வரலாற்றில் இன்று – 04.07.2020 குல்சாரிலால் நந்தா
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார்.
இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.
இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞருமான இவர் 1998ஆம் ஆண்டு மறைந்தார்.
கரிபால்டி
நவீன இத்தாலியின் தந்தையான ஜுஸபே கரிபால்டி (Giuseppe Garibaldi) 1807ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பிரான்ஸின் நைஸ் நகரில் பிறந்தார்.
ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கும் இயக்கத்தில் இணைந்து போராடினார். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படையின் புகழ், உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன.
இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர் ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. இவர் ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் ‘ஹீரோ ஆஃப் டூ வேர்ல்ட்ஸ்’ (Hero of the Two Worlds) என்று போற்றப்பட்டார்.
அசாதாரண ராணுவத்திறன், வீரம், முடிவெடுக்கும் ஆற்றல், செயல்திட்டம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற கரிபால்டி 1882ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரான சுவாமி விவேகானந்தர் மறைந்தார்.
அமெரிக்காவின் சுதந்திர தினம் : 1776ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ஆம் தேதி ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து அமெரிக்கா விடுதலை அடைந்தது.
1934ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி ரேடியத்தை கண்டுபிடித்த மேரி கியூரி மறைந்தார்.