சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (23.04.2026) நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் வாக்குச் சாவடியை அறிவது எப்படி..?
* நீங்கள் வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி, உங்கள் பாகம் எண், வரிசை எண்ணை https://electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.net என்ற இணைய தளங்கள் மூலம் அறியலாம்.
* ECINET, Votershelpline, Sweetha செல்போன் ஆப் மூலமும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அவசியம்.
* வாக்குப்பதிவுக்கு செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் வழங்கியுள்ள போட்டோவுடன் கூடிய கணக்குப்புத்தகம், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள ஆவணங்களில் எதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துச் செல்லவும்.
கியூ ஆர் கோடு வசதி
* வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை உள்ளது. வாக்குச்சாவடிகளில் இதற்கென தனி அறை ஏற்படுத்தப்பட்டு, செல்போனுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. வாக்களித்து முடிந்தபின் டோக்கனை கொடுத்து செல்போனை திரும்பப் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* வாக்குப்பதிவு இயந்திரத்தில் முன்பு வேட்பாளர் போட்டோ, பெயர் அதற்கு எதிரே அவருக்கான சின்னம் இடம் பெற்றிருக்கும். இம்முறை வேட்பாளர் பெயர் அருகே அவரது கலர் போட்டோவும் இடம் பெற்றிருக்கும்.

* தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்க தபால் ஓட்டு வசதி உள்ளது. அதேபோல இந்த தேர்தலில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மின்வாரியம், போக்குவரத்துத்துறை, தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறைகளை சேர்ந்தவர்களும் தபால் வாக்களித்துள்ளனர்.
* வாக்களிக்க செல்வோருக்கு பூத் ஸ்லிப் என்ற வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கியூ ஆர் கோடு வசதி உள்ளது. இதை பயன்படுத்தி தங்கள் வாக்குச்சாவடி, பாகம் எண், வரிசை எண் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
* பூத் சிலிப் பெறாதவர்கள் பாகம் எண், வரிசை எண்ணை இணையதளங்கள் மூலம் அறிந்து கொண்டு, ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்கு செல்லலாம்.
