நெல்லையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிரசாரம்

நெல்லை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று (புதன்கிழமை) காலை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் 4 வழிச்சாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டு உள்ள பொதுக்கூட்டபந்தலுக்கு வருகிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதுதவிர நகர்வலமும் (ரோடு ஷோ) வருகிறார். அதாவது பிரசாரத்தை முடித்துக் கொண்டு 4 வழிச்சாலை வழியாக நெல்லை தாழையூத்துக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி தச்சநல்லூர், வண்ணார் பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், கே.டி.சி. நகர் வழியாக சென்று ரசிகர்கள், தொண்டர்களுக்கு கையசைத்து ஆதரவு திரட்டுகிறார். பின்னர் தூத்துக்குடிக்கு செல்கிறார்.

இதையொட்டி கே.டி.சி. நகரில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோர் நேற்று தனித்தனியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புஸ்சி ஆனந்த், “நெல்லை பிரசாரத்தை தொடர்ந்து தலைவர் விஜய் தூத்துக்குடிக்கு செல்கிறார். அங்கும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இது ஒரு முக்கியமான மக்கள் சந்திப்பு நிகழ்வு. இதில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொள்வார். திட்டமிட்டபடி பிரசாரம் சிறப்பாக நடக்கும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!