் சிறப்புப் பரிசை வென்றது. ஊஞ்சல் என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கும் பிரபாகர் தன் மகள்கள் ஸ்வர்ண ரம்யா, ஸ்வர்ணப் ப்ரியா பெயரில் ரம்யா ப்ரியா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மனைவி சாந்தியுடன் சென்னையில் வசித்து வரும் இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் கோலோச்சி வருகிறார்.
1980களில் இவரது கதைகள் தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு. அதை தாண்டி குற்றப் பின்னணி யில் எழுதப்படும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அதை படிப்பதற்கென்றே நிறைய நேரங்களில் கிடைப்பதை ஒதுக்கி வைத்து அதை படிப்பது இன்னும் ஒரு இனிய அனுபவமாகவே கருதப்பட்டது.
90களின் குழந்தைகளுக்கு தெரியும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பது.
அவருக்கு இன்று பிறந்தநாள்.
மறக்கமுடியாத உங்கள் நாவல்கள் எங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை அவ்வப்பொழுது நினைத்து பார்க்க வைத்து இன்றும் உங்களுடைய கதைகளைப் படிக்கும்போது அந்த நினைவுகள் எங்களோடு சுற்றி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்திய தங்களுக்கு…
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்