மதுரையில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது.
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள, 8 லட்சம் சதுரடி பரப்பு மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு முக்கிய நிகழ்வாக மாநாடு அரங்கிலும், வெளியிலுமாக 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நேரில் கலந்து கொள்ளாதவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து பாடலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களை மதியம், 3:00 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். மாலை, 4:00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும். இதற்காக மாநாட்டு வளாகம் முழுதும் 18 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், வெளியூர்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
