வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படாது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.

ஆம்னி பஸ்கள் பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்து லக்சரி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் ஏ.ஜெ.ரிஜாஸ், தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் சங்க தலைவர் ஜெயம் பாண்டியன், சேலம் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் சுரேஷ், கோவை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிராவல்ஸ் சங்க தலைவர் திருமூர்த்தி, புதுச்சேரி பஸ் ஆபரேட்டர்கள் சங்க தலைவர் மதன், கர்நாடகா ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் ஷகீல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பஸ் இயக்க சங்க தலைவர் கிரண் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் தமிழ்நாட்டை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 7 நாட்களாக கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை தடுத்து ஒவ்வொரு பஸ்சுக்கும் ரூ.2.20 லட்சம் வரை அபராதம் விதித்து மொத்தம் ரூ.1.15 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் ‘2021-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’டின்படி தமிழ்நாட்டில் இன்று (நேற்று) வரை அண்டை மாநில பஸ்களுக்கு சாலைவரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம்’ என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக ஆபரேட்டர்கள் இரட்டை வரியும், அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்த நிகழ்வை தொடர்ந்து 7-ந் தேதி இரவு 8 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்பு அடைந்து மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு காலாண்டுக்கு (90 நாட்கள்) தமிழக சாலைவரி ரூபாய் ரூ.1,50,000, ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா, கர்நாடகா சாலை வரி சுமார் ரூ.2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு ரூ.4.50 லட்சம் செலுத்தி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த பிரச்சினையால் 10-ந் தேதி (இன்று) மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தியாவில் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுடன் பேசி அந்த மாநில பஸ்களுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராக பஸ்கள் இயக்க வழிவகையை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே ஓடக்கூடிய 600 பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் ஓடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தமிழகத்திற்குள் ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!