வரலாற்றில் இன்று – 26.06.2020 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டுமுதல் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச ஆதரவு தினம்
சர்வதேச சட்டத்தின்படி சித்திரவதை என்பது ஒரு சமூகக்குற்றம் என ஐ.நா.சபை கூறுகிறது. சித்திரவதை மற்றும் துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டமும் உள்ளது.
சித்திரவதை என்பது வீடுகளில் தொடங்கி, சிறைச்சாலை மற்றும் போர் கைதிகள்வரை தொடர்கிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக ஐ.நா.சபை ஜூன் 26ஆம் தேதியை சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் (அ) சர்வதேச ஆதரவு தினமாக அறிவித்தது.
ம.பொ.சிவஞானம்
விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார்.
வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.
இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1892ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் பெர்ல் பக் பிறந்தார்.
1827ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நூல் நூற்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த சாமுவேல் கிராம்டன் மறைந்தார்.
1945ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பட்டயம் (Charter of the United Nations) சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்டது.