இன்றைய முக்கிய நிகழ்வுகள் (அக்டோபர் 28)

சர்வதேச அனிமேஷன் தினம் ! குகை ஓவியங்கள், தோல் பாவைக்கூத்து போன்றவையே அனிமேஷன் பிறப்பதற்கான அடிப்படை எனச் சொல்லப்படுகிறது. பின்னாளில், கைப்படவோ அல்லது கணினி மென்பொருளின் உதவியுடனோ ஓவியங்களை வரைந்து, அவற்றைத் தொகுத்து காணொளியாக ஓடவைப்பது அனிமேஷன் ஆனது. டிரெடிஷனல் அனிமேஷன், அனிமே (Anime), 2டி, 3டி, ஸ்டாப் மோஷன், மோஷன் கிராஃபிக்ஸ் என அனிமேஷன் பல வகைப்படும். 1900களின் ஆரம்பத்தில் அனிமேஷன் வேலைப்பாட்டை ஒட்டிய கதாபாத்திரங்களை உருவாக்கும் பணிகள் தொடங்கியிருந்தாலும், ‘மிக்கி மவுஸ்’ கார்ட்டூன் கதாபாத்திரத்தின் வெற்றியால் சாமானியரின் பார்வையும் அனிமேஷனின் மேல் விழத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ‘பாப்பய்’, ‘டாம் அண்ட் ஜெர்ரி’ என வரிசையாக அனிமேஷனைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் உருவாக்கப்பட்டன. கார்ட்டூன்களை அடுத்து ‘டாய் ஸ்டோரி’, ‘ஐஸ் ஏஜ்’ உள்ளிட்ட முழு நீள அனிமேஷன் திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கின. கூடவே ‘ஜுராஸிக் பார்க்’, ‘ஹாரி பாட்டர்’ போன்ற படங்களில் கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்க அனிமேஷன், கிராஃபிக்ஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தன. மேற்கத்திய நாடுகளில் இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ‘அனிமே’ எனப்படும் அனிமேஷன் வகையில் ஜப்பான் தன்னை வலுப்படுத்திக் கொண்டது. இன்றும் ஜப்பானின் அனிமே கதைகளுக்கான தனி ரசிகர் கூட்டத்தைப் பார்க்க முடியும். இப்படி உலக நாடுகளில் அனிமேஷன் பரவி வருவதை அடுத்து இந்த கலையை மேலும் சிறப்பிக்கும் வகையில் சர்வதேச அனிமேசன் நஆள் கொண்டாடப்படுகிறது. அதாவது 1907 ஆம் ஆண்டில், பிரெஞ்சு கலைஞர் எமிலி கோல், ஜப்பான் டி ஃபைன்டாசியுடன் தனது திரைப்படத் தயாரிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அதில் ஸ்டாப் மோஷன் நுட்பங்களை கற்பனையாகப் பயன்படுத்தினார். அவரது அடுத்த குறும்படத்தை பாரம்பரிய அனிமேஷன் முறைகள் என்று அறியப்பட்ட 1908 ஃபேன்டஸ்மகோரியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் அனிமேஷன் படமாகக் கருதலாம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 ஆம் தேதி, அனிமேஷனை ஒன்றிணைத்து ஊக்குவிக்கும் சக்தியைக் கௌரவிக்கும் வகையில் உலகம் சர்வதேச அனிமேஷன் தினத்தைக் கொண்டாடுகிறது. பொழுதுபோக்கு மற்றும் கல்வியில் அனிமேஷனின் தாக்கத்தை விளக்குவதற்காக 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கத்தால் (ASIFA) இந்த நாள் நிறுவப்பட்டது.

1726 – உலக வரலாற்றின் மிகச்சிறந்த 100 புதினங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிற கலிவரின் பயணங்கள் வெளியான நாள் அயர்லாந்தைச் சேர்ந்த மதகுருவான ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதி, வெளியானதுமே மிகப்பெரிய வெற்றியடைந்த இந்நூல், அரசவை முதல் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள்வரை அனைவராலும் படிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இந்நூலில் நான்கு கடற்பயணங்களில் பல்வேறு புதிய இடங்களுக்குச் செல்லும் கலிவர், மிகச்சிறிய, மிகப்பெரிய அளவிலான மனிதர்கள், வானில் மிதக்கும் தீவு என்று பல்வேறு வியப்பானவற்றைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்விஃப்ட், மனித உருவத்தையொத்த யாஹூ என்பவற்றையும் குறிப்பிடுகிறார். இதைத்தான் தேடுபாறியான யாஹூ தன் பெயராகக் கொண்டிருக்கிறது. யாஹூ என்பவற்றின் குணமாக ஸ்விஃப்ட் குறிப்பிட்டிருந்த, ‘முரட்டுத்தனமான, சிக்கலில்லாத, நயமற்ற’ குணங்களுடன் அனைத்தையும் தேடும் என்பதற்காகவே இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு விளக்கமாக ‘யெட் அனதர் ஹயரார்ச்சிக்கலி ஆர்கனைஸ்ட் ஆரக்கிள்’ என்பதை இதன் நிறுவனர்களான ஜெரி யங், டேவிட் ஃப்ளோ ஆகியோர் அறிவித்தனர். இவ்வாறு, பெயரைச் சூட்டிவிட்டு, அதற்கேற்ப விளக்கத்தை உருவாக்குவது ஆங்கிலத்தில் பேக்ரோனிம் என்றழைக்கப்படுகிறது. (பெயரிலுள்ள சொற்களின் எழுத்துகளைக்கொண்டு ராடார், நாட்டோ போன்று, ஒரு சொல்லை உருவாக்குவது அக்ரோனிம்!) குழந்தைகள் நூலாகக் கருதப்பட்டாலும், அக்காலத்திய ஆங்கிலேய அரசின் முக்கியப் பதவிகளிலிருந்த பலரை, சிறிய மனிதர்களாக, நகைப்புக்குரிய நடத்தையுடன் சித்தரித்திருந்தார் ஸ்விஃப்ட். லில்லிப்புட் அரசியின் அரண்மனையில் பற்றிய தீயை அணைக்க கலிவர் சிறுநீர் கழிப்பதான செய்திகூட அவ்வாறான சித்தரிப்புதான் என்று கூறப்படுவதுண்டு. கலிவர் ஜப்பானின் கொனோன்ஸாகி தீவில் இறங்கியதாக இக்கதையில் வருவதையொட்டி, யோகோசுகா நகரில் ஆண்டுதோறும் நவம்பரில் கலிவர்-கொனோன்ஸாகி விழா கொண்டாடப்படுகிறது. இக்கதையில், செவ்வாய்க்கு நிலவுகள் இருப்பதாகக் கிண்ட்லாக ஸ்விஃப்ட் எழுதியிருந்தார். 1872இல் உண்மையிலேயே செவ்வாய்க்கு இரு நிலவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபின், டெய்மோஸ் நிலவிலுள்ள ஒரு பள்ளத்திற்கு ஸ்விஃப்ட் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தில் ஸ்விஃப்ட் பயன்படுத்தியிருந்த லில்லிப்புட், யாஹூ உள்ளிட்ட பல சொற்கள் பின்னாளில் ஆங்கிலச் சொற்களாக ஏற்கப்பட்டுள்ளன. எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் ஆர்வெல் உள்ளிட்ட பலரும் இந்நூலால் ஈர்க்கப்பட்டு, இதைப்போன்ற கதைகளை எழுதியுள்ளனர். நாடகம், திரைப்படம் என்று பல வடிவங்களிலும் இக்கதை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடரும் பயணங்களில் நிலவுக்குக்கூட கலிவர் செல்வதாகப் பல்வேறு கதைகளும் எழுதப்பட்டுள்ளன!

1886 – அமெரிக்கப் புரட்சியின்போது, அமெரிக்கா-ஃப்ரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நிலவிய நட்புறவின் அடையாளமாகத் திகழும் சுதந்திர தேவி சிலை நியூயார்க்கில் திறந்துவைக்கப்பட்ட நாள் அமெரிக்க விடுதலைக்கான நினைவுச்சின்னம் ஒன்று உருவாக்கப்பட்டால், அதை ஃப்ரான்ஸ், அமெரிக்க மக்கள் இணைந்து செய்வதுதான் சிறப்பாக இருக்கும் என்று ஃப்ரெஞ்சுப் பேராசிரியர் எட்வர்ட் லேபுலே 1865இல் குறிப்பிட்டதில் கவரப்பட்ட, ஃப்ரெஞ்சுச் சிற்பி ப்ரெடரிக் பார்த்தோல்டி-யால் வடிவக்கப்பட்டு, ஈஃபில் கோபுரத்தை உருவாக்கிய கஸ்டவ் ஈஃபில் உதவியுடன் இந்தத் தாமிரச் சிலை உருவாக்கப்பட்டது. பிரிட்டானியா என்ற பெண்ணாக இங்கிலாந்தும், மரியன் என்ற பெண்ணாக ஃப்ரான்சும் சித்தரிக்கப்படுவதுபோல, கொலம்பியா என்ற பெண்ணாகத் தன்னை அமெரிக்கா சித்தரித்து வந்தது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசின் பெயரிலிருந்து, நாடுகளுக்கு ‘யியா’ என்று முடிவதாகப் பெயரிடும் லத்தீன் முறைப்படி இப்பெயர் உருவாக்கப்பட்டது. கொலம்பியாவுக்கான உருவம், அமெரிக்கப் பூர்வகுடியினரான செவ்விந்தியரின் இளவரசி உருவத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முகலாய -நான்காவது பேரரசராக ஆட்சி செய்த அரசர் ஜஹாங்கீர் காலமான தினம் இன்று. நூருத்தீன் சலீம் ஜஹாங்கிர் (முழுப்பெயர்: அல்-சுல்தான் அல்-‘அசாம் வல் காகன் அல்-முக்கரம், குஷுரு-ஐ-கிட்டி பனாஹ், அபூ’ல்-ஃபாத் நூர்-உத்-தின் முகம்மது ஜஹாங்கிர் பாத்ஷா காஜி ஜன்னத்-மக்கானி ) (செப்டம்பர் 20, 1569 – நவம்பர் 8, 1627) (OS ஆகஸ்ட் 31, 1569 – NS நவம்பர் 8, 1627) 1605 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை முகலாயப் பேரரசராக இருந்தார். ஜஹாங்கிர் என்ற பெயர் பெர்சிய மொழியில் جہانگير இருந்து வந்ததாகும். இதற்கு “உலகத்தின் வெற்றியாளர்” எனப்பொருளாகும். நூர்-உத்-தின் அல்லது நூர் அல்-தின் என்பது அரேபியப் பெயராகும். இதற்கு “நம்பிக்கையின் ஒலி” எனப்பொருளாகும். ஜஹாங்கீர், பாபரின் பேரரான அக்பருக்கும், ஜோதாபாய்க்கும் பிறந்த மகனாவார். இவர் 1569ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பிறந்தார். அக்பருக்கு பிறந்த மகன்களில் உயிருடன் இருந்த மூத்த மகனாவார். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்கள் மன்பாவதீ பாய், இளவரசி மன்மதி மற்றும் நூர்ஜஹான் ஆவார். 1605ஆம் ஆண்டு அரியணை ஏறினார் ஜஹாங்கீர். ஒரு சில மாதங்களில் இவரின் மூத்த மகனான குஸ்ரூ தன் தந்தைக்கு எதிராக கிளர்ச்சியின் ஈடுபட்டார். குஸ்ரூக்கு 5ஆம் சீக்கிய குரு அர்ஜூன்தேவ் ஆதரவு அளித்தார். இதனை அறிந்தவுடன், குஸ்ரூவின் கண்கள் பறிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 5ஆம் சீக்கிய குருவும் கொல்லப்பட்டார். இவரின் ஆட்சியில் தான் வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ ஆங்கில வணிகக்குழு சார்பாக வருகை தந்தனர். 1615ஆம் ஆண்டில் சர்தாமஸ் ரோ சூரத் நகரில் வணிகம் செய்வதற்கு அனுமதி பெற்றார். இவரது சுயசரிதை “துசுக்-இ-ஜஹாங்கிரி” அல்லது “ஜஹாங்கீர்நாமா” என்று அழைக்கப்பட்டது. இவர் நீதித்துறையில் ’நீதிச் சங்கிலி மணி’ என்ற முறையை உருவாக்கினார். இந்த மணியானது ‘ஷபர்ஜ்’ அரண்மனையில் இருந்து யமுனை ஆற்றங்கரை வரை கட்டப்பட்டது. ஷெர் ஆப்கன், மெகருன்னிஷா என்பவரை மணந்திருப்பார். இவர் மிர்சா கியாஸ் பெக்கின் என்பவரின் மகளாவார். ஷெர் ஆப்கன் மறைவிற்கு பிறகு மெகருன்னிஷாவை ஜஹாங்கீர் ஏற்றுக்கொண்டு 1611ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.திருமணத்திற்கு பிறகு இவர் பெயர் ’நூர்ஜஹான்’ என்று மாற்றப்பட்டது. நூர்ஜஹான் என்றால் ‘உலகின் ஒலி’ என்று பொருள். இதற்கு முன்பு ’நூர்மஹால்’ (அரண்மனையின் ஒலி) என்று அழைக்கப்பட்டார். இவர்களிடம் அதிகாரம் முழுவதும் கொடுக்கப்பட்டது. இவர் 1645ஆம் ஆண்டில் காலமானார். 1611 – 1626ஆம் ஆண்டு வரை நூர்ஜஹானின் காலம் என்று வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. ஜஹாங்கீர், ஸ்ரீநகரில் ’ஷாலிமர் மற்றும் நிஷாத்’ என்ற பூந்தோட்டத்தை உருவாக்கினார். மேலும் சிக்கந்தராவில் தன் தந்தையான அக்பரின் கல்லறையை கட்டினார். ஆக்ராவில் நூர்ஜஹானின் தந்தைக்கு இதி-மத்-தௌலா என்று கல்லறை எழுப்பினார். லாகூரில் பெரிய மசூதி ஒன்றையும் கட்டியுள்ளார். இவரின் உடல்நிலை அதிகமான மதுப்பழக்கத்தால் சீரிழந்தது. இதனால் 1627ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். இவரின் உடல் பஞ்சாப்பில் உள்ள ஷாதராவில் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் சமாதி ஒன்றும் இவரின் மகனான ஷாஜஹானால் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேத உபநிடதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் காலமானநாள் இன்று (அக்டோபர் 28). l ஜெர்மனியில் பிறந்தவர். பள்ளி யில் படித்தபோதே இசை, பாரம்பரிய மொழிகளைக் கற் றார். லெய்ப்ஸிக் பல்கலைக் கழகத்தில் மொழியியல் ஒப்பாய்வு பயின்றவர் பின்னர் கிரேக்கம், லத்தீன், அராபி, பாரசீகம், சமஸ்கிருதம் கற்றார். 19 வயதில் பெர்லின் சென்று, பிரெட்ரிக் ஸ்கெல்லிங் என்ற மொழியியல் வல்லுநருக்காக உபநிடதங்களை மொழி பெயர்த்தார். அப்போது ஏற் பட்ட ஈடுபாட்டால் சமஸ்கிருத மொழியில் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். l 1846-ல் இங்கிலாந்து சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் நவீன மொழிகள் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். மொழியியல் ஒப்பாய்வுத் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். ஸ்கெல்லிங்தான் இவரை மொழி வரலாற்றை மத வரலாற்றோடு தொடர்புபடுத்த தூண்டியவர். ஜெர்மானிய மொழியியலாளர், கீழைத்தேச ஆய்வாளர், இந்திய ஆய்வியலைத் தொடங்கிவைத்தவர், சமய ஒப்பாய் வுத் துறையை உருவாக்கியவர் என பன்முகத் தன்மை கொண்டவர். கிழக்கத்தியப் புனித நூல்கள் (Sacred Books of the East) என்ற 50 தொகுதிகள் அடங்கிய மிகப் பெரிய நூல் இவரது வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சிகளுக்கு இன்றும் ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. l ‘தாம் எழுதிய உரையைப் புதுப்பிக்க சாயனர்தான் (பிரபல சமஸ்கிருத குரு) மாக்ஸ்முல்லராக பிறந்துள்ளார் என்று நினைத்தேன். அவரைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் உறுதியாகிவிட்டது’ என்பார் சுவாமி விவேகானந்தர். l ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி ரூ.9 லட்சம் கொடுத்தது. அதன் கையெழுத்துப் பிரதியைத் தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆகின. l ராமகிருஷ்ண பரமஹம்சரை அவதார புருஷராக ஏற்றவர். அவரைப் பற்றி பல கட்டுரைகள், புத்தகம் எழுதியுள்ளார். l சிறையில் அடைக்கப்பட்ட திலகரை நல்லபடியாக நடத்துமாறும் விடுவிக்க வலியுறுத்தியும் விக்டோரியா மகாராணிக்கு கடிதம் எழுதியவர். ராஜாராம் மோகன் ராய் உருவாக்கிய சீர்திருத்தக் கருத்துகளை ஆதரித்தார். வேதங்கள் உருவான காலகட்டத்தை நிர்ணயித்தவர்களில் முதன்மையானவர் இவர். இவரது புகழ் பெற்ற மற்றொரு நூல் ‘இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள்.’ l ‘இந்தியா ஒருமுறை கைப்பற்றப்பட்டுவிட்டது. அது மற்றொரு முறையும் கைப்பற்றப்பட வேண்டும். இந்த முறை அது கல்வியால் கைப்பற்றப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். l ‘இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்கவேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும் சுயமரியாதையும் விழித்தெழும்’ என்றவர். இந்தியா, இந்திய மக்கள் மீது மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார். இந்தியா அனைத்துவித செல்வங்கள், அழகு நிறைந்த பூலோக சொர்க்கம் என்று போற்றிய இவர் 76-வது வயதில் இதே அக் 28(1900)ல் மறைந்தார்.

பேச்சாளராக எழுத்தாளராக உரையாசிரியராக பதிப்பாசிரியராக விமர்சகராக வரலாற்று ஆசிரியராக பத்திரிகை ஆசிரியராக சமயாச்சாரியராக திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா நினைவு நாளின்று. தமிழ்ப் பத்திரிகை உலகில் பி.ஸ்ரீ.யின் பங்களிப்பு என்பது “தினமணி”யில் வேலை பார்த்தபோது அவர் வெளியிட்ட பல மலிவு விலைப் பதிப்புகள் என்பதுதான். தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும், புத்தக மதிப்புரைகளும் எனலாம். பி.ஸ்ரீ.யின் பத்திரிகைப் பணியில் முழுப் பரிமாணமும் அவர் “தினமணி”யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்த விகடனில் பகுதிநேர எழுத்தாளராக மாறியபோதுதான் வெளிப்பட்டது. இன்றளவும் பி.ஸ்ரீ.யின் சித்திர இராமாயணத்துக்கு நிகராக ஒரு எளிய படைப்பு வெளிவந்ததில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து.
எம்.ஜி..ஆரின் மனம் கவர்ந்த நடிகர் சிவ சூரியன் நினைவு நாளின்று! கோலிவுட்டைப் புகழின் உச்சத்தில் தூக்கி வைத்த படங்கள் ஏகப்பட்டவையுண்டு. அவற்றில் முக்கியமானது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.இந்தப் படத்துக்கு முன்னோடி யாகவும் முன்மாதிரியாகவும் விளங்கிய படம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரி குமாரி’. அதுவரை துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில்தான் நாயகன் ஆனார். பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரவேற்புக்கு இணையாக, இதே படத்தில் சாந்தவர்மன் என்ற கோமாளித்தனமான ஒரு விந்தைக்குரிய அரசனாக நடித்துப் பெயர் வாங்கினார் எஸ்.எஸ். சிவசூரியன். கோமாளி / ஏமாளி ராஜாவாக சிவசூரியன் தோன்றிய அத்தனை காட்சிகளிலும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அதன்பிறகு சிவசூரியன் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வர ஆரம்பித்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவராம மங்களம் என்ற சிற்றூரில் 1927-ல் பிறந்தவர் சிவசூரியன். தாயார் வடிவு, தந்தை சிதம்பரத்தேவர். சிவசுப்பு என்ற தம்பியும் சிவசூரிய வடிவு என்ற சகோதரியும் உண்டு. 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அத்துடன் படிப்பை முடித்துக் கொண்டார். படிப்பைவிட நடிப்பில் நாட்டம் அதிகமானதால் இளவயதிலேயே நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கலானார். நவாபு ராஜமாணிக்கம் சபாவில் பட்டை தீட்டப்பட்ட சிவசூரியன், தனது பாடும் திறமையால் நாடகங்களில் தொடர்ந்து நாரதராக நடித்துப் புகழை ஈட்டினார். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையில் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் எம்.ஜி.ஆர்., எம்.என். நம்பியார் ஆகியோருடன் நாடகங்களில் நடித்திருக்கிறார். பின்னாளில் எம்.ஜி.ஆரின் ஆதரவாளராகச் சிவசூரியன் மாற இந்த நாடக காலத்து நட்பு அவருக்கு வழி வகுத்தது. சிவசூர்யனின் குன்றாத திறமையைக் கண்ட எம்.ஜி,ஆர்., தான் நடித்த பல படங்களில் சிவசூர்யனை நடிக்க வைத்தார். திரைப்படம் பெற்று வந்த புகழால், நாடக நடிகர்கள் பலரும் சேலத்தில் தங்கி ராஜா- ராணி சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் காலம் அது. சிவசூர்யனும் சேலத்துக்கு வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் அன்பைப் பெற்று. ‘மந்திரி குமாரி’யில் சாந்தவர்மன் கதாபாத்திரம் பெற்று நடித்தார். பிறகு பிரபலமான நடிகரான இவர் 1950-ல் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முன்னிலையில்.துரைப்பாண்டிச்சி என்பவரை மணந்துகொண்டார். இத்தம்பதிக்கு 14 குழந்தைகள். இவர்களில் இன்று உயிரோடிருப்பவர்கள் பேபி வடிவு, சாந்தி, ராஜா மணி, கற்பகவள்ளி என்ற 4 பெண்களும் சிதம்பரம், கந்தகுமார், பூச்சி முருகன்(ஆம்- இப்போதைய வீட்டு வசதி வாரிய தலைவர்தான்) என்ற 3 மகன்களுமே ஆவர். சிவசூரியனின் தமிழ்ப் பற்று அலாதியானது. எப்போதும் தூய தமிழில்தான் பேசுவார். இவரது கடைசிப் படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஊர்க்காவலன்’. அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தனது இறுதிக்காலம் வரை நாடகங்களில் நடித்து வந்தார். கடந்த 1997 ஆண்டு 74-வது வயதில் இதே அக்டோபர் 28ல் திடீர் மாரடைப்பால் காலமானா சிவசூர்யனை ஒரு திராவிட இயக்க நடிகர் என்றால் மிகையாகாது.. அன்னாருக்கு நினைவஞ்சலி

சகோதரி நிவேதிதா பிறந்த தினம் சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 – அக்டோபர் 13, 1911), (இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது). கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார். கொஞ்சம் விரிவான தகவல்: பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்;இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த வெளி நாட்டினர்களில் முக்கியமானவர்; விவேகானந்தரின் முக்கியமான சீடர்: சகோதரி நிவேதிதா. அயர்லாந்தின் டைரோன் கவுன்ட்டியில் உள்ள டங்கனான் நகரில் 1867-ல் இதே நாளில் பிறந்தவர் நிவேதிதா. இவருடைய இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவரின் தந்தை மத குருவாக இருந்தவர். எலிசபெத்துக்கு இயல்பாகவே கடவுள் பக்தியும் சேவை மனப்பான்மையும் இருந்தது. ஆசிரியையாகப் பணிபுரிந்த அவர், பின்னர் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். 1895-ல் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது, அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து நிறைய சந்தேகங்களைக் கேட்டு அவரது கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் விவேகானந்தருடன் கொல்கத்தா நகருக்கு வந்தார். ராமகிருஷ்ணரின் மனைவியும் ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவருமான அன்னை சாரதா தேவியுடனான சந்திப்பு அவரது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவியது. அதுவரை எலிசபெத் என்று அறியப்பட்ட அவர் ‘சகோதரி நிவேதிதா ’என்று அழைக்கப் பட்டார். கொல்கத்தாவில் பெண்கள் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.அந்நகரில் 1899-ல் பிளேக் நோய் தாக்கியபோது, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவைகளைச் செய்தார். தெருக்களைச் சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார். ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திரபோஸ், அரவிந்தர் உள்ளிட்டவர்களுடன் நட்பு ஏற்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தேவையானது என்று ஆரம்பத்தில் கருதி வந்த நிவேதிதா, பிரிட்டிஷாரின் அடக்கு முறையை உணர்ந்ததும் இந்தியாவின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முற்போக்கான கருத்துகளைக் கூறிய இங்கிலாந்து தத்துவமேதையும், எழுத்தாளருமான ஜான் லாக் நினைவு நாள் உலகில் பல புரட்சிகள் நடப்பதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். இவரது சமூகக் கட்டுப்பாட்டு கோட்பாடு உலகம் முழுவதும் பரவியது. இவரது படைப்புகள் அறிவுத் தத்துவவியல், அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன. மனம், பிரக்ஞை, அறிவு, சுயம் குறித்து ஆராய்ந்து எழுதினார். ‘தாராளவாதத்தின் (லிபரலிசம்) தந்தை’ எனப் போற்றப்படும் ஜான் லாக் சிந்தனை துளிகள் நம் ஆந்தை குழும நண்பர்கள் கவனத்துக்கு ஒவ்வொரு மனிதனும் அவனுக்கான தனிப்பட்ட சொத்து. இதில் அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. நமது வருமானம் நமக்கான காலணிகளைப் போன்றது. அது மிகச்சிறியதாக இருந்தால், இறுக்கிப்பிடிக்கும்; அது மிகப்பெரியதாக இருந்தால், தடுமாறச்செய்யும். கல்வியே ஒரு நல்ல பண்புள்ளவனின் உருவாக்கத்திற்கு தொடக்கத்தைக் கொடுக்கின்றது. புதிய கருத்துகள் எப்பொழுதுமே சந்தேகிக்கப்படுகிறது மற்றும் எவ்வித காரணமும் இல்லாமல், பொதுவாக எதிர்க்கப்படுகின்றது. பெரியவர்களின் பேச்சுகளைவிட, ஒரு குழந்தையின் எதிர்பாராத கேள்விகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய உண்டு. கிளர்ச்சியானது மக்களின் உரிமை. நரகத்திற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் சொர்க்கத்திற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு. அனைத்து செல்வமும் தொழிலாளியின் உற்பத்திப்பொருளே. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மனிதனுக்கான வேலை. மனோபலமே மற்ற நற்பண்புகளுக்கான பாதுகாவலனாகவும், ஆதரவாளனாகவும் உள்ளது. வலிமையான உடலிலுள்ள வலிமையான மனமே, இந்த உலகில் மகிழ்ச்சியான நிலைக்கான முழு விளக்கமாகும். மனிதர்களின் செயல்பாடுகளே, அவர்களின் எண்ணங்களின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்பதை நான் எப்போதும் நினைப்பதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!