4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று(அக்.22) காலை 5.30 வரை அதிகபட்சமாக புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 21 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ. மிக கனமழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 10 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
![]()
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1,800 கன அடியில் இருந்து 2,170 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரியில் தற்போது 20.84 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. 2.8 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையாக 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
