த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்..!

மதுரை த.வெ.க. மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார், 42 கேள்விகள் கேட்டு விளக்கம் அளிக்க கூறி இருந்தனர். அவற்றுக்கு த.வெ.க. சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்வார்கள். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவார்கள் என்ற நிலையில் மாவட்டத்திற்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தலா 3,600 பேர் வேன்கள், பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் வர இருக்கிறார்கள்.

மொத்தம் 1.5 லட்சம் நாற்காலிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள், 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள், தேவைக்கேற்ப சி.சி.டி.வி. கேமராக்கள் மேலும் மாநாட்டில் 420 ஒலிபெருக்கிகள், 20 ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் எதுவும் வழங்கவில்லை. மாநாட்டில் இருந்து உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டு பணியில் ஈடுபடுத்தப்படும்.

12 அவசர கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது. மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜய் மட்டுமே பேசுகிறார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது.

இவ்வாறு த.வெ.க தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!