மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பிரபல நடிகர் கைது – பாண்டியன் சுந்தரம் – மன்னை

 மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பிரபல நடிகர் கைது – பாண்டியன் சுந்தரம் – மன்னை

‘இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது.

மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்’ என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது.

யார் அந்தப் பிரபலமான நடிகர்?

அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்தப் பிரபல நடிகர்.

புகழேணியின் உச்சியில் இருந்த சின்னப்பா தான் சம்பாதித்த காசில் புதுக்கோட்டை நகரமெங்கும் வீடுகளாக வாங்கிக் குவித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசர் இனிமேல் சின்னப்பா புதுக்கோட்டையில் வீடு எதுவும் வாங்க கூடாது என்று கட்டளை பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.

அவ்வளவு வளமையில் வாழ்ந்தவர் பி யு சின்னப்பா!

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய ‘சந்திரகாந்தா’ படத்தில் இணை கதாநாயகனாக சினிமா உலகத்திற்குள் நுழைந்தார்.

1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ என்ற படம் சூப்பர் ஹிட்.

இதனால் சின்னப்பாவும் சூப்பர் ஸ்டார் ஆனார்.

சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்தே மதுப் பழக்கம் இருந்திருக்கிறது.

பிறகு அவரது புகழ் வளர வளர மதுப் பழக்கமும் வளர்ந்துவிட்டது.

முடிவு, புதுக்கோட்டையில் தனது நண்பர்களுடன் ‘மணமகள்’ படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பி.யூ.சின்னப்பா அன்றிரவே சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று ரத்தம், ரத்தமாக வாந்தியெடுத்து மயக்கமடைந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர், கையை விரித்து விட்டார்.

ஆமாம், மிதமிஞ்சிய குடியால் பி.யூ.சின்னப்பா இறந்து போனார்.

அப்போது அவரது வயது 36 தான்!

இன்னும் நீண்ட காலம் திரைப்படத் துறையில் கோலோச்சி இருக்கவேண்டிய பி யு சின்னப்பா உயிரைக் கொண்டு போனது மதுக்குடியே!

1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.

இதை நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் டி.என். ராஜரத்தினம் பிள்ளை.

இதைக் கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார்.

இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை நேரு வாசித்தார்.

அப்போது அவரிடம் நேரு “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “ஊரில் திருடர் பயம் அதிகமாக இருக்கிறது.எனவே கரண்ட் வேண்டும்” என்று கேட்டார் ராஜரத்தினம் பிள்ளை.

இதைச் சொல்லிவிட்டு டெல்லியிலிருந்து ஊர் திரும்பிய ராஜரத்தினம் பிள்ளையை ஊரில் இருந்த மின்சார விளக்குகள் கண்சிமிட்டி வரவேற்றன!

ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத ஜில்லா கலெக்டரிடம் ராஜரத்தினம் சொன்னாராம்.

”ஏம்ப்பா… நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது.

நீ பெரியவனா, நான் பெரியவனா?”

ஒரு சமயம் கலெக்டர் என்ன, மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார்.

கச்சேரி முடிந்ததும் கைதட்டிப் பாராட்டிய மகாராஜா, ”கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு” என்றாராம்.

உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ”மேளக்காரரே… பணத்தை வாங்கும்” என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ”நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி” என்று சொல்லியிருக்கிறார்

அப்புறம் மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்!

1936இல் முதல் பேசும் தமிழ்ப் படமான டி.பி.இராஜலட்சுமி இயக்கி நடித்த ‘மிஸ் கமலா’வில் கடைசியில் வரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசிப்பார்.

இதுதான் சினிமாவுக்கு அவர் அறிமுகமான விதம்.

பிறகு 1940-இல் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘காளமேகம்’ படத்தில் டி.என்.இராஜரத்தினம் கதாநாயகனாக தோன்றி நடித்தார்.

இப்படி புகழ் பெற்றிருந்த டி.என்.இராஜரத்தினம் ஒரு மணி நேரத்தில் ஒரு கேஸ் அதாவது 12 பாட்டில்கள் மதுவை அருந்தும் அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தார்.

1930-லிருந்து 1950-வரை அவர் சம்பாதித்த தொகை 5 கோடி.

முதலில் கார் வாங்கிய நாதஸ்வர வித்வான்.

ஆனால் மிதமிஞ்சிய குடியினால் 1956 டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி மாரடைப்பால் இறந்து போனார்.

தன் வாழ்நாளில் 5 கோடி ரூபாய் சம்பாதித்த டி.என்.இராஜரத்தினம் இறந்தபோது அவரது ஈமச்சடங்கு செலவை செய்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்!

இந்திய விடுதலைப் போரில் மதுவிற்கு எதிரான போராட்டத்தை காந்தியார் முன்னெடுத்தார்.

அவரின் மதுவிலக்கு கொள்கையில் தீவிரப்பற்று கொண்டவராக விளங்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன்

மதுவிலக்கு கொள்கையை தான் நேசித்த கலைத்துறையிலும் புகுத்த விரும்பினார்.

1930களில் ‘தேசபக்தி’ எனும் நாடகம் மூலம் மதுவின் தீமைகளை எங்கும் எடுத்துரைத்தார்

1938-ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி மதுவிலக்கைக் கொண்டு வந்த போதிலும், அதனை சென்னை மாகாணம் முழுவதும் கொண்டு வந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரே. 1948ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று முழு மதுவிலக்குக் கொள்கை நடைமுறைக்கு வந்தது.

அப்போதே முதல்வர் ஓமந்தூரர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதுவிலக்கு குறித்து நகைச்சுவை ததும்ப பாடல்களைப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்.எஸ்.கிருஷ்ணன்

அண்ணாவின் படைப்பில் உருவான ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் மதுவிலக்கு கொள்கையை மதுரம் அவர்களோடு நகைச்சுவைப் பாடல் மூலமாக வெளிப்படுத்திய போது, அப்பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவின.

கணவன்மார்கள் மது குடித்து குடித்து குடும்பத்தைச் சீரழித்த கதையை மதுரம் விளக்கும் பாடல் வரிகள் இதோ:

குடி கெடுத்த குடியொழிஞ்சது
அடிதடி சண்டையதுங் கொறஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தி யறிஞ்சது -எங்க நாட்டிலே
அக்டோபர் ரெண்டுக்கு மேலே-
தாலிக் கயிறு தனியாயிருக்கும். தங்கமிருக்காது- அதிலே தங்கமிருக்காது
தண்ணி குடிக்கத் தகரக் கொவளை சொம்புமிருக்காது- வீட்டிலே சொம்புமிருக்காது!
பாலு வாங்கக் கொழந்தப் பசிக்குப் பணமிருக்காது -கையிலே பணமிருக்காது! பாழுங்கள்ளைக் குடிப்பது மட்டும் நாளுந்தப்பாது- எந்த நாளுந் தப்பாது
கூலிக்காசில் சோளம் வாங்கிக் கூழுகாச்சி வச்சிருப்பா!
ஆள சந்த ஆம்பிளைதான் அதையும் வித்துக் குடிச்சிடுவான் கடைக்குப் போவான்…. கள்ளக் குடிப்பான் காரியமில்லாமே சண்டைக்குப் போவான் வடைய ரெண்டை வாங்கிக்குவான் வழிநெடுகப் பேசிக்குக்குவான்
வந்து கதவைத் தட்டுவான்
வாயில் வந்ததைத் திட்டுவான்!
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சக்காரியென்று ஒதப்பான்; அவன் வாரிசுக்காகக் கருவைத் தாங்கும் வயித்திலே யெட்டி மிதிப்பான்
-அப்பப்பா இந்தக் கள்ளுக்குடியை நம்ம நாட்டை விட்டு ஒழிச்ச அந்த நல்ல மனுசன் காலுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு!

மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்ட கணவனாக என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் வரிகள் இதோ:

மனுசனாகிப் போனேன்- இப்ப நான் மனுசனாகிப் போனேன்
பனைமரப் பாலு பட்டை பிராந்தி
பக்கம் வந்தா எடுக்குறேன் வாந்தி-
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே
எங்கண்ணுக்குள்ள இரண்டாளாகத் தெரிஞ்சுது பெண்ணே சுருண்டு சுருண்டு நான் சும்மா படுப்பேன்
சுதியை விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன் வரண்ட காரவடை வாத்து முட்டை கருவாட்டைத் தின்னவாய் நாத்தம் நீங்கி நான்
மனுசனாகிப் போனேன்!

மதுவிலக்குப் பிரச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுத்த என்.எஸ்.கிருஷ்ணன், அதிக மது அருந்தி வந்ததன் காரணமாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை, குலை வீக்கம் நோயினால் 1957 ஆகஸ்ட் 30-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இறந்து போனார்.

அடுத்ததாக நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி.

அன்றைய காலத்தில் புகழ் பெற்ற நாடக சபாக்களில் ஒன்றான மங்கள கான சபா நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதை என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபா என்று பெயர் மாற்றி கே.ஆர்.ராமசாமியிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்.

கே.ஆர்.இராமசாமி குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், கம்பெனி இப்போது பெருத்த நஷ்டத்தில் தள்ளாடத் தொடங்கியது.

இந்த நாடக சபா மூலமாகத்தான் அண்ணாவின் ‘வேலைக்காரி’ நாடகம் பிரபலமடைந்தது. இந்த நாடக சபாவிற்காக காஞ்சிபுரத்தில் ‘திராவிட நாடு’ ஏட்டை நடத்தி வந்த அண்ணாவிடம் ஒரு நாடகம் எழுதித் தருமாறு கே.ஆர்.இராமசாமி வேண்டினார்.

அண்ணாவைச் சந்திக்கும்போது கூட கே.ஆர்.இராசாமி போதையிலேயே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து அண்ணா அப்போதே கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

பிறகு அண்ணா ‘ஓர் இரவு’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார்.

கே.ஆர்.இராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் சிபாரிசில் ‘சிவசக்தி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

பிறகு 1969-இல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த ‘நம் நாடு’ படம் வரையிலும் நடித்துப் பெரும் புகழைப் பெற்று வந்தார்.

அடுத்த இரண்டு வருடத்திலேயே அதாவது 1971 செப்டம்பர் மாதத்தில் தனது அதிகப்பட்ச குடியினால் இறந்து போனார்.

சரி அடுத்த நபர் யார்..? சாவித்திரி..

தமிழில்-85, தெலுங்கில்-92, இந்தியில்-3, கன்னடத்தில்-1, மலையாளத்தில்-1. இதெல்லாம் அவர் நடித்தப் படங்கள். அந்தக்காலத்திலேயே கால்களில் தங்கக் கொலுசு அணிந்து இருந்த நடிகையாக இவர் இருந்திருக்கிறார்.

இவர் நடிகர் ஜெமினிகணேசனின் இரண்டாவது மனைவி.

1951-இல் நடிகையான சாவித்திரி தனது சொந்த நிறுவனமான ஸ்ரீசாவித்திரி புரொடெக்ஷன்ஸ் சார்பில் ‘குழந்தை உள்ளம்’ என்ற படம் எடுத்தார். ஜெமினிகணேசன் கதாநாயகன். சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகள். படம் படு தோல்வி.

இரண்டாவதாக சிவாஜியை வைத்து ‘பிராப்தம்’ (1971) என்ற படத்தைத் தயாரித்தார்.

இந்தப் படமும் படு தோல்வி.

இதனால் தனது சொத்துக்களை பெரியளவிற்குத் தொலைத்தார்.

துக்கம் தாளாமல் எப்போதும் மதுவுடனேயே இருந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி.

வாழ்வின் ஒட்டு மொத்த நிம்மதியும் இழந்த சாவித்திரி, 1981 டிசம்பர் 26 நள்ளிரவில் இறந்து போனார்.

தனது உழைப்பால் வெற்றி முகத்தில் இருந்த சமயத்தில்தான் ‘மாடி வீட்டு ஏழை’ சொந்தப் படம் எடுத்து அதில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து, கடைசியில் குடியில் மூழ்கி கல்லீரல் வீங்கி இறந்து போனார் நடிகர் சந்திரபாபு.

குடியினால் அழிந்த சினிமா பிரபலங்கள் இவர்கள் மட்டுமல்ல, கம்பதாசன், கவியரசு கண்ணதாசன் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். குடி காரணமாக உடல் நலத்தையும் தங்கள் செல்வங்களையும் இழந்தவர்கள் பட்டியல் நீளமானது.

‘குடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்’என்ற தலைப்பில் அறந்தை நாராயணன் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

கலையுலகைச் சார்ந்தவர்கள் குடியினால் சீரழிந்த கதைகள் இதில் விரவிக் கிடக்கிறது.

“குடிப்பழக்கம் உடலுக்குக் கேடானது என்பதை அனுபவபூர்வமாகவே நான் உணர்ந்திருக்கிறேன். ஆம்! நான் குடிகாரனாக இருந்திருக்கிறேன்.

மொத்தத்தில் விளைவுகள் என்ன தெரியுமா?

கல்லீரல் நோய்
குடலிறக்கம்
வயிறு வீக்கம்
நுரையீரல் புற்றுநோய்
இதயத்தில் இரத்த ஓட்டம் பாதிப்பு
மூளையில் மஞ்சள் காமாலை
வலிப்பு நோய்
தமிழ்நாடு மருத்துவமனையினர் கொடுத்த கெடு ‘இன்னும் இரண்டே இரண்டு ஆண்டுகள்’. அந்த இரண்டு ஆண்டுகளைக் கடந்து,..

இப்போது போனஸ் நாட்களில் இந்த நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இளைய தலைமுறையினருக்காக.
இந்தச் சமுதாயத்திற்காக நான் ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதி இந்த நூலை எழுதி முடித்திருக்கிறேன்.

இளைஞர்களே, மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாதீர்கள்!”

தனது நூலின் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிற அறந்தை நாராயணன்,

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...