இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 15)

சுவாமி அரவிந்தர் பிறந்த தினம் இன்று – ஆக/ 15 ஸ்ரீ அரவிந்த‌ரி‌ன் சுத‌ந்‌திர ‌தின‌ச் செய்தி! எனவே அனைவரின் நலன்களையும் காக்க உலக ஒற்றுமை அவசியமாகிறது. மனிதனின் மூடத்தனமான சுயநலமும், அறிவீனமும் இதனை தடுத்திடலாம். ஆனால் இயற்கைக்குக்கும், இறைவனின் சித்தத்திற்கும் எதிராக அதனால் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது. இந்த ஒற்றுமை சர்வதேச உணர்வாகவும், பரந்த பார்வையுடனான சர்வதேச வடிவாகவும், அமைப்பாகவும் வளர்ந்து திகழ வேண்டுமேயல்லாமல், சாதாரண புற ஒற்றுமையாக இருத்தல் கூடாது. இரண்டு அல்லது பல நாடுகளில் வாழும் குடியுரிமை அளித்தல், தன்னார்வத்துடனனான ஒருமித்த பண்பாட்டு பரிமாற்றம் ஆகியவாற்றினால் அந்த உலக ஒற்றுமை பலப்பட வேண்டும். தேசியம் தன்னளவில் நிறைகொண்டுவிட்ட, தனது தீவிரவாதத் தன்மையை இழந்துவிட்ட ஒன்றாகவும், இதற்கு மேல் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத் தன்மை அற்றதாகிவிட்டது. இதற்கு மேல் நாம் அனைவரும் மானுடரே எனும் புத்துணர்வு மனித குலத்தை வழிநடத்தும். “இந்தியா தனது ஆன்மீக கொடையை உலகிற்கு வழங்க வேண்டும் என்பது (எனது) மற்றொரு கனவாகும். அதுவும் ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஆன்மீகம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் எட்டியுள்ளது. இந்த போக்கு மேலும் வளரும், காலத்தின் பேரழி நர்த்தனங்களையும் தாண்டி ஒரு நம்பிக்கையுடன் மேலும், மேலும் பல கண்கள் இந்தியாவை நோக்கி திரும்பும். அவளிடமுள்ள தத்துவ பெட்டகங்களை நாடி மட்டுமல்ல, அவளுடைய உன்முக, ஆன்மீக பயிற்சியையும் நாடி திரும்பும். தான் சிந்திக்கத் துவங்கிய நாள் முதல் தனிமனித, சமூக முழுமையை நிலைநாட்ட போராடிவரும் மனிதன், தான் எதிர்கொண்டுவரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல்தரும் உயர்ந்த, பேருணர்வை நோக்கி அவனுடைய அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி துவங்க வேண்டும் என்பது எனது இறுதிக் கனவாகும். இது ஒரு தனித்த நம்பிக்கையாகவும், கருத்தாகவும் இருந்தாலும், இந்த எண்ணம் இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளில் உள்ள முன்னோக்குச் சிந்தனை கொண்ட உள்ளங்களிலும் எழுந்துள்ளது. இதனை சாதிக்கும் பாதையில் வேறு எந்த மாமுயற்சியிலும் இல்லாத அளவிற்கு பெரும் தடைகள் உள்ளன, ஆனாலும் தாண்டுவதற்குத் தானே தடைகள் யாவும்? இறைவனின் சித்தம் துணையிருப்பதால், அந்த தடைகளை தாண்டிவிடலாம். உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சியும், அது பிரபஞ்சத்தை தழுவியதாக இருந்தாலும் இந்தியாவிலேயே துவங்கும், அதன் ஆற்றல் மையமாக இந்தியாவே திகழும். இந்தியா விடுதலைப் பெற்ற இந்நாளில் இவைகளையே நான் முன்வைக்கின்றேன். எனது இந்த எண்ணங்கள் எந்த அளவிற்கு அல்லது எப்படி நிறைவேற்றப்போகிறது என்பது புதிய, சுதந்திர இந்தியாவைப் பொறுத்ததாகும். ஸ்ரீ அரவிந்தர் (15 ஆகஸ்ட் 1947) பகவான் ஸ்ரீ அரவிந்தர் அளித்த மேற்கண்ட செய்தி அகில இந்திய வானொலியில் ஆகஸ்ட் 14, 1947 அன்று ஒலிபரப்பப்பட்டது.

வரலாற்றில் இன்று – ஆகஸ்ட் 15 , 1947- இந்திய தேசியக் கோடியை இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு டெல்லி செங்கோட்டையில் ஏற்றிவைத்து உரையாற்றினார். டெல்லி செங்கோட்டையில் அதிக முறை தேசியக் கொடி ஏற்றிய இந்திய பிரதமர் யார் தெரியுமா? ஜாவஹர்லால் நேரு. இவர் 17 முறை தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்.அவ்வாறு ஒவ்வொருமுறை தேசியக் கொடியேற்றும்போதும் இவர் உண்மைகளை மட்டுமே நாட்டு மக்களிடம் பேசினார்.

வரலாற்றில் இன்று – ஆகஸ்ட் 15, 1947 அன்று பிரதமர் ஜவஹர்லால் நேரு புது டெல்லியில் செங்கோட்டையில் மூவண்ணக் கொடியேற்றினார். அன்றைய தினம் மகாத்மா காந்தி எங்கிருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார்? அன்று மகாத்மா காந்தி சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. அன்றைய தினம் அவர் புது டில்லியிலேயே இல்லை. அன்றைய தினம் கல்கத்தாவில் வேறு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த மதக் கலவரங்களுக்கு எதிராக கல்கத்தாவில் ஹைதரி மாளிகையில் நூல் நூற்றபடி பிரார்த்தனையில் இருந்தார். அதோடு உண்ணாவிரதமும் இருந்தார்.

ஆகஸ்ட் 15, வரலாற்றில் இன்று. ஓமந்தூர் ராமசாமி அவர்கள் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தில் முதல் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று (1947). ஓமந்தூர் ராமசாமி ஆட்சிக் காலத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் அரசு சின்னமாக்கப்பட்டது. பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். 1948இல் தமிழை ஆட்சி மொழியாக்க ஆணையிட்டார். சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற அரசு இலட்சினையை கொண்டு வந்தார். இவர் நேர்மையான, எளிமையான முறையில் ஆட்சி செய்தார்.

தேசிய துக்க நாள் (வங்காளதேசம்) பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலையைக் குறிக்கும் வகையில் வங்காளதேசம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக் குறிக்கும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக சுதந்திர தினத்தன்று தலைநகரில் (சென்னை) கொடியேற்றி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் முதல்மைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை கலைஞர் கருணாநிதி பெற்றுத் தந்த நாள் சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாட்டின் பிரதமரும், குடியரசுத் தினத்தன்று குடியரசுத் தலைவர்களுமே கொடியேற்றி வருகின்றனர். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தேசியக்கொடி ஏற்றுவதும், குடியரசுத் தினத்தன்று மாநில ஆளுநர் தேசிய கொடியேற்றுவதும் தற்போது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த வழக்கம் 1974 ஆம் ஆண்டுக்கு முன் இல்லை. அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தன்றும் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தார்கள். மற்ற மாநில முதலமைச்சர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் பின்பற்றி வந்தனர். ஆனால், கருணாநிதி அப்படி இருக்கவில்லை. அதெப்படி, மக்களால் தேர்வு செய்யப்பட்டவருக்கு கொடியேற்றும் உரிமையை மறுக்கலாம் என்ற கேள்வி அவருக்குள்ளே எழுந்திருக்கிறது. கடந்த 1969 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய கருணாநிதி, ஆகஸ்டு 15 ஆம் ஆண்டு மாநில முதலமைச்சர்களுக்கு தலைநகரங்களில் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று பேசினார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு குடியரசு தினத்தன்று ஆளுநர்களும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றலாம் என்று அரசாணை வெளியிட்டது. கருணாநிதியின் இந்த கோரிக்கையால் அன்று முதல் இன்று வரை சுதந்திர தினத்தன்று கட்சி கடந்து அனைத்து மாநில முதலமைச்சர்களும் தலைநகரங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். 1974டிலேயே முதல் முறையாக சுதந்திர தினத்தன்று தலைநகரில் கொடியேற்றிய முதலமைச்சர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் ஆனார் கருணாநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!