நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் ஜூன் மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், 134 தொகுதிகளில் இளைஞர்களே போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஏனென்றால் இந்த ஆண்டு இறுதியிலேயே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு, பிப்ரவரிக்குள் தொகுதி பங்கீடு பணிகளை முடிக்க திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் வேதாரண்யம் தொகுதியில் நாதக சார்பாக இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சீமான் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு கட்சி ரீதியிலான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். ஆனால் இம்முறை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றிருக்கிறார்.
இத்தனை ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, இம்முறை மட்டும் பங்கேற்பதற்கான அவசியம் என்ன என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்கி இருக்க வேண்டும். திடீரென டெல்லி செல்லும் போது அமலாக்கத்துறை சோதனைக்காக செல்கிறீர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் விலகினால்..
திமுக தன்னுடைய 22 உறுப்பினர்களை வைத்து ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இணக்கமாக இருக்கலாம். திமுகவும் அந்த மாதிரியான சூழலில் ஆதரவு அளிப்போம் என்று இணக்கமாக இருக்கலாம். பாகிஸ்தான் போர் பதற்றத்தின் போது கூட முதல் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பேரணியை நடத்தினார். பாஜக முதல்வர்கள் கூட பேரணியை அறிவிக்கவில்லை.
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளை ஊடுருவியது எப்படி? அவர்கள் தாக்குதல் நடத்திய பின் தப்பியது எப்படி? இந்தியா போன்ற வலிமையான ராணுவ கட்டமைப்பு கொண்ட நாட்டிற்குள் பயங்கரவாதிகள் வந்தது எப்படி? பஹல்காம் பகுதி சுற்றுலாதலமாக மாற்றியதே தெரியாது என்று கூறுகிறார்கள்.. தெரியாது என்று சொல்வதற்கு அதிகாரம் எதற்கு..
சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி எப்போதோ தேர்தல் பணிகளை தொடங்கி செய்து வருகிறது. கிட்டத்தட்ட 100 வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம். ஜூன் இறுதிக்குள் எல்லா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து அறிவித்து, அடுத்தக்கட்ட பணிகளை செய்வோம். நிச்சயமாக 234 தொகுதிகளில் 134 பேர் இளைஞர்களாகவே இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.