இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 22)

உலக காண்டாமிருக தினம் பூமியின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கம்பீரமான உயிரினம் சுற்றித் திரிகிறது. அதுதான் காண்டாமிருகம். அதன் வலிமை மற்றும் தோற்றம் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்களின் பார்வையை தன்வசம் அது வைத்துள்ளது. இதன் காரணமாகவே உலகெங்கிலும் ஆண்டுதோறும், செப்டம்பர் 22ம் தேதி, உலக காண்டாமிருகங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இத்தகைய அற்புதமான உயிரினத்தைக் கொண்டாடுவதற்கும், அவற்றின் பாதுகாப்புக்குக் குரல் கொடுப்பதற்கும் நாம் ஒன்று கூடுவோம். ஆம்.. அழிந்து வரும் 5 காண்டாமிருக இனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக காண்டாமிருக தினம் (World Rhino Day) கொண்டாடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் உலக வனவிலங்கு நிதியம் 2010 ஆம் ஆண்டில் உலக காண்டாமிருக தினத்தை அறிவித்தது. 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்பட்டது.

வெள்ளை சாக்லேட் தினம் இந்த நாள் அனைத்து வெள்ளை சாக்லேட் பிரியர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன குறிப்பாக ஒயிட் சாக்லெட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும். இச்சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். வெள்ளை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உலக ரோஜா தினம்! ரோஜா மலரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அத்தகைய பெருமை வாய்ந்த ரோஜாமலருக்காக இன்று உலக ரோஜா தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதும் அந்த நாளை உலக ரோஜா தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிலும் உடலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ரோஜா தினம் அவர்களுக்காகவே மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காகவும் உற்சாக படுத்துவதற்காகவும் அவர்கள் தனியாள் இல்லை என்று கூறுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது கனடாவை சேர்ந்த சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமிக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் உலக ரோஜா தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் அந்த சிறுமி தன்னம்பிக்கை காரணமாக 6 மாதங்கள் உயிர் வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேலம் சூனியக்காரர்கள் வழக்குகளின் கடைசி அணியாக, 8 சூனியக்காரர்ளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நாள் சேலம் என்பது, அமெரிக்காவின் மாசாசூசெட்சில் உள்ள ஒரு கடற்கரை நகரம். 1692-93இல் நடைபெற்ற இந்த வழக்குகள், அமெரிக்க வரலாற்றில் மிக அதிக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட சூனியக்காரர்கள் வேட்டையாகும். தங்களுக்கு மாந்திரீக சக்திகள் உள்ளது என்று கூறிக்கொள்ளும் சூனியக்காரர்கள், தங்கள் நலனுக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ அந்தச் சக்தியைப் பயன்படுத்துவதான அச்சம் என்பது மிகப் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. கி.மு. 18ஆம் நூற்றாண்டுகால ஹம்முராபியின் சட்டங்களிலேயே இதைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. வரலாற்றின் பல காலகட்டங்களிலும், சூனியக்காரர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலும் மரண தண்டனையான இது, உயிருடன் எரித்தல் முதலான கொடூரமான முறைகளில் நிறைவேற்றப்படும். மதங்களின், குறிப்பாக கிறித்துவத்தின் வளர்ச்சியும் தாக்கமும் அதிகமானபின் சூனியக்காரர்களின் செயல்கள் சாத்தானுடன் தொடர்புபடுத்தப்பட்டன. சாத்தானுடன் நேரடித் தொடர்புடையவகள் என்று சூனியக்காரர்களை ப்ராட்டஸ்டண்ட் பிரிவு கூறியது. தொடக்க கால நவீன ஐரோப்பாவில், சூனியக்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது ஏராளமான வழக்குகள் நடத்தப்பட்டு, தண்டனைகள் தரப்பட்டன. 15ஆம் நூற்றாண்டு தொடங்கி, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இவ்வாறு ஏராளமானவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, சூனியக்காரர்கள் வேட்டை என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. 1450-1750 காலத்தில், ஐரோப்பாவில் மட்டும் சட்டப்படி மரண தண்டனை வழங்கப்பட்ட சூனியக்காரர்கள் சுமார் ஒரு லட்சம் வரை என்றும், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டவர்கள் இதைவிட அதிகம் என்றும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு மந்திர சக்திகள், சாத்தானுடன் தொடர்பு ஆகியவை இருக்கலாம் நம்பிக்கைகள் தகர்ந்ததையடுத்து, 1735க்குப்பின் இவை பொதுவாக பித்தலாட்டம் என்று வகைப்படுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டன. ஆனாலும் இன்றுவரை, உலகின் பலபகுதிகளிலும் சூனியத்தை நம்புதலும், அப்படியானவர்களை அச்சத்தில் வேட்டையாடுவதும் நடந்தே வருகிறது. சவூதி அரேபியா, கேமரூன் ஆகிய நாடுகளில் இன்றும் சூனியத்துக்கு எதிரான சட்டங்கள் உள்ளன.

உலக கார் இல்லாத தினம்’ வாகன பெருக்கத்தை குறைக்கும் வகையிலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஒன்வெப்டே இத்தினம் 2006-லிருந்து கொண்டாடப்படுகிறது. சூசன் பி.கிராபோர்டு என்பவர் இவர் இணையதளத்தை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாளை உருவாக்கினார்.

பாப்லோ நெருடா நினைவுநாளின்று புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக் கொல்லும்போது அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடாவினுடையது. இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்…பாப்லோ நெருடா எத்தகையவர் என்று. 1904ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சிலி நாட்டில் பாரல் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார் பாப்லோ நெருடா. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ‘ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ’. ஆனால் தனது பெயரை பாப்லோ நெருடா என்று மாற்றிக்கொண்டார். அதற்கு காரணம், செக்கோஸ்லேக்கியா நாட்டின் புரட்சிக் கவிஞர் நெருடா மீதான பற்றுதான். இதே பெயரில் காதல், புரட்சி என பல்வேறு தளங்களில் கவிதைகள் எழுதினார். இதனால் அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. புகழ்பெற்ற கவிஞரான பிறகு அவருக்கு பதவி தேடி வந்தது. கம்யூனிச சிந்தனையாளரான இவர், சிலியின் வெளியுறவுத் தூதராக ஸ்பெயின் நாட்டில் நியமிக்கப்பட்டார். ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டு கலவரத்தில், புரட்சிப் படையினருக்கு கம்யூனிசத்தை கற்றுக் கொடுத்தார். உள்நாட்டில் புரட்சியைத் தூண்டியதாக ஸ்பெயின் நாடு அவரை வெளியேற்றியது. தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய நெருடா, தனது நாட்டிலேயே முதலாளித்துவம் கோலோச்சுகிறதே என்று கொதித்தெழுந்தார். ‘‘நமது நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார்” என அதிபருக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தனது கவிதைகள் மூலமாக எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்ததுமே, ‘உள்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்’ என்று குற்றம் சுமத்தி அவரை கைது செய்ய முனைந்தது அரசு. இதை அறிந்த நெருடா, சிலியில் இருந்து வெளியேறி, ரஷ்யா, கியூபா, பொலிவியா நாடுகளுக்கு சென்றார். அங்கு நடந்த புரட்சிப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். வெளிநாட்டுத் தூதராக இலங்கை, ரங்கூன், சிங்கப்பூர், அர்ஜென்டினா, பாரீஸ் போன்ற நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். 1964ம் ஆண்டு பிரெஞ்சு தத்துவவாதியான பால் சார்த்தருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர், பாப்லோ நெருடாவிற்குதான் இந்த பரிசை கொடுத்திருக்க வேண்டும் என கூறி ஏற்க மறுத்துவிட்டார். இதன்பிறகு 1971ம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிலி நாட்டில் 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்களும், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாப்லோ நெருடா புதிய ராணுவ அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்தார். விமர்சனம் செய்தார். அதனாலேயே அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். மருத்துவ வசதிகள் தடுக்கப்பட்டன. எந்த மருத்துவமும் கிடைக்காததால் 1973ம் ஆண்டு செப்.23ம் தேதி அவர் மரணம் அடைந்தார். மரணம் அடைந்தார் என்பதைவிட, கொன்றுவிட்டனர் என்றே சொல்லலாம். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். அவர் எழுதிய ‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே’ என்ற கவிதைகள் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு ஊர்வலத்தில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் ரத்தம் கொதித்தது. கோபம் கொண்டு கொதித்தெழுந்த மக்கள், ராணுவ ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்தனர். பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்திற்கு எதிரான புரட்சியாக மாறி சிலி நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது. தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெருடாவும் “பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான்” என்று பாடியுள்ளார். பிரிவினை சக்திகள் தலைதூக்கும் இக்காலத்தில் நெருடாவின் இந்த வரிகள் அதிகமாகவே தேவைப்படுகின்றன.

சீக்கிய மதத்தின் முதல் குருவும், ஸ்தாபகருமான மகாகுரு குருநானக் நினைவு நாளின்று ‘நேர்மையான வாழக்கையை ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சொன்ன குருநானக், இன்றைய பாகிஸ்தானில், லாகூர் அருகேயுள்ள டல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே தெய்விக அனுபவங்களால் திளைத்திருந்த குருநானக், 1499-ம் ஆண்டு அவரது முப்பதாவது வயதில் ‘ஞானம்’ பெற்றுத் தெய்விக நிலையை அடைந்தார். ஆரம்பத்தில் பல்வேறு அற்புதச் செயல்களைச் செய்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தினார். பின்னர், ஆன்மிகக் கருத்துகளை மக்களிடையே போதித்தார். மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைந்தார். மதத்தால் வேறுபட்டுக் கிடந்த மக்களிடையே அன்பை விதைத்து ஒன்றுபடுத்தினார். ‘நாம் கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டும். அது மதங்களால் ஆனதல்ல… அன்பு வழியிலான பாதை’ என்று விளக்கமளித்தார். மத ஒற்றுமைக்கு மகத்தான சேவை செய்தவர் குருநானக். இவரின் போதனைகள் யாவும் அன்பை வலியுறுத்தியே சொல்லப்பட்டன. இதனாலே சீக்கிய மதம் இவரது காலத்தில் விரைவாகப் பரவியது. இவர் தனது வாழ்வில் நான்கு நெடும் பயணங்களை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். திபெத், தென் இந்தியா, பூடான், பாக்தாத், மெக்கா, மதினா போன்ற பகுதிகளுக்குச் சென்று, மக்களைச் சந்தித்துப் பிரசங்கம் செய்தார். இவரைப் பின்பற்றிய மக்கள் இவரது புதிய மார்க்கத்தை ‘சீக்கியம்’ என்றார்கள். அந்த மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் ‘சீக்கியர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். உதவி செய்தல், மோசடி இல்லாத நேர்மையான வாழ்வு, ஆண்டவனின் நாமத்தை உச்சரித்தல், எல்லா நேரங்களிலும் கடவுளை தியானித்தல், முன்னோர்களை மதிக்க வேண்டும் ஆகிய கொள்கைகளைக் கடமையாக்கினார். எல்லாவித பற்றுகளையும் விட்ட ஞான வடிவான பெரியவர்களின் வழிக்காட்டுதலின்படியே ஒவ்வொருவரும் நடக்க வேண்டும், முன்னோர்களை மதிக்க வேண்டும் என்று போதித்தார். இவரது போதனைகள் அடங்கிய புனித நூல் ‘குருகிரந்த சாஹிப்’. உலக மக்கள் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் என்று வலியுறுத்தியவர் குருநானக். மனிதர்களிடையே பாகுபாடே இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய குருநானக் மறைந்த இந் நாளில் அவரின் பாதம் பணிவோம்.

புலவர் குழந்தை நினைவு நாள் (ஜூலை 1, 1906 – செப்டம்பர் 22, 1972) இவர் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் அந்த காலத்தில் அந்த ஊரில் எவருக்கும் கையொப்பம் செய்யவும் தெரியாது. இவர் தாமாக தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று கொண்டிருந்த போது அந்த ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தார். தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவருடைய பொழுது போக்கு பாட்டெழுதுவது. 1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். 38 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் 1924 முதல் 1962 முடிய 38 ஆண்டுகள் ஆசிரியராக தொண்டாற்றினார். 1941 முதல் 1962 வரை பவானி நகரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு. அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரிசையில் 3, இலக்கணப் பாங்கில் 3 , உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன. குழந்தை எழுதிய நூல்களுள் ”இராவண காவியம்” புகழ் பெற்றது. இவரது நூல்கள் 2006 இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் ஆர். பாலச்சந்திரன் நினைவு நாள் கல்வியாளர், விமரிசகர், கவிஞர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும் பேராசிரியருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; சாகித்திய அகாதெமியின் நிர்வாக் குழு உறுப்பினராக இருந்தார். தமிழ் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராகவும் திகழ்ந்தார். “வானம்பாடி” என்ற தமிழ்ப் புதுக்கவிதைக் குழுவில் முக்கிய பங்காற்றியவர். சர்ரியலிசம், பாரதியும் கீட்சும் ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு அவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும். கவிஞர்கள் மீரா, மு. மேத்தா, ராஜம் கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை தவிர சிறு பத்திரிகைகளும் நடத்தியிருக்கிறார்.

நடிகை & பாடகி எஸ். வரலட்சுமி காலமான தினமின்று எஸ். வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. தெலுங்கு தாய்மொழி என்றாலும் அட்சர சுத்தமான இவரது தமிழ் உச்சரிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்களில், அவர் எழுதிய தஞ்சை வட்டார வழக்கில் அமைந்த நீள நீள வசனங்களையும் அற்புதமாகப் பேசி நடித்தவர். அதனாலேயே அவருடைய பல படங்களிலும் வரலட்சுமிக்குத் தவறாமல் முக்கிய வேடங்கள் அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, ‘அடி, மகமாயி’ என்ற வசனமும் அழுத்தம் திருத்தமாக அதனை வரலட்சுமி உச்சரிக்கும் பாங்கும் மிக இயல்பான ஒன்று. அதே போல, ஒரு படத்தில் எம்.ஜி.ஆரின் அம்மாவாக நடிக்க வைக்கலாம் என இயக்குநர் விரும்பியதாகவும், ஆனால் வரலட்சுமியின் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதால் தனது அம்மாவாக அவர் நடித்தால் பொருத்தமாக இருக்காது என எம்.ஜி.ஆர் நிராகரித்ததாகவும் அக்கால சினிமா பத்திரிகைகள் கூறுகின்றன. பின்னர் அதே எம்.ஜி.ஆர் ‘நீதிக்குத் தலை வணங்கு’ படத்தில் எஸ். வரலட்சுமியை தனக்கு தாயாக நடிக்க வைத்தார். ஆனால், வரலட்சுமி இப்படத்தில் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ பாடல் என்றைக்கும் கேட்கும் பாடலாய் நிலைத்து நிற்கிறது. ‘கந்தன் கருணை’, ‘ஆதி பராசக்தி’, ‘காரைக்கால் அம்மையார்’ ஆகிய படங்களில் தேவியராக நடித்தார். ‘ராஜ ராஜ சோழன்’ படத்தில் ராஜராஜனின் அக்காள் குந்தவை பாத்திரத்தில் நடித்தார். பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்த இப்படத்திலும் இவரின் குரலில் பாடல் இடம் பெற்றது. அவர் நடித்த கடைசிப் படம் ‘குணா’. மிக முதிர்ந்த தோற்றத்தில் நடித்த இதுவே அவரின் இறுதிப்படமும் ஆகும் .

உலகுக்கு மின்சார ஒளி தந்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே பிறந்த நாள் இன்று. மைக்கேல் பாரடே பிரிட்டனைச் சேர்ந்தவர். இவர் 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தார். மின் காந்தவியல், மின் வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் உள்ள சோதனைச் சாலைகளில் பொருள்களைச் சூடாக்குவதற்காகப் பயன் படுத்தப்பட்டுவரும் பன்சன் சுடர் அடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டறிந்தவர் இவர்தான். மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக பாரடேக்கு முன்பும் கூடப் பலர் பல முயற்சிகளைச் செய்துள்ளனர். 1831ஆம் ஆண்டு பாரடேவும் மின்சாரம் பற்றிய முக்கியமான ஆய்வுகளைச் செய்தார். அது மற்றவர்களின் ஆய்வுகளை விட மேம்பட்டதாக இருந்தது.அதற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு சீமென்ஸ் என்ற விஞ்ஞானி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவியைக் கண்டறிந்தார். அதற்கும் 23 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தார்.

எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்த நாள் இன்று. எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை எந்தப் பூச்சுகளும் இல்லாமல் பதிவு செய்தவர் அசோகமித்திரன். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு பார்வையாளனாகப் பார்த்து அதன் மாந்தர்களின் துயரை, கசப்புணர்வை, எள்ளலை தனது எழுத்தாக்கினார். சமூகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத உதிரிகளாக வாழும் மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளைச் சித்திரமாக்கியிருப்பார். பெரும் கோட்பாடுகளையோ, நீதி போதனைகளையோ தன் எழுத்துகளில் நுழைத்தவரல்ல அசோகமித்திரன். அவரின் கதைகள் யதார்த்த வாழ்வின் தரிசனங்களைக்கொண்டிருந்தன. நாடக அரங்கில் வெளிச்சம்படாத அரங்கின் மூலையில் அமர்ந்துகொண்டே, நாடகம் முடிந்து திரைச்சீலைகளைக் கழட்டி மடிக்கும் தொழிலாளியின் சம்பாஷனைகளைக் கவனித்துச் சொல்பவராகவே அவர் இருந்துள்ளார். 200-க்கும் மேலான சிறுகதைகள், 9 நாவல்கள், சில கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார், அசோகமித்திரன். அதில் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் கையாண்டிருக்கிறார். அசோகமித்திரனின் ஒவ்வொரு நாவலையும் ஒவ்வொருவர் ‘கிளாசிக்’ வரிசையில் சேர்த்திருப்பார்கள். அதில் மிக முக்கியமான நாவல் ‘கரைந்த நிழல்கள்’. திரையரங்கின் இருளை, செவ்வகமாகக் கிழித்துக்கொண்டு திரையில் தோன்றும் காட்சிகளுக்கு கண்கள் விரிய விசிலடித்துக் கைதட்டியிருப்போம். காட்சிகளோடு ஒன்றிப்போய் அழுதிருப்போம். வயிறு வலிக்க சிரித்திருப்போம். அந்த சினிமா உருவாக்கத்தில் உழைத்தவர்கள் பல்லாயிரம் பேர். நமது கைதட்டல்களோ, விசில் சத்தங்களோ ஒருபோதும் கேட்டிராதவர்கள் அவர்கள். திரைக்குப் பின்னாலான அவர்களின் உலகத்தை ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் உயிர்ப்பித்திருப்பார். சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் கரைந்து போன நிழல்கள்தாம் அந்த மனிதர்கள். பாடல் காட்சிகளில் நடனமாடும் குரூப் டான்சர்கள், உதிரி கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள், வறுமையிலிருக்கும் ஒரு புரொடெக்சன் மேனேஜர், ஒரு நடிகை என நாவலில் பல கதாபாத்திரங்கள் இடம்பெறும். ‘வெற்றி’ என்கிற மந்திரச் சொல்லுக்காக மனிதர்கள் படும்பாட்டை, துரோகத்தை லாகவமாகக் கையாண்டிருப்பார். சினிமாத்துறை சார்ந்து நடக்கும் கதைதான் என்றாலும் அடிப்படை மனித மனதின் சாரத்தை ஒவ்வொரு அத்தியாயத்திலும் புலப்படுத்தியிருப்பார். உண்மை புனைகதையைவிட விசித்திரமானது என அவர் சொல்வார். இந்தக் கதாபாத்திரங்களின் தொழிலை, மனநிலை வாழ்வாகக் கொண்டவர்களின் நிலை விசித்திரமான ஒன்றாகத்தான் இருக்கும். 1996 இல் “அப்பாவின் சிநேகிதர்” சிறுகதை தொகுப்புக்காக அசோகமித்ரனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!