பகுதி -6
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி -6
டைகர் பார்க் விசிட் மற்றும் டைகர் சபாரி முடிந்த பின்பு வெளிய வந்து வாகனத்தில் ஏறி பட்டாயாவின் பிளோட்டிங் மார்க்கெட் என சொல்லப்படும் மிதக்கும் மார்க்கெட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கேயும் ஓட்டுனர் டிக்கெட் வாங்கி எங்களிடம் கொடுத்துவிட்டு அவர் வெளியில் காத்திருந்தார்.
அங்கே எங்களுக்கு இரண்டரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
அங்கிருந்த படக்குத்துறையிலிருந்து புறப்படும் படகு மூலம் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
அது ஒரு கேரள படகு போல ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து கொள்ளும் வகையில் குறுகலாகவும் நீளமாகவும் இருந்தது. படகில் செல்லும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
ஒரு ஏரியை இவ்வாறு மிதக்கும் மார்க்கெட்டாக மாற்றி விட்டார்கள் போல் இருக்கிறது.
அதில் தாமரை கொடிகள் வளர்ந்து செந்தாமரைப் பூக்கள் அழகாக பூத்திருந்தன.

நாங்கள் படகில் சிறிது தூரம் செல்வதற்குள் எங்களுக்கு எதிரே ஒரு மிதக்கும் மேடையில் தாய்லாந்து நடன பெண்கள் அழகிய உடைகளுடன் எங்களை வரவேற்பது போல நடனம் ஆடிக்கொண்டு எதிரே வந்தார்கள்.
அதை கண்டு மகிழ்ந்தோம்.
படகில் செல்லும் பொழுது சில கடைகள் வழியிலே இருந்ததன. சிலர் படகுகளிலேயே உணவு கடை வைத்து சுடச் சுட சமைத்து கொடுக்கிறார்கள்.
அங்கே நாம் சொல்லும் இடத்தில் படகை நிறுத்தி அந்த கடைகளில் ஏதாவது பொருள் வாங்க வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம்.

அந்த வரிசையில் பெரும்பாலும் உணவு கடைகளாக தான் இருந்தது.
அவற்றையெல்லாம் பார்வையிட்டுவிட்டு ஓர் இடத்தில் வந்து படகிலிருந்து எங்களை இறக்கி விட்டார்கள்.
அங்கே அந்த தண்ணீரில் மிதப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்ட பெரிய வளாகம் பலகையினால் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில் நிறைய கடைகள்.
உணவு கடைகள் பழக்கடைகள் பேக் துணிமணிகள் காலணிகள் அழகு சாதனங்கள் அலங்கார பொருட்கள் என்று பல்வேறு விதமான கடைகள் அங்கே இருந்தது.
இந்த கடைகள் அனைத்தும் பலகையின் மேல் அமைக்கப்பட்டிருந்தது. நடப்பதற்காக கடைகளுக்கு நடுவே பாதை இருந்தது.
அதிலே நாங்கள் நடந்து சென்று அந்த கடைகளை எல்லாம் பராக்கு பார்த்துக் கொண்டே சென்றோம்.
சில கடைகளில் ஐஸ் கிரீம் மற்றும் சில தீனி வகைகளை வாங்கி சாப்பிட்டோம். துரியன் பழக் கடைகள் ஆங்காங்கே இருந்தது. ஆனால் அதன் விதையை எடுத்து விட்டு தான் கொடுக்கிறார்கள்.
விதையை நாம் எடுத்துக் கொண்டு வந்து நம் நாட்டில் விதைத்து விடுவோம் என்பதாலா என்ன என்று தெரியவில்லை. அது அங்கே ஸ்பெஷல் என்பதால் மூவரும்
நன்றாக அதை குடித்துவிட்டு அறையில் சென்று சாப்பிடுவதற்காக பழங்களாகவும் வாங்கிக் கொண்டோம்.
பேக் காலனிகள் ஆடைகள் எல்லாம் விலை மிகவும் அதிகமாக இருந்தது.
எனவே அங்கே நாங்கள் பெரிதாக எந்த பொருளையும் வாங்கவில்லை.
அந்த மிதக்கும் மார்க்கெட்டின் அழகை கண்டு ரசித்ததுடன் ஆங்காங்கே போட்டோக்களை எடுத்துக் கொண்டோம்.
அப்படியே அந்த பலகையின் மீது நடந்து வந்தால் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேருமாறு அந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இந்த மிதக்கும் மார்க்கெட்டை
விட்டு வெளியே வரும் பொழுது ஹெர்பல் ப்ராடக்ட் விற்பனை செய்யும் கடையில் என் மைத்துனர் யூகலிப்டஸ் தைலம் மட்டும் வாங்கிக் கொண்டார். அது மிகவும் பவர்புல்லாக இருந்தது.
எனவே திரும்பி வரும் பொழுது படகு சவாரி ஏதும் தேவைப்படாமலேயே நாங்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்.
நாங்கள் வெளியே வரும்போது சரியாக 3.00 மணி.
அந்த மிதக்கும் மார்க்கெட்டில் சில தீனிகளை வாங்கி உட்கொண்டதால் ஓரளவுக்கு பசி தாங்கி இருந்தது.
அதன் பிறகு வாகன ஒட்டி இன்றைய நிகழ்வுகள் முடிந்து விட்டது என்று சொல்லி எங்களை அழைத்துக் கொண்டு நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் கொண்டு வந்து விட்டுச் சென்றுவிட்டார்.
பின்பு நாங்கள் அருகில் உள்ள தாய்லாந்து உணவகத்திற்கு சென்று தாய்லாந்து உணவுகளை மதிய உணவாக சாப்பிட்டோம்.
மீண்டும் எங்களது அறைகளுக்கு திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.
மாலை ஐந்து முப்பது மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்து நேற்று எங்களை அழைத்து டீ கொடுத்து உபசரித்த அந்த கடையில் ஏதாவது வாங்கி அவருக்கு வியாபாரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்த கடைக்கு சென்றோம்.
சில பொருட்களை அந்த கடையில் வாங்கினோம்.
மைத்துனரின் நண்பர் ஏற்கனவே கேட்டுக் கொண்டவாறு தாய்லாந்தின் உள்ளூர் மதுபான பாட்டில்கள் இரண்டையும் அந்த சூப்பர் மார்க்கெட்டிலேயே வாங்கிக் கொண்டார்.
இன்று மீண்டும் அந்த பஞ்சாபியை நாங்கள் சந்திக்கவில்லை. ஏனென்றால் அவரை சந்தித்தால் இன்றும் டீ கொடுத்து உபசரிப்பார்.
அது அவரை தொந்தரவு செய்வது போல் இருக்கும் என்பதால் நாங்கள் அதை தவிர்த்துக் கொண்டோம்.

அப்போதும் எனது தொலைபேசிக்கு பல அழைப்புகளை மேற்கொண்டேன்.
ஆனால் யாரும் அதை எடுத்து பதில் அளிக்கவில்லை.

அதன் பிறகு எனது தங்கை அண்ணே இங்க ஸ்டீரீட் மார்க்கெட் என்று இருக்கிறதாம் அங்கே பொருட்கள் எல்லாம் மிக குறைந்த விலையில் கிடைக்குமாம். எனது பிரென்ட் ஒருத்தி என்னிடம் சொல்லியிருந்தாள் என்று சொன்னார்.
சரி என்று ஸ்ட்ரீட் மார்க்கெட் ஷாப்பிங் இன் பட்டாயா என்று கூகுளில் இன்புட் செய்தேன்.
அது மூன்று நான்கு இடங்களை ஸ்ட்ரீட் மார்க்கெட் என காண்பித்தது.
அதில் எங்கள் ஓட்டலுக்கு அருகாமையில் எந்த ஸ்ட்ரீட் மார்க்கெட் இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஸ்ட்ரீட் மார்க்கெட் நியர் மீ என்று இன்புட் செய்தேன்.
அது இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு ஸ்ட்ரீட் மார்க்கெட் இருப்பதாக தெரிவித்தது.
‘சரி அங்கே போகலாம் “என்று முடிவு செய்து டுக் டுக் வாகனத்திற்காக வெகு நேரம் காத்திருந்தோம்
ஆனால் ஒன்று கூட காலியாக வரவில்லை.
சரி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து எனது அலைபேசியில் தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற grab app ஐ டவுன்லோட் செய்துவிட்டு அதன் மூலம் ஒரு டாக்ஸியை புக் செய்தேன்.
மூன்று நிமிடத்தில் டாக்ஸி வந்தது.
அதில் ஏறி 25 நிமிட பயணத்திற்கு பிறகு அந்த ஸ்ட்ரீட் மார்க்கெட் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.
மாலை வேலை மற்றும் நகரின் முக்கிய பகுதி என்பதாலும் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததாலும்அந்த இரண்டரை கிலோ மீட்டருக்கு 25 நிமிடங்கள் நாங்கள் செலவழிக்க வேண்டியது இருந்தது. நமது சென்னையும் அப்படித்தானே என்று மனதில் நினைத்துக் கொண்டு டாக்ஸி டிரைவருக்கான கட்டணம் 160 தாய் பாட்டைக் கொடுத்தேன்.
அந்த வாகன ஒட்டி எங்களை இறக்கிய இடம் ஒரு மிகப்பெரிய மால்.
நான் அந்த ஓட்டுனரிடம் நாங்கள் ஸ்ட்ரீட் மார்க்கெட் வரவேண்டும் என்றுதான் கூகுளில் குறிப்பிட்ட முகவரியை டைப் செய்து இந்த டாக்ஸியில் வந்தோம்.
ஆனால் இங்கே பார்த்தால் மிகப்பெரிய மால்தான் இருக்கிறது என்று கேட்டேன்.
அதற்கு அவர் மாலுக்கு அடுத்த பக்கத்தில் அந்த ஸ்ட்ரீட் மார்க்கெட் இருப்பதாக தெரிவித்தார்.
“ஓகே தேங்க்ஸ்” என்று அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு மாலுக்கு அடுத்த பக்கத்தில் பார்த்தால் நாங்கள் தேடி வந்த ஸ்ட்ரீட் மார்க்கெட் இருந்தது.
அங்கே சிறு சிறு கடைகளாக பல்வேறு விதமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அநேகமாய் இருந்தது.
டோபா சவுரி முடி மற்றும் மேனக்குயின் கூட அங்கு இருந்தது.
அங்கே என் தங்கை விலை குறைவாக இருக்கிறது என்று சொல்லி சில பேக் அலங்கார பொருட்களையும் தனது பேத்திக்கு அழகி ஆடை ஒன்றும் வாங்கினார்.
நானும் மற்றொரு தங்கைக்கு கொடுப்பதற்காக 400 தாய் பாட் என்ற விலையில் ஒரு பேக் வாங்கினேன்.
அந்த கடைகள் இருந்த பகுதியில் ஒரு மூலையில் ஒருவர் சிறிய கொட்டில் அமைத்து அதனுள் சில ஆடுகளை வைத்திருந்தார். அதற்கு அடுத்து ஒரு நபர் பன்றி குட்டிகளை அதே போல அடைத்து வைத்திருந்தார். ஒருவேளை விற்பனைக்காக வைத்திருக்கிறார்களோ என்று அருகில் சென்று பார்த்தல் 50 தாய்ப்பாட் கொடுத்து ஒரு சிறிய புல்லுக்கட்டை வாங்கி அதை அந்த ஆடுகளுக்கு கொடுக்கிறார்கள்.
அதேபோல் பன்றி குட்டிகளுக்கும் குச்சி தீவனம் அங்கு வைக்கப்பட்டு 50 தாய் பாட்டுக்கு சிறிதளவு தீவனம் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு அதை வாங்கி மக்கள் அந்த பன்றி குட்டிகளுக்கு உணவு ஊட்டுவதாக இருந்தது.
இது நல்ல ஒரு உத்தியாக காணப்பட்டது.
விற்பனை செய்வதிலும் லாபம். ஊரார் பணத்தில் தன்னுடைய ஆடுகளுக்கும் பன்றிகளுக்கும் தீவனம் கொடுத்து வளர்ப்பது ஒரு லாபம்.
எங்களுக்கு அதை பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது.
விடுவேனா அதையும் உங்களுக்காக கிளிக் செய்து கொண்டேன்.

அந்த கடைகளின் ஒரு பகுதி ஸ்ட்ரீட் ஃபுட் கடைகளாக இருந்தது.
இரவு உணவையும் அங்கேயே முடித்து விடலாம் என்று என் தங்கையை கூறினார்.
ஆனால் எனக்கு என்னவோ இந்த வேளை ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம் போல் தோன்றியது.
ஆனால் என் தங்கையோ சென்னை திரும்பிய பிறகு சாப்பிடுவதெல்லாம் இந்தியா உணவுகள் தானே. எனவே இங்கே தாய்லாந்து உணவுகளை உண்போம் என்று சொல்லி எனது முடிவை மாற்றி விட்டார்.
சரி என்று அங்கு இருக்கும் உணவு கடைகளில் பெரிதாக இருந்த ஒரு உணவு கடையில் அமர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டோம்.
பிறகு மீண்டும் grab app மூலமாக டாக்ஸி புக் செய்து எங்களது ஹோட்டலுக்கு திரும்பினோம்.
அப்போதும் எனது இரண்டாம் அலைபேசிக்கு பலமுறை கால் செய்து பார்த்தேன் யாரும் எடுத்து பதில் அளிக்கவில்லை.
இன்டர்நேஷனல் ரோமிங் பேங்க் போட்டதும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிறிது நேரம் கதைகளை பேசிவிட்டு அவரவர் அறைகளுக்கு சென்றோம்.
இன்றுடன் பட்டாயாவில் எங்களது பயணத்திட்டம் முடிவுற்றது.
நாளை காலை ஓட்டலை செக் அவுட் செய்து கொண்டு பேங்க்காக் புறப்பட வேண்டும.
எனவே தாய்லாந்து பயண செலவோடு அந்த கைபேசி வாங்கிய தொகையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டது சரிதான் என என் உள்ளம் ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்தது.
இந்த கைபேசியினால் நேற்று இரவும் சரியான தூக்கம் இல்லை. எனவே இன்று விரைவிலேயே தூக்கம் என் கண்களை தழுவ ஆரம்பித்தது.
மிகவும் களைப்பாகவும் இருக்கிறது. ஓய்வு எடுக்க வேண்டும்.
(தொடரும் )
- அலெக்ஸ்சாண்டர்

