மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர்
திரு அலெக்சாண்டர்.துணைப்பதிவாளராக கூட்டுறவுத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உலக நாடு கள் பலவற்றை சுற்றி ப் பார்த்துக்கொண்டு வருபவர்.
நமது வாசகர்களுக்காக
முதலில் தாய்லாந்து சுற்றுபயணம் பற்றி ஒரு பயணக் கட்டுரையை வழ்ங்கியிருக்கிறார்.
முன்னுரை+
நான் கடந்த மார்ச் 8ம் தேதி திருச்சியில் உள்ள கலைக்காவிரி கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் என் இளைய தங்கையின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
இரவு உணவு அருந்திவிட்டு ஹாலில் சுற்றிலுமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது என் தங்கை “அண்ணா இந்த வெக்கேஷனுக்கு நாம் எங்கேயாவது வெளிநாடு சென்று வரலாம் “என்று கேட்டுக் கொண்டார்.
“சரி எங்கே செல்லலாம் “என்று ஒவ்வொரு இடமாக யோசித்துக் கொண்டிருந்த பொழுது தாய்லாந்து செல்லலாம் என எல்லோரும் ஏகோபித்த முடிவு செய்தோம்.
எப்படி தாய்லாந்து செல்வது ஏதாவது பேக்கேஜ் டூர் மூலமாக செல்வதா அல்லது தனிப்பட்ட முறையில் செல்வதா என்பது குறித்து விவாதித்தோம்.
அப்போது “எந்தவிதமான அறிமுகமும் இல்லாத ஒரு நாட்டுக்கு நாம் தனியாக செல்வது உகந்ததல்ல. எனவே ஏதாவது ஒரு நிறுவனத்தின் பேக்கேஜ் டூர் சென்று வரலாம் “என்று நான் ஆலோசனை சொன்னேன்.
என் தங்கையும்,தங்கையின் கணவரும் அதை ஏற்றுக் கொண்டு, “நீங்களே ஏதாவது ஒரு நிறுவனத்தில் விசாரித்து ஏற்பாடு செய்யுங்கள் “என்று சொல்லிவிட்டார்கள்.
சரி என்று Google search மூலமாக பல நிறுவனங்கள் குறித்த விவரங்களை ஆராய்ந்து பார்த்தேன்.
அதில் ட்ரிப் பேக்டரி என்னும் நிறுவனம் நியாயமான விலையில் நல்ல வசதிகளுடன் தாய்லாந்துக்கு 6 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்வது கண்டு திருப்தி அடைந்து அந்த நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
அந்த நிறுவனத்தின் பெண்மணி சுற்றுலா பேக்கேஜ் தொடர்பான முழு விவரங்களையும் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்கள்.
அதனை நாங்கள் முழுவதுமாக படித்து ஆராய்ந்து இறுதியாக அந்த நிறுவனத்தின் மூலமாகவே தாய்லாந்து சுற்றுலா பயணம் செல்வது என முடிவெடுத்தோம்.
இவை அனைத்தும் ஒரு வார காலத்தில் நடந்து முடிந்தது.
அந்த நிறுவனம் ஒவ்வொருவருக்கும் ரூ. 50,000 எனவும் Air Asia விமானத்தில் பயணம் எனவும் தெரிவித்தார்கள்.
எனது தங்கை” Air Asia வேண்டாம் வேறு விமானம் பார்க்க சொல்லுங்கள்” என்று கூறி விட்டார். (Air Asia என்றாலே அவ்வளவு பயம்)
எனவே Indigo விமானப் பயணத்திற்கு கூடுதலாக 2000 சேர்க்கப் பட்டு தலா ரூ. 52,000 என முடிவு செய்து முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் அனுப்ப கேட்டுக் கொண்டார்கள்.
ஏனென்றால் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்தால்தான் இந்த தொகைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்கள்.
எனவே முன்பணமாக நாங்கள் செலுத்த வேண்டிய தலா 30 ஆயிரத்தை மூன்று பேருக்கும் மொத்தமாக 90 ஆயிரம் கூகுள் பே மூலம் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தோம்.
அவர்களும் அதனை உறுதி செய்து ரசீது அனுப்பி விமான டிக்கெட் பதிவு செய்து அதையும் அனுப்பி வைத்தார்கள்.
மே மாதம் ஏழாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 6 பகல் 5 இரவு என ஐட்டனரியுடன் முடிவு செய்யப்பட்டது.
அன்றிலிருந்து எங்களது தாய்லாந்து சுற்றுலா பயணத்திற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.
நானும் சென்னை திரும்பி வந்து விட்டேன்.
திட்டமிடப்பட்ட படி மே 6ஆம் தேதி மாலை திருச்சியில் இருந்து தங்கையும தங்கையின் கணவரும் இரயில் மூலம் புறப்பட்டு இரவு 9.30 க்கு தாம்பரம் வந்தடைந்தார்கள்.
நான் தாய்லாந்து பயணத்திற்கான அனைத்து தயாரிப்புகளுடன் கால் டாக்ஸியில் தாம்பரம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு நேராக சென்னை விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள விருதுநகர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கே இரவு உணவை பலவித உணவு வகைகளுடன் உட்கொண்டோம்.
ஏனென்றால் அடுத்த ஆறு நாட்களுக்கு சென்னை உணவு கிடைக்காது என்பதால் தான்.
ஆறாம் தேதி இரவு சரியாக இரவு 12:30க்கு சென்னை விமான நிலையம் சென்றடைந்தோம்.
அதிகாலை 3.50 க்கு எங்களது விமானம் என்பதால் போதுமான அளவு நேர அவகாசம் இருந்தது.
எனவே எந்தவித அவசரமும் இன்றி நிதானமாக செக் இன் செய்து விட்டு பின்னர் செக்யூரிட்டி செக்குக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம்.
ஒரு வழியாக செக்யூரிட்டி செக் முடிந்து immigration ல் சீல் வாங்கிவிட்டு 7ம்தேதி அதிகாலை 1.45 மணிக்கு 111 கேட்டுக்கு அருகில் சென்று அமர்ந்தோம்.
ஒவ்வொருவரும் தங்களது செல்போன்களை கையில் எடுத்து நேரத்தை கடத்தினோம்.
அதிகாலை 3 மணிக்கு போர்டிங் தொடங்கியது.
எங்களுக்கு வரிசையாக மூன்று இருக்கைகளை நான் தெரிவு செய்திருந்தவாறு ஒதுக்கப்பட்டு அதில் அமர்ந்து கொண்டோம். (அது தான் (seat selection என்று ஒரு வசூல் தனியாக நடத்துகிறார்களே)

சரியாக 3.50 க்கு இண்டிகோ விமானம் ஓடுதளத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
சென்னையில் இருந்து பேங்காக் செல்ல 3 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே விமானம் பறக்கும் பயண நேரமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
விமானம் குறிப்பிட்ட உயரத்தில் பறக்கத் தொடங்கியவுடன் snacks மற்றும் காபி கொடுத்தார்கள்.
தாய்லாந்து நேரப்படி சரியாக காலை 9 மணிக்கு பேங்க்காக் சுவர்ணபூமி பன்னாட்டு விமான நிலையம் சென்று விமானம் தரை இறங்கியது.
சென்னை விமான நிலையத்தில் இருக்கும் போதே தாய்லாந்தில் எனது கைபேசி வேலை செய்வதற்காக தாய்லாந்து சிங்கப்பூர் ஜப்பான் கொரியா உட்பட நாடுகளுக்கான East Asia இன்டர்நேஷனல் ரோமிங் பேக்கை ரூபாய் 1,551 செலுத்தி online ல் ரீசார்ஜ் செய்து கொண்டேன்.
பேங்க்காக் ஓடு பாதையில் விமானம் லேண்டிங் ஆனவுடன் எனது கைபேசியை பிளைட் மோடில் இருந்து மாற்றியவுடன் எனக்கு குறும் செய்தி வெல்கம் டு தாய்லாந்து என்று வந்தது. அதன் பின்பு எனது கைபேசி நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு டேட்டா வேலை செய்ய ஆரம்பித்தது.
உடனே தங்கையின் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தினருக்கும் reached Bangkok safely என WhatsApp ல் செய்தி அனுப்பி சோதனை செய்து பார்த்தேன். எல்லாம் சரியாக வேலை செய்தது. பின்னர் மகளுக்கு வாட்ஸ் அப்பில் கால் செய்து தகவல் தெரிவித்தேன். எனது கைபேசி இன்டர்நேஷனல் ரோமிங் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொண்டேன்.

பத்திரமாக விமான பயணம் நடைபெற்றதற்காக இறைவனுக்கு மனதிற்குள் நன்றி செலுத்திக்கொண்டு இமிகிரேஷன் கவுண்டருக்கு சென்றோம்.
அங்கு எங்களை பெரிதாக கேள்விகள் ஒன்றும் கேட்கவில்லை.
“டூரிஸ்டாக வந்திருக்கிறீர்களா” என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டார்கள்.
உடனே எங்களுடைய பாஸ்போர்ட்டில் இம்மிகிரேஷன் சீல் அடித்து அனுப்பி விட்டார்கள்.
அதன் பின்பு விமான நிலையத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு சென்று எங்களது காலை உணவை தாய்லாந்து உணவாகிய நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளுடன் முடித்துக் கொண்டு வெளியே வந்தோம். எங்களுக்காக வாகன ஓட்டி கையில் எனது பெயர் கொண்ட பதாகையுடன் காத்திருந்தார்.
அவரிடத்தில் ஆங்கிலத்தில் விசாரித்தோம்.
அவருக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்ததால் பிரச்சனை ஏதுமில்லை. .
அவருடன் சென்று வாகனத்தை ஏறினோம். வாகனம் நேராக பட்டாயா நகரை நோக்கி புறப்பட்டது.
ஏனென்றால் முதல் மூன்று நாட்களுக்கு பட்டாயாவில் தான் எங்களுடைய ஐட்டனரி இருந்தது.
(தொடரும் )
–அலெக்சாண்டர்

