திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் த.வெ.க. தலைவர் விஜய்

திருச்சி,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்பின்னர் காந்தி மார்க்கெட், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வேட்புமனு தாக்கல் செய்யும் மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் பிரசாரம் செய்ய உள்ள மரக்கடை ஆகிய இடங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று காலை நேரடியாக வந்து ஆய்வு செய்தார். எந்த பிரச்சினையும் ஏற்படாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதற்கிடையே, த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

திருச்சி கிழக்கு தொகுதி களநிலவரம் என்ன..?

த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது உருவானது. மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், லூர்து அன்னை ஆலயம் ஆகியவை இந்த தொகுதியின் ஆன்மிக ஸ்தலங்கள் ஆகும். திருச்சியின் மையப்பகுதியில் இந்த தொகுதி இருப்பதால், முழுக்க முழுக்க நகர்ப்புற தொகுதியாகும். திருச்சி மாநகராட்சியின் சில வார்டுகள் இந்தத் தொகுதியில் வருகின்றன.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வும், 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற இனிகோ இருதய ராஜே, இந்த முறையும் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் க.ராஜேசேகரன் களத்தில் இருக்கிறார். த.வெ.க. தலைவர் விஜய்யும் கோதாவில் குதிப்பதால், இங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதி.

திருச்சி கிழக்கு தொகுதியிலும் பெண்கள், இளம் வாக்காளர்கள், கிறித்தவர்கள் வாக்கு அதிகம் உள்ளது. இந்த வாக்குகளை வைத்துத்தான் கடந்த முறை இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார். இந்த முறை, அந்த வாக்குகள் விஜய் பக்கம் திரும்பினால், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!