நாகப்பட்டினம் பற்றிய வரலாறு
நாகையும்..நாகூரும் – வரலாற்றுக் காலம்
10,11 நூற்றாண்டு காலத்தில் நாகை.
நாகை இயற்கை எழில் கொஞ்சும் ஓர் நகராக இருந்துள்ளமை நமக்கு வரலாற்றுச் செய்திகள் வழி தெரியவருகிறது. நாகை நகரத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் அந்த சிறப்புக்களை எல்லாம் இழந்து நிற்பதைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். “பொன்னியின் செல்வன்” படித்தவர்களுக்கு நாகையின் சூடாமணி விகாரம் எனும் பௌத்த விகாரை நினைவிலே வருவதை தவிர்க்கவியலாது. இன்று நாகையின் நீதிமன்றம் இயங்கும் இடத்தில்தான் அந்நாளில் அந்த புகழ்பெற்ற சூடாமணி பெளத்த விஹாரம் வீற்றிருந்தது.
இப்போது காடம்பாடி என்று அழைக்கிறார்களே, அதன் பண்டைப் பெயர் காடவர் கோன் பாடி – அதுவே காடம்பாடியாக மருவியது. காடவர் என்றால் பல்லவர். பாடி என்றால் தற்காலிக கூடாரம். ஊரின் ஒதுக்குப்புறத்தில் படைவீரர்கள் தங்க கூடாரங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் அது. கண்ணுக்கெட்டிய தொலைவில் இலந்தை மரங்கள் நிறைந்த, திட்டுத் திட்டாய் காட்சியளிக்கும் மேட்டுப் பகுதி. “பதரிதிட்டா” என்று பாளி மொழியில் அழைக்கப் பட்ட பகுதி பின்னாளில் அவுரித்திடல் என்றானது. பதரிதிட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டுப் பகுதி என்று பொருள்.
நேர்த்திமிகு உட்கட்டமைப்பு கொண்ட நகரமாக நாகை ஒரு காலத்தில் விளங்கியது. அகன்று, பரந்த தேரோடும் வீதிகள்; தூண்டா விளக்கு மணி மாடங்கள்; அங்காடித் தெருக்கள்; ஆங்காங்கே தென்றல் தாலாட்டும் தோப்புகள்; நகரின் மேற்கிலும், வடக்கிலும் இருபுறமும் கலைநயமிக்க தோரண வாயில்கள். “மேலைக்கோட்டை வாயில்”, “வடக்கு கோட்டை வாயில்” அவற்றின் பெயர்களாக அந்நாளில் விளங்கியது.
பரண் அமைத்த வீடுகள்; உவலைக் கூரை அமைந்த பாடிவீடுகள், இலையும் தழையும் வேயப்பட்ட கூரை இல்லங்கள், இலைகளால் வேயப்பட்ட குரம்பை, மாட மாளிகைகள், மாட வீதிகள், செல்வம் கொழிக்கும் யவனர் மாளிகைகள், கொடிமர மேடைகள், வழிநெடுகிலும் சோழநாட்டு கொடிகள் அசைந்தாடும் கம்பங்கள், போரிட்டு மாண்ட மறவர்களின் நினைவாக நடுகற்கல்/ வீரகற்கள்
வணிகத்தின் பொருட்டு வந்திறங்கும் பன்னாட்டு வணிகப் பெருமக்கள், பலமொழி பேசும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர், பொற்கொல்லர், கன்னார்; தச்சர், பூவணிகர், ஓவியம் தீட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள், புலவர், பாணர், இசைவாணர், முத்துவேலை செய்பவர்கள்; பட்டாடை, பருத்திஆடை, கம்பளி ஆடை நெய்பவர்கள், வணிகர், நிலக்கிழார், நாழிகை கூறுவோர், மறையவர், அரண்மனை அலுவலர்கள், படை வீரர்கள் என அனைத்து தரப்பினரும் உலா வரும் வீதிகள் என நாகை ஓர் கடல் வாணிபம் சார் நகராக இருந்தது. முழுநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம். இரவிலும் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டு தூங்காத நகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
ஊரை ஒட்டினாற்போல் சற்றே தூரத்தில் கூடாரங்களால் நிறையப்பட்ட திறந்தவெளி பூஞ்சோலை. வெளிப்பாளையம் என்றழைக்கப்படும் இப்பகுதிதான் நாகையின் மையப்பகுதி. இங்குதான் போர் வீரர்களின் குடியிருப்புகள் இருந்தன. அனைத்து வகை நாவாய், மரக்கலங்களும் நாகைவழியே வந்துதான் பின்னர் கீழைநாடுகளுக்கு தங்கள் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தன. பண்டங்களை சுமந்துக்கொண்டு வரிசை வரிசையாய் வந்து நிற்கும் பொதிவண்டிகள் முதலியன நாகையை சுறுசுறுப்பு வணிக மையமாக செயல்பட வைத்தன.
தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன. பண்டைய புகார் நகரம் எப்படி மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரு பிரிவுகளாக இருந்ததோ அதே போன்று நாகூரும், நாகப்பட்டினமும் வடநாகை, தென்நாகை என்று இரண்டு பிரிவுகளாக இருந்தன.
வடநாகைக்கும் (நாகூர்) தென்நாகைக்கும் (நாகப்பட்டினம்) இடையே, ஊரின் குறுக்கே அமைந்திருந்த சிந்தாறு, தற்போது பார்ப்பனர்சேரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அக்காலத்தில் மறையவர் அகரம் அமைத்து (அக்ரகாரம்) வாழ்ந்தனர். பிறகு இது காலப்போக்கில் இது “பால்பண்ணைச்சேரி” ஆகி விட்டது. தற்போது “நாகூர்” எனப்படும் வடநாகை, நாகூரில் வெட்டாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இயற்கையாகவே துறைமுகமாக இயங்குவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்தது. நாகூர் வெட்டாறுக்கு அருகாமையிலிருக்கும் பகுதிகள் வர்த்தக சேமிப்பு கிடங்குகளாக செயல்பட்டன. பண்டக சாலை, கல்பண்டக சாலை என்று பெயர் தாங்கி நிற்கும் வீதிகள் அழிந்துப்போன வர்த்தகச் சுவடுகளின் எச்சங்களாக இன்றும் காட்சி தருகின்றன.
நாகூர் ஆண்டவர் நாகூர் வந்து சேருவதற்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் இப்பகுதியில் தழைத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழர்களை ‘சூலியா’ (சோழியன் அதாவது சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்திருக்கின்றனர். சீனப்பயணிகள்கூட ‘Chu-Li-Yen’ என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் முஸ்லீம்களை சோனகர் என்றும் அழைத்தனர். நாகூர் போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் உரோமானியர்கள் அரேபியர்கள் இவர்களின் வணிகத்தலமாக மட்டும் விளங்கவில்லை. சீனர்களின் வியாபார கேந்திரமாகவும் திகழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
தென்னிந்திய வரலாற்று ஏடுகளிலேயே “பகோடா” எனப்படும் சீனர்களின் புத்த ஆலயம் காணப்பட்ட ஒரே ஸ்தலம் நாகூர் மற்றும் நாகப்பட்டினம்தான்.
சீனப்பயணி யுவான் சுவாங் நாகூர் வந்துள்ளார். நாகூரைப் பற்றியச் சிறப்புகளை தன் பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவெனில் நூறு புத்த மடங்களும், பதினாறாயிரம் புத்தத் துறவிகளும் இப்பகுதியில் வசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதநல்லிணக்கம் என்பது வடநாகைக்கும் தென்நாகைக்கும் ஒன்றும் புதிதல்ல. பண்டு தொட்டு இவ்வூர் சைவ, வைணவ, சமண, பௌத்த இஸ்லாமிய சமயங்களின் சமத்துவ நகராகத் திகழ்ந்தது. இத்சிங், மார்க்கோபோலோ, இப்னு பதூதா, இரசீதுத்தீன் ஹுவான் சுவாங் மற்றும் மேற்கத்திய பயணிகளின் குறிப்புகளில் யாவும் நாகப்பட்டினத்தின் பெருமையை எடுத்துரைக்காத நூல்களே இல்லை எனலாம்.
10,11-ம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டில் ஆழமாக காலூன்றியிருந்த புத்தமதம் அடிச்சுவடே இல்லாமல் போனது. பிற்காலத்தில் நாகை மண்ணை ஆள வந்த மராத்திய மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆளாளுக்கு நாகையை போர்த்துகீசியகளிடமும், ஆலந்துக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், அடகுவைத்தும், ஏலம்விட்டும், குத்தகை விட்டும் “எடுப்பார் கைப்பிள்ளை” ஆக்கினர். பிறகு பெரும் வணிக நகரம் தனது இயல்பை இழந்து வணிகப் புழக்கடையாக மாறியது என்பதே வேதனை.