வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்
கடந்த 40 நாட்களாக திருநங்கைகள் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூக இடைவெளி பற்றியும், முகக்கவசம் அணிவது, உடல்தூய்மை மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு அளித்துவருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பிபிசி தமிழிடம் பேசிய திருநங்கை சுதா தண்டையார்பேட்டையில் வீதிநாடகம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
”தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறோம். மாநகராட்சி அலுவலர் தெர்மல் ஸ்கிரீனிங் செய்த பின்னர், நாங்கள் மக்களிடம் பிற விவரங்களை பதிவு செய்வோம். ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் எங்களிடம் வெளிப்படையாக பேசுகின்றனர். ஒரு வீட்டில் ஒரு நபருக்கு பாதிப்பு இருந்தால், மற்றவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்ளவேண்டும் என எடுத்துரைக்கிறோம்,” என்றார் சுதா.