இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 27)

உலகின் முதல் கின்னஸ் சாதனைகள் புத்தகம் 198 பக்கங்களுடன் வெளியான நாள். கடந்த 1951ம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘சர்க்யூ பீவர்’ என்பவர் வேட்டையாடுவதற்காக ஆற்றங்கரையோரம் நடந்து சென்றார். அப்போது வானில் ‘கோல்டன் பிளவர்’ பறவைக் கூட்டம் ஒன்று சென்றது. உடனே தனது துப்பாக்கியை எடுத்து, அந்த கூட்டத்தை நோக்கி சுட முயன்றார். ஆனால், அதற்குள் பறவை கூட்டம், கண்ணுக்கே தெரியாத தொலைவுக்கு சென்றுவிட்டது. இது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மேலும், ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ‘உலகிலேயே மிகவும் வேகமாக பறக்கும் பறவையினம், அதுவாகத்தான் இருக்குமோ?’ என்று எண்ணினார். அது தொடர்பாக பல புத்தகங்களில் தேடிப் பார்த்தார். ஆனால், எங்கும் அதற்கான விடை கிடைக்கவில்லை. இதனால் அது தொடர்பாக நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன? என்று யோசித்தார். உடனே லண்டன் சென்று, அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டை சகோதரர்களை சந்தித்தார். மேலும், அவர்களிடம் தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். அந்த 3 பேரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ந் தேதி 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. அதில் உலகிலேயே மிகவும் பெரியது, மிகவும் சிறியது போன்ற விவரங்கள் அடங்கி இருந்தன. மேலும், அந்த ஆண்டு வெளியான புத்தகங்களில் அமோகமாக விற்பனையான புத்தகம் என்ற பெருமையையும் அது பெற்றது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களை பற்றிய செய்திகளோடு இந்தப் புத்தகம் வெளிவருகிறது. ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம், 1957 மற்றும் 1959 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை. ஆனால், அதற்கான காரணமும் வெளியிடப்படவில்லை. கின்னஸ் புத்தகம் பற்றிக்கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ம் ஆண்டு தகவல் இருந்தது. அதாவது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில் இடம் பிடித்தது. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது 40க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் (Rowland Hill) நினைவு நாள்.இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர் இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது மிகவும் நேரமெடுக்கும் ஒரு பணியாக இருந்தது ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒரு பென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. இவர் கண்டுபிடித்த முறையால் தபால் சேவையை மக்கள் எல்லோரும் எளிதில் பயன்படுத்த முடிந்தது.

தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். என்று அழைக்கப் பட்ட அ. ச. ஞானசம்பந்தன் நினைவு நாள் அ. ச. ஞானசம்பந்தனின் முதல் புத்தகமான இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகம் 1945ல் வெளியானது. இப்புத்தகமும், கம்பன் காலை (1950) மற்றும் தம்பியர் இருவர் (1961) ஆகிய புத்தகங்களும் அவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த செறிந்த அறிவுக்குச் சான்றாக அமைந்தன. பச்சையப்பாக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின் 1956 – 1961 வரை அகில இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராக வேலை பார்த்தார். 1959ல் தமிழ்ப் பதிப்பகங்களின் பணியகத்தின் செயலாளரானார். 1969 – 1972 வரை தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்தார். 1970ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியில் சேர்ந்து பின் 1973ல் அப்பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் தாகூர் ஓய்வுப் (Tagore emeritus professor) பேராசிரியாராகப் பணியாற்றினார். அவர் தனது கடைசி காலத்தைச் சென்னையில் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் கழித்தார். அவர் ஒரு சைவ சமய அறிஞராகவும் பாடநூல் தயாரிப்பாளர் மற்றும் தமிழ் விரிவுரையாளராகவும் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் 35 ஆராய்ச்சிப் புத்தகங்கள், 3 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஏராளமான பாடப் புத்தகங்களும் கட்டுரைகளும் ஆகும். 1985ல் கம்பன்: புதிய பார்வை என்ற அவரது இலக்கிய விமர்சன நூல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம் நினைவு நாள். இவர் 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமஸ் கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பல மொழிகளை அறிந்தவராய் இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.அமெரிக்க பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961-இல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார் . 1973 மற்றும் 1974-ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராகப் பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலை தியான தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார். இவருக்குத் தருமபுர ஆதீனம் “பல்கலைச் செல்வர்” என்ற விருதினையும், குன்றக்குடி ஆதீனம் “பன்மொழிப் புலவர்” என்ற விருதினையும் அளித்து சிறப்பித்தன. தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்மபூசன் விருதையும் பெற்றவர்.

இந்தித் திரைப்பட இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி நினைவு நாள் . இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோல் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன. இருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட சினிமாக்களின் முன்னோடி என அறியப்பட்டார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் பணியாற்றினார் . 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற முகர்ஜிக்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனியரால் கல்கத்தாவில் முதன் முதலாக ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் வார்க்கப்பட்டு வெளியிடப்பட்ட நாள்.. பணத்தை எண்ணும் நாம் அது எப்படி வழக்கத்தில் வந்தது என்பது பற்றி நினைத்து பார்த்திருக்கிறோமா? இந்திய ரூபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம். இந்தியாவில் முதல் ஒரு ரூபாய் நாணயம் 1542 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுத்தமான வெள்ளியில் 179 கிராம் எடை கொண்டதாக அந்த நாணயம் தயாரிக்கப்பட்டது. ஆப்கன் மன்னர் ஷேர் ஷா ஆட்சியில் தான் அந்த முதல் நாணயம் வெளியிடப்பட்டது. முதன் முதலாக இந்திய ரூபாய் நாணயங்கள் 1757 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ந்தேதி கல்கத்தாவில் தயாரிக்கப் பட்டன். கிழக்கிந்திய கம்பெனி நவாப் சிராஜ்யுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாணயச்சாலை ஒன்று நிறுவப்பட்டது. நவீன முறையில் முதலாவது நாணயச்சாலை 1829 ம் வருடம் ஆகஸ்ட் 1 ம் தேதி நிறுவப்பட்டது. அப்போது அந்த நாணயச்சாலையில் தினமும் 2 லட்சம் வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. காகிததினாலான நாணயம் 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. முதலில் பாங்க் ஆஃப் பெங்கால், பாங்க் ஆஃப் பம்பாய், மற்றும் பாங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன. ஆங்கிலேய அரசு 1861ஆம் ஆண்டு காகித நாணய சட்ட அறிமுகத்திற்கு பின் பிரிட்டிஷ் இந்திய அரசிற்கு காகித பணம் அச்சிடுவதற்கு ஏக போக உரிமை வழங்கப்பட்ட பின்னர் இது நடைமுறைப்படுத்தப்பட்டது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1952 ம் ஆண்டு மார்ச் 19 ம் தேதி அலிப்பூர் நாணயச்சாலை தொடங்கியது. இங்கு ஒரு நாளைக்கு 12 லட்சம் நாணயங்கள் அச்சிடப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் ரூபாய், அணா, துட்டு என்று அழைக்கப்பட்டு வந்த இந்திய நாணயம் பின்னர் நயா பைசா என்று மாறியது. ஆகஸ்ட் 15, 1950 அன்று, “அணா தொடர்” நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதுவே இந்தியக் குடியரசின் முதல் நாணயம். 1935-ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டது. அதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் நகரம் அதுவரை கண்டிராத மக்கள் திரளுடன் நடைபெற்ற மாநாட்டில்தான், நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) (சுயமரியாதை இயக்கம்) ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. வெள்ளைக்காரன் கொடுத்த கவுரவப் பட்டங்களைத் துறப்பது, பிரிட்டிஷ் ஆட்சி தந்த பதவிகளில் இருந்து விலகுவது, பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப் பட்டங்களை நீக்குவது, தேர்தல்களைப் புறக்கணிப்பது உள்ளிட்டவை அடங்கிய திராவிடர் கழகப் பெயர் மாற்றத் தீர்மானம், ‘அண்ணாதுரை தீர்மானம்’ எனும் பெயரில் அறிஞர் அண்ணாவால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!