நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..!

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொணடு விநாயகரை தரிசனம் செய்கின்றனர். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட இன்று கூட்டம் அதிகாக காணப்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.

இதேபோல் கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிசத், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், விதவிதமான பொருட்களைக் கொண்டு, விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து பிரமிக்க வைத்துள்ளனர்.

விநாயகா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து மூன்று முதல், நான்கு நாட்களுக்கு, மூன்று வேளை பூஜைகள் நடைபெறும். அதன்பின்னர் ஊர்வலாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். இதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்ததாக இருந்தாலும், அவரது அவதார தினத்தன்று அதாவது விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபடுவது சிறப்பானது. எனவே, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக, வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதைகளும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், வழிபாட்டு தலம், முக்கியமான சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விசர்ஜனம் ஊர்வலம் நடக்கும் நாள் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஊர்வலம் நடக்கும் நாளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!