வரலாற்றில் இன்று – 14.06.2020 – உலக இரத்த தான தினம்
ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்ததான தினம் (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாளையும், இரத்ததானம் வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இரத்ததானம் செய்வோரை ஊக்குவிக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைகின்றது.
கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner)1868ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.
இவர் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்தார். இர்வின் பாப்பருடன் இவர் இணைந்து 1909ஆம் ஆண்டு
போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்து போலியோ வைரஸ்-ஐ (Polio Virus) கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1926ஆம் ஆண்டு அரோன்சன் பரிசு (Aronson Prize) கிடைத்தது.
1927ஆம் ஆண்டு பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உயிரியல், உடற்கூறியல், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1943ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1444ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கணிதவியலாளர் மற்றும் வானியலாளருமான நீலகண்ட சோமயாஜி பிறந்தார்.
1928ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கியூபாவின் விடுதலைக்காக போராடிய சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்தார்.