உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு உருவான கதை..!

உலக அளவில் பிரபலமான திருப்பதி லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோரே இல்லை என்றே சொல்லலாம்.

உலக புகழ்பெற திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் சாமி தரிசனம் செய்கிறார்கள். விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும், ஒரு நாளைக்கு சுமார் 3 கோடிக்கும் மேல் உண்டியல் காணிக்கை வசூலாகும்.

திருப்பதி என்றதும் ஏழுமலையான் நினைவோடு அங்கு பிரசாதாமக வழங்கப்படும் ‘லட்டு’ சேர்ந்துகொள்வதை தவிர்க்க முடியாது. திருப்பதி லட்டு என்றால் உலக அளவில் பிரபலம். லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோரே இல்லை என்றே சொல்லலாம். அதுவும் தரிசனத்திற்கு சென்று திரும்புவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டுமானால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

‘திருப்பதி போயிட்டு வந்தேன்’ என்று யாரிடம் சொன்னாலாலும் ‘லட்டு எங்கே’ என்பதுதான் உடனடியாக வரும் கேள்வியாக இருக்கும். பக்தர்கள் பணம் கொடுத்து கூடுதல் லட்டினை வாங்கி, தங்களது வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். திருப்பதி லட்டுவிற்கு மட்டும் எப்படி தனிச்சுவை இருக்கிறது? இது எப்படி செய்யப்படுகிறது? திருப்பதியில் பிரசாதமாக லட்டு கொடுக்கும் வழக்கம் எப்படி வந்தது உள்ளிட்டவற்றை பின்வருமாறு காணலாம்.

திருப்பதி லட்டு உருவான வரலாறு

திருப்பதியில் லட்டு பிரசாதம் கொடுக்கப்படுவது மட்டும் தான் பலருக்கும் தெரியும். அந்த லட்டு உருவான வரலாறும், அந்த லட்டினை தயாரிக்க கடைபிடிக்கப்படும் முறையும் பலருக்கும் தெரியாது. திருப்பதியில் பூஜை செய்வதற்கு மட்டுமல்ல லட்டு தயாரிப்பதற்கும் கூட பிரத்யேக முறை, விதிகள் கடைபிடிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. அந்த காலத்தில் போக்குவரத்து சரியாக இல்லாமல் இருந்ததால் ஏழுமலையை கடந்து வந்து, பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, வீட்டு திரும்புவதற்கு பல நாட்கள் ஆனது. அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, எளிதில் கெட்டு போகாமல் இருப்பதற்காக லட்டுக்களை பிரசாதமாக தயாரித்து கொடுக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் திருப்பதி கோவிலில் லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பக்தர்களுக்கு பூந்தியாக இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது. 1803 முதல் லட்டு வடிவில் விலைக்கு விற்கும் நடைமுறை அமலானது. அப்போது அதன் விலை காலணா மட்டுமே. 310 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.

மூன்று வகையான லட்டு

திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விஷேச நாட்களில் 750 கிராம் எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கல்யாணோத்வ லட்டு தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தற்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் எடை 175 கிராம் எடை கொண்டதாகும். நாள்தோறும் பல லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. உற்சவ நாட்களில் குறைந்தது 5 லட்சம் லட்டுகள் வரை ஸ்டாக் இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தனை அண்டுகளும் இதன் சுவை, மணம் மாறமால் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக உள்ளது. லட்டின் தரத்தை பரிசோதிக்க அடிக்கடி ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டும் வருகிறது.

புவிசார் குறியீடு

2009 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீட்டு வழங்கப்பட்டது. பின்னர், திருப்பதி லட்டுக்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாராலும் இதை தயாரிக்க முடியாது.

திருப்பதி லட்டு தயாரிக்க சேர்க்கப்படும் பொருட்கள்

கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை என பல பொருட்கள் சேர்ந்த்து திருப்பதியில் லட்டு தயாரிக்கப்படுகிறது. முன்பு, ஏராளமான நபர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்போது இயந்திரங்கள் பயன்படுத்தியும் லட்டு தயாரிக்கப்படுகிறது.

தினமும் இரண்டு ஷிஃப்ட்களாக கிட்டதட்ட 600 சமையல் நிபுணர்கள் சேர்ந்து இந்த லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். தினமும் முதலில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட அளவிலான லட்டுகள் முதலில் ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்டு, அதற்கு பிறகு தயாரிக்கப்படும் லட்டுக்கள் மட்டுமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதல் லட்டு ரூ.50 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!