புற்றீசல் போன்று பல விருது வழங்குவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் இதோ பெருமைப் படத்தக்கதொரு விருது வழங்குவிழா.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் சென்னையை கலக்கிக் கொண்டிருந்த மாலைப் பொழுதில் சென்னை ராணி சீதை ஹாலில் குளு குளு அரங்கில் 15/4/2026 அன்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் நடந்தவை எல்லாம் அற்புதம், ஆனந்தம் கொண்டாட்டம்.

அது என்னஅப்படியொரு விழா..?
வேறொன்றும் இல்லை, Born 2 win சாதிக்கப் பிறந்தவர்கள்
அமைப்பினர் வருடா வருடம் நடத்திவரும் கோலாகலமான
‘திருநர்’ விருது வழங்கும் விழா.
இது அவர்களது 13 வது வருட சிறப்பு நிகழ்வு.
இந்த முறை விழாவிற்கு பல பிரபலங்களின் வருகையோடு, மாற்றுப் பாலினமல்லாதோர் பலரும் குடும்பத்தினருடன்வந்து கலந்து கொண்டது நல்லதொரு சமூக மாற்றத்தையும், அதற்காக உழைத்த நங்கை ஸ்வேதாவின் வெற்றியையும் வெளிப்படுத்தியது.

இது நாள் வரை அவர்களை ஒதுக்கியும்,கேவலப்படுத்தியும் வந்த சமூகம் இன்று நீங்களும் மனிதர்கள் தாம், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றுகூறத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது போற்றப்பட வேண்டிய நிகழ்வுதான்.
எவ்வளவோ விருதுகள் கொடுக்கப்படும் நிகழ்ச்சிகளை நாம் கண்டிருந்தாலும் இப்படி ஒரு வித்தியாசமான, இன்றைய சமூகத்திருக்குத் தேவையானதொரு விழாவாக இந்நிகழ்வு வெற்றிகரமாக நடந்திருப்பது மகிழ்ச்சிதரக் கூடியதாகும்.
இது, பிறந்தப் பிறப்பே கேள்வியாகவும், சவாலாகவுமாக இருக்கக் கூடிய ஆண், பெண் என்ற பைனரி எல்லைக்குள் இல்லாமல், மாற்றுப் பாலினமாக பிறந்த பால் புதுமையினர், தங்களது பிறப்பால் குடும்பம், சமூகம் இரண்டினோடும் கடும்,வாழ்வியல் போராட்டத்தில் வெற்றி கண்டு, பலரும் போற்றத்தக்க வகையில் வாழும் மாற்றுப்பாலின சாதனையாளர்களுக்கான விருது அளிக்கும் விழாவாகும்.

தமிழ் நாடு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சார்ந்த பல பால் புதுமையினரையும் தேடித் தேடி அவர்களின் திறமைகளை, அடையாளம் கண்டு, அவர்களை மேடை ஏற்றி, அவர்களது தனிப்பட்ட திறமை, அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து அவையோருக்க எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு விருது வழங்கி கொளரவம் செய்த ஒரு சாதனையாளர், சென்னை Born 2 win அமைப்பின் நிறுவனர் நங்கை ஸ்வேதா.
அவரது இந்த பணி அரும்பெரும் தொண்டு, ‘செயற்கறிய செய்வார் பெரியோர்’ என்ற வகையில் போற்றத் தக்கது.
மேடையில் அட்டகாசமாக வைக்கப்பட்டிருந்த மாபெரும் குத்துவிளக்கு ஏற்றும்மங்கல நிகழ்வோடு இந்த விருது வழங்கும் விழாவைத் தொடங்கவிருந்த ஸ்வேதா, சென்னை டிராபிக்கில் மாட்டிக் கொண்டு விருந்தினர்கள் வர தாமதமாகவே, சற்றும் சளைக்காமல் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், பாரதநாட்டியம் போன்றவற்றை முதலில் களமிறக்கி அதை ஈடுசெய்து அவர் ஒரு திறமையான டைம் மேனேஜ்மென்ட்டை எக்ஸ்பிர்ட் என்பதை நிரூபித்தார்.

இந்த விருது வழங்கும் விழாவில் இடையிடையே நிகழ்ச்சி தொய்வின்றி நடந்திட பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நாட்டிய நடன நிகழ்ச்சிகளையும் அமைத்து இரவு பத்தரை மணி வரை கூட்டம் சற்றும் கலையாமல் அனைவரையும் கட்டி போட்டார்கள் விழா குழுவினர்.
ஒவ்வொரு விருதாளர்களும் விருது பெறும்போது அவர்களைப் பற்றிய அறிமுகத்தை பிரபலத் தொகுப்பாளர் விஜய்யுடன், ஸ்வேதா அழகாக தொகுத்து வழங்கி, விருத்தாளர்களையும் இரண்டு நிமிடம் பேச வைத்து, நொடி பொழுதில் அடுத்த விருதாளரை அழைத்து பாராட்டும் நிகழ்ச்சியை மிக அற்புதமாக செய்து காட்டினார் ஸ்வேதா.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக சிறு குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சியில் அவையோர் அனைவரையும் கவர்ந்தது, கலைக் கூத்தன் குழுவினரின், ஒரு குட்டி நடன தாரகை.
அந்தக் குழந்தை பக்கத்தில் ஆடிய சிறுமியை பார்த்து பார்த்து தானும் அபிநயத்ததை…., அந்த அற்புத கண்கொள்ளாக் காட்சியை பார்க்க தவறவிட்டவர்கள் கொடுப்பினை இல்லாதோர் என்றே சொல்ல வேண்டும் அவ்வளவு அழகு…!!
விழாவில் இளமைத்துள்ளும் குத்தாட்ட நடன நிகழ்ச்சியும், அரங்கு அதிரும் இசையும், வண்ண விளக்குகளும் சிறப்பாகவே அமைக்கப்பட்டு இருந்தது.
பத்மாவேங்கட் ராமன், சுப்ராஜா, தரிணி,சுதா ராமலிங்கம், ஜெயஸ்ரீ மேனன், ஜெயஸ்ரீசுகுமார், நீரஜா மாலிக், ஷாந்தி பிரேம்ராஜ், சுமித்ரா பிரசாத், எழுத்தாளர் லதாசரவணன், வசந்திவிஷ்ணுவர்த்தன், உயிருள்ளவரை உஷா வின் சகோதரி சௌர்ணமுகி (நடிகர் சிம்புவின் சித்தி), பூர்ணிமா ஆகியோர் மேடையில் தோன்றி குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சிக்குப் பெருமை ஏற்றினார்கள்.

விருது பெற்றோர் அவரவர் துறையில் சாதனை புரிந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு விருது வழங்கியோர்கள் அனைவருமே பிரபலமானவர்கள்.
ஓவியர் ஷியாம், விருது வழங்க மேடையில் தோன்றியபோது அரங்கமே அதிரும் வண்ணம் அவரது ட்ரெண்டியான உடை சபையோரை கவர்ந்தது. அவர், தான் ஒரு ட்ரெண்டி பேஷன் டிசைனர் என்பதை தானே வடிவமைத்த காஸ்ட்யூமில் வந்து விருது வழங்கி கலக்கி விட்டு சென்றார்.
எழுத்தாளர் லதா சரவணன் விருது வழங்கி தான் ஸ்வேதாவுடன் கொண்டிருந்தப் பலவருட நட்பைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார் அதைக் கேட்டு நங்கை ஸ்வேதா அவர்கள் நெகிழ்ந்தது அவர்களின் இடையே இருந்த நட்பின் ஈரத்தை காட்டியது.
எப்பொழுது பார்த்தாலும் கம்பீரமான மிட்டுக்கு குறையாமல், பொலிவுடன் விளங்கும் ரொட்டேரியன் ருக்மணி சேகர் அவர்கள் இரண்டு மூன்று முறை மேடை ஏறி விருது வழங்கியது வெகு சிறப்பாக அமைந்தது.

சென்னையில் அனைத்து பிரபலங்களின் பிறந்தநாளின் போதும் உடன் சென்று வாழ்த்து உரைக்கும் சதீஷ் ஜுபிடர் தன் பங்கிற்கு மேடை ஏறி விருது அளித்து நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தார்.
நீரஜா மாலிக் அவர்கள் விருதுகள்வழங்கி பெருமை படுத்திப்பேசும்போது, ஸ்வேதாவின் சாதிக்கப் பிறந்தவர்கள் அமைப்பின் இனி வரும் எந்த நிகழ்சிக்கும் நானும் என்னுடன் இருக்கும் சமூக ஆர்வலர் அமைப்புகளும் உடனிருந்து எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் நாம் இனி சேர்ந்தே பயணிப்போம் என்றும் கூறினார்.
திருநர் சமூகத்தின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு தேவையான மாற்றுப் பாலின அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த, சுமார் 470 பால் புதுமையினரின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றிய தாயம்மா அவர்களின் பெருமையை மேடையில் சொன்னபோது பிரம்மிப்பாகவே இருந்தது.
இன்றைக்கும் பல பால் புதுமையினருக்கு அன்னையாக அவர் அரவணைத்து செல்லும் கருணை உள்ளத்திற்கு அவருக்கு வழங்கப்பட்ட விருதுமேலும் பெருமை சேர்த்தது.
மேடையில் தோன்றி விருது பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளரும் அரசியல் சமூக ஆர்வலருமான ரியானா ராஜு வின் அரசியல் நெடி கலந்த பேச்சு அரங்கில் பல பால் புதுமையினரின் ஆரவாரத்தை கிளப்பியது.
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராகவும் சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்ற ஃபரினா விருது வழங்கி, அதே மேடையில் தான் புதிதாக தொடங்கியுள்ள பொட்டிக் ஷாப்பில் தயாரான புதிய “மேனா மினுக்கி” சேலையை அறிமுகப்படுத்தி அதையே விருதாளருக்கு பரிசாகவும் வழங்கி பாராட்டினார்.
விருதாளர்களில் கல்லூரியில் பயிலும் மாணவி, நர்ஸ்,மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் திரு நம்பிகள், டிரான்ஸ் கப்புல்ஸ், ஆனாமிக்கா ஜான்வி, சரோஜ் சரவணன் ஆகியோருக்கும் சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழாவில் மிகக் குறிப்பிடும்படியான கலை நிகழ்ச்சியாக காளி வீரபத்திரனின் கிளாசிக்கல் நடனமும், நடன கலைஞர்முனைவர் செந்தில்குமார்அவர்களின் நாட்டியக் குழுவினரின் நடனங்களும், குறிப்பாக பால் புதுமையினருக்கு (மாற்றுப் பாலினத்தவர்கள்) இன்றைய சிக்கல் நிறைந்த சமூகத்தில் கல்வி ஒன்றே அவர்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி ஒட்டுமொத்த விருது வழங்கு விழா நிகழ்ச்சிக்கும் முத்தாய்ப்பாய் அமைந்தது.
அறுசுவை இரவு உணவுடன் விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.

குடும்பத்தாராலும், சமூகத்தாலும் உதாசீனப்படுத்தப்பட்ட மாற்று பாலின, பால் புதுமையினர் இன்று அரங்கேறி விருதுகள் பெறும் சாதனையாளர்களாக மாறி இருக்கும் இது போன்ற சமூக மாற்றம் மேலும் வளர்ச்சியுற்று மாற்றுப் பாலின மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும்.
எழுதியவர் – ரவி நவீனன்


