இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள்: மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பி வைக்கிறார்

சென்னை,

இலங்கையில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் இலங்கையை புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் அந்நாட்டில் உள்ள பதுளை கண்டு, நுவரெல்லா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலின் கோரத்தாண்டவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர்.

‘டிட்வா’ புயல் ஏற்படுத்திய பேரழிவால் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சிக்கி தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமான படை மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்த புயல் பாதிப்பால் இலங்கையில் வசிக்கும் நம் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்களும் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

புயலால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தார். அப்போது அவர், இலங்கை மக்கள் இந்த துயரில் இருந்து மீண்டு வரும் வகையில், தமிழக அரசு துணைநிற்கும் என்றும், துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை வழங்கிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம் என்றும், அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம் என்றும் கூறியிருந்தார்.

அந்தவகையில் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் நிவாரண பொருட்கள் இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் நிவாரண பொருட்களை சுமந்து செல்லும் கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!