மருதமலை முருகன் கோயிலில் லிப்ட் வசதி..!

ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில், 2 லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

கோவை மருதமலையில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வந்தடைய மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் 150 படிக்கட்டுகளை கடந்து, 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.5.20 கோடி மதிப்பில் லிஃப்ட் (மின் தூக்கி) அமைக்கும் பணிகள் கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில், 2 லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதில் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லலாம். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு லிஃப்ட் மேலே செல்லும். பின்னர், அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டுப் பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, மற்றொரு லிப்ட்டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோயிலுக்கு செல்லலாம்.

இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, ”இக்கோயில் வளாகத்தில் இரு பிரிவுகளாக மேம்பாட்டுப் பணிகள், லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேஸ் -1 திட்டத்தில் அன்னதானக் கூடம், பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டும் பணி ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 10 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

மலையின் மீது வாகனம் நிறுத்திமிடத்திலிருந்து ஆதி மூலஸ்தானம் செல்ல பழைய படிக்கட்டுப் பாதை உள்ளது. இப்படிக்கட்டு பாதைகள் சீராக இல்லாமல் சேதமடைந்து காணப்படுகின்றன. பேஸ்-2 திட்டத்தில் இந்த படிக்கட்டுப் பாதைகள் சீரமைத்தல், பக்தர்கள் இளைபாறுவதற்காக 11 இளைப்பாறு மண்டபங்கள் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். ஒப்பந்த நடைமுறைகள், நிறுவனம் தேர்வு உள்ளிட்ட நிலையில் பேஸ்-2 பிரிவு பணிகள் உள்ளன.

அது தவிர, தனியாக ரூ.5.20 கோடி மதிப்பில் லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலை மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து 12 மீட்டர் உயரத்துக்கு செல்லும் வகையில் 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டு விட்டன. இரண்டாம் கட்ட லிப்ட் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாறையை குடைந்து சில பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அதனால் 15 சதவீதம் பணிகள் நிலுவையில் உள்ளன. விரைவாக இப்பணிகள் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் லிப்ட் பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!