வரலாற்றில் இன்று – 25.06.2020 | உலக வெண்புள்ளி தினம்
நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாலுமிகள் தினம்
உலக வர்த்தகம் 90 சதவீதம் கடல் வழியாகவே நடத்தப்படுகிறது. மாலுமிகள் ஆதிகாலந்தொட்டு உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். அதனால், உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கௌரவிக்கவும் சர்வதேச கடல் சார் அமைப்பு 2010ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூன் 25ஆம் தேதியை மாலுமிகள் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
வி.பி.சிங்
இந்தியாவின் முன்னாள் பிரதமரான விஷ்வநாத் பிரதாப் சிங் 1931ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். மேலும், 1971ஆம் ஆண்டு முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். பிறகு, 1980ஆம் ஆண்டு இந்திரா காந்தி இவரை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார்.
இவர் டிசம்பர் 2, 1989-லிருந்து நவம்பர் 10, 1990 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்த இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள் மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1900ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்தில் பிறந்தார்.
1998ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி விண்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது.
2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கல் ஜாக்சன் மறைந்தார்.