இன்றே உருவாகிறது புயல்

சென்னை,

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மலாக்கா ஜலசந்தி பகுதியில் ‘சென்யார்’ புயல் உருவானது. இது இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்து, அதன் ஆற்றல் மட்டும் தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லை.

இந்நிலையில் இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புயலக உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி வரும் என்றும், புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் ஏமன் பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் இந்த புயலுக்கு பெயரிடப்பட உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய புயலுக்கு பெயர் ‘தித்வா’

புயல் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டும் வழக்கம் இருக்கிறது. ஆனால் புயல் உருவான பின்னர் தான் அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். ஆனால் இதற்காக 13 உறுப்பு நாடுகள் ஏற்கனவே பெயரை பட்டியலிட்டு வழங்கியிருக்கிறது.

அந்த அட்டவணையின்படி, தற்போது இலங்கை அருகே உருவாகும் புதிய புயலுக்கு ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து இருக்கிறது. ‘தித்வா’ என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘தீவு’ என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள ‘சோகோட்ரா’ தீவின் ஒரு பகுதியின் பெயராக கூட இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வியாழக்கிழமை) காலைக்குள் வலுப்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அன்றைய தினம் நள்ளிரவு வட இலங்கையையொட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை தமிழ்நாட்டின் டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும் என்றும், டெல்டா பகுதிகளில் புயலின் முன் பகுதி நுழையும் அதாவது நிலப்பகுதிகளில் ஊடுருவும் என்றும், பின்னர் வடக்கு திசையில் சென்னை நோக்கி நகர்ந்து, 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது கரைக்கு அருகில் நிலைக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேற்சொன்ன 4 நாட்கள் பரவலாக கன முதல் மிக கனமழையும், புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

புயல் கரைக்கு அருகே வந்து உருவாவதாலும், நிலப்பரப்பில் ஊடுருவல் இருப்பதாலும் காற்று பாதிப்பு இருக்காது. ஆனால் அதேநேரத்தில் மழைக்கான சூழல் அதிகம் இந்த நிகழ்வில் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!