வரலாற்றில் இன்று – 22.05.2020 – ரைட் சகோதரர்கள்

 வரலாற்றில் இன்று – 22.05.2020 – ரைட் சகோதரர்கள்

ஆலிவர் ரைட் தனது படிப்பை இடையில் நிறுத்தி 1889 இல் தனது சகோதரர் வில்பரின் உதவியுடன் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பிறகு இருவரும் இணைந்து ஒரு வார இதழைத் தொடங்கினார்கள். ‘மேற்கத்திய செய்திகள்’ (West Side News) என்ற பெயரில் வெளிவந்த இவ்விதழுக்கு ஆர்வில் வெளியிடுவோராகவும் வில்பர் ஆசிரியராகவும் இருந்தனர். 1890 இவ்விதழை நாளிதழாக மாற்றி ‘தி ஈவினிங் ஐடெம்’ என்ற பெயரில் வெளியிட்டனர்.

நான்கு மாதங்கள் வெளிவந்த இவ்விதழ் பிறகு நின்று போனது. அதன்பிறகு வணிக நோக்கிலான அச்சகமாக மாறியது. தனது நன்பர்கள் மற்றும் தன்னுடன் பயின்ற மாணாக்கர்களை தங்களது அச்சகத்தின் வாடிக்கையாளர்களாகப் பெற்றனர். அவர்களில் புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரும் எழுத்தாளருமான ‘பால் லாரன்சு டன்பர்’ என்பவரும் ஒருவர். அதன் பிறகு டன்பர் ஆசிரியராகப் பணியாற்றிய ‘டேட்டன் டாட்லெர்'(Dayton Tattler) என்ற வார இதழ் ஒன்றை நீண்ட நாட்கள் அச்சிடட்டனர்.

அச்சுத்தொழில் நொடிந்த நிலையில் 1892 இல் ஒரு மிதிவண்டி பழுது பார்த்தல் மற்றும் விற்பனை நிலையத்தைத் தொடங்கினர்.இங்கு பழைய சைக்கிள்களைப் பரிமாற்றவும் செய்தனர். இது பின்னர் ரைட் மிதிவண்டி நிறுவனமாக மாறியது. 1896 இல் இந்நிறுவனம் தனது மிதிவண்டிகளை சொந்தமாகத் தயாரிக்கவும் செய்தது.

இதிலிருந்து அவர்களது பேராவலாகிய வானப் பயன ஆய்வுக்குத் தேவையான பணம் கிடைத்தது. 1890 இல் அவர்கள் ஒரு முறை நாளிதழ் செய்தி ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒட்டோ லிலியந்தால் என்பவர் தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர். இதே ஆண்டில் அக்டேவ் சான்யூட், சாமுவேல் பி. லாங்லீ ஆகியோர் கிளைடர் விமானப் பயணம் பற்றிய முயற்சிகளையும் ஆர்வமுடன் படித்தனர்.

பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது ஒட்டோ லிலியந்தால் ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.

சிமித்சோனியன் என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் சாமுவேல் பி. லாங்க்லீ ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.

ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர். 1899 இல் அவர்களே வானில் பறப்பது பற்றிய வேலைகளைத் தொடங்கினர். 4 ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது.

இதற்குத் தேவையான எந்திர திறன்களை அவர்கள் தங்களுடைய அச்சுக்கூடம், மிதிவண்டி, மோட்டார்கள், மற்ற இயந்திரங்கள் மூலம் பெற்றனர். பறக்கும் எந்திரம் போன்ற ஒரு நிலையற்ற வாகனத்தைப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தி சமநிலையில் நிறுத்தலாம் என்ற நம்பிக்கை மிதிவண்டியுடன் வேலை செய்யும்போது அவர்களுக்கு ஏற்பட்டது. 1900 முதல் 1903 வரை தங்களின் முதல் பறக்கும் விமானம் வரை, அவர்கள் பல மிதவை வானூர்திகளைச் சோதனை செய்தனர். அதன்மூலம் தங்களின் விமானிக்கான திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். அவர்களுடைய மிதிவண்டி கடையில் ஊழியரான ‘கியார்கு கெய்லே’ என்பவரும் அவர்களுடைய முதல் வானூர்தியை அமைப்பதில் அவர்களுடன் இணைந்து முக்கிய பங்குவகித்தார்.

வானில் பல ஆண்டுகளாய்ப் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்ற போது, ரைட் சகோதரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின் வெற்றி பெற்றதற்கு மூன்று தொழில்நுட்பங்கள் உதவின. முதல் முதலாக இறக்கை ஊர்திப் பறப்பியல் பயிற்சி முறையில் ‘முன்னுந்தல்’ (Thrust), ‘மேலெழுச்சி'(Lift), ‘திசைதிருப்பி'(Rudder) எனப்படும் ‘முப்புற உந்தல் கட்டுப்பாடு ‘என்ற நுணுக்கத்தை ரைட் சகோதரர்கள் கையாண்டனர்.

ரைட் சகோதரர்கள். இரண்டாவது ஊர்திக்கு முன்னுந்தல் ஆற்றலைத் தருவதற்கு எண்ணெயிலியங்கும் எரிபொருள் இயந்திரத்தைப் புகுத்தி அதிக வேகத்தை அளித்தனர். மூன்றாவதாக 1900-1903 ஆண்டுகளில் ஆர்வில்ரைட், வில்பர்ரைட் இருவரும் [Wind Tunnel] ஒன்றைத் தயாரித்து 200 விதமான இறக்கைகளைச் சோதித்துத் தகுதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர்.

வாஷிங்டன் டி. சி யில் உள்ள தேசிய வானாய்வு அருங்காட்சியகக் கூடத்தில்(National Air and Space Museum in Washington, D.C)வைக்கப்பட்டுள்ள 1903 இல் ரைட் சகோதரர்கள் பறந்த விமானம்.


அமெரிக்கா வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina]1903 டிசம்பர் 17 ஆம் தேதி ஆர்வில் ரைட் முதன் முதலாக எஞ்சின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் பூமிக்கு மேல் பறந்தார். அடுத்து வில்பரும், ஆர்விலும் அன்றைய தினம் மாறி மாறி நான்கு தடவைகள், பறந்து காட்டி, ஊர்தியின் பறப்பியல் திறனை நிரூபித்தார்கள். வில்பர் ரைட் முற்பட்ட மூன்றாவது இறுதி முயற்சியில், ஆர்வில் ரைட் 12 குதிரைத் திறன் ஆற்றல் கொண்ட, 600 பவுண்டு எடை கொண்டிருந்த, பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஆகாயத்தில் மணிக்கு 30 மைல் வேகத்தில் 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்து காட்டிச் சரித்திரப் புகழடைந்தனர். 1901 ஆம் ஆண்டில் மார்க்கோனி ரேடியோத் தொடர்பை முதலில் நிரூபித்துக் காட்டியபின், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இரண்டாவது சாதனையாக 1903 இல் ரைட் சகோதரரின் வான ஊர்திப் பறப்பு கருதப்படுகிறது.

பின்னர் 1906ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

உலக பல்லுயிர் பெருக்க தினம்

உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலக கோத் தினம்

உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. கோத் பிஜேக்கன் மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள்.

பின்பு, ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்தனர். இசை, பேசன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இராஜா ராம் மோகன் ராய்

இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய இராஜா ராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார்.

இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார்.

இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத்திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார்.

தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை இராஜா ராம் மோகன் ராய் 1833ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

இன்று இலங்கை குடியரசு தினம் : பிரித்தானிய ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...