‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடங்கி வைப்பு

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-

மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர். 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இன்று (12-08-2025) இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த வீடியோவில், “வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போகிறோம்.

70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என 21,70,454 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடையப் போகிறார்கள். இது எனக்கு மனதுக்கு பிடித்த திட்டம். ஒரு திட்டத்தை அறிவித்த உடன் கடமை முடிந்து விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அந்த திட்டத்தின் பலன் கடைக்கோடியில் இருக்கும் கடைசி மனிதனையும் சென்று சேர்கிறதா என்பதையும் கண்காணிக்கிறோம்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!