கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று நிறைவடைந்தது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் நாளில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. கடந்த 8-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை 5 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினாலும் மீண்டும் அணைக்கு நீர் வரத்து ஏற்படும் வரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
