வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன. மத்திய அரசு பதிலளித்த நிலையில், தவெக பதிலுரை தாக்கல் செய்துள்ளது.
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், புதிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கடந்த மாதம் 5ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, வக்ஃப் திருத்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, சஞ்ஜீவ் கண்ணா நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மஸி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளித்த நிலையில், அதற்கான பதிலுரையை தவெக தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த சட்டம் இருப்பதாக பதிலுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
