கோவை,
இந்த வழித்தடத்தில் தற்போது 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தின் முக்கிய ரெயில் வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான மேம்பாட்டு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக 100 கி.மீ. வேகத்துக்கு கீழ் ரெயில்கள் இயங்கும் தண்டவாள பாதையின் தரத்தை மேம்படுத்தி 110 கி.மீ.வேகத்திலும், 110 கி.மீ., வேகத்தில் ரெயில்கள் இயங்கும் பாதைகளை மேம்படுத்தி 130 கி.மீ. வேகத்திற்கு மேல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்தவகையில் சென்னை-சேலம்-கோவை மார்க்கத்துக்கான ரெயில்பாதையை மேம்படுத்த கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை-ஜோலார்பேட்டை இடையேயான தண்டவாளத்தை மேம்படுத்தி, அந்த வழித்தடத்தில் தற்போது 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை-கோவை இடையே 130 கி.மீ வேகத்தில் ரெயில்களை இயக்க தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முதல் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால், இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை-ஜோலார்பேட்டை வரையிலான தடத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
