இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 02)

சூரை மீன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மே 2-ம் தேதி உலக சூரை மீன்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சூரை மீன்கள் பல நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், அவை கடல் உணவுச் சங்கிலியில் இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றன. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் போன்ற காரணங்களால் சூரை மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நாளில், நிலையான மீன்பிடி முறைகளை பின்பற்றுவது, சூரை மீன் வளத்தைப் பாதுகாப்பது மற்றும் கடல் ecosystem-ஐ பேணுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நீங்களும் இந்த உலக சூரை மீன்கள் தினத்தில், சூரை மீன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க முடியும். நிலையான முறையில் பிடிக்கப்பட்ட சூரை மீன்களை தேர்ந்தெடுப்பது, மீன் கழிவுகளை குறைப்பது போன்ற சிறிய செயல்களும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

லியொனார்டோ டாவின்சி – வரலாற்று நாயகர் – காலமான நாளின்று மாபெரும் ஓவியர், தேர்ந்த சிற்பி, சிறந்த கவிஞர், இசை விற்பன்னர், தத்துவ மேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுனர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, நீர்ப்பாசன நிபுனர், இராணுவ ஆலோசகர் என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பிரகாசித்த ஒருவரை எப்படி அறிமுகபடுத்துவது? என்ன சொல்லி கெளரவப்படுத்துவது? அந்தக் கலைஞன் தீட்டிய அந்த அதிசய ஓவியம் மோனலிசா, அந்த தெய்வீக புன்னகையை தன் தூரிகையால் வடித்துத் தந்த மாபெரும் கலைஞன் லியொனார்டோ டாவின்சி உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார். அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும். பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு இதே மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்.

ஜெர்மெனியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியான க்ளாரா இம்மர்வார் இறந்த நாள் முதல் உலகப்போரில், ஜெர்மெனியின் சார்பில் தன் கணவர் ஃப்ரிட்ஸ் ஹேபர் நச்சு வாயுவை போர்க்களத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துபோனார். யூதப் பெற்றோருக்கு 1870இல் பிறந்த இம்மர்வார், ப்ரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில், 1900இல் வேதியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதுவரை ஜெர்மெனியில் பெண்கள் யாரும் முனைவராவதற்கு அனுமதிக்கப்பட்டிராத நிலையில், ஆண்கள் 6 செமஸ்ட்டர்களில் முடிக்கும் முனைவர் பட்டத்திற்கு, இம்மர்வார் 8 செமஸ்ட்டர்கள் படிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையை அவர் சமர்ப்பித்தபோது, தங்களைப் போன்ற ஒரு பெண் முனைவராகிறார் என்ற வியப்பில் ஏராளமான பெண்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனராம்! 1897இலேயே கிறித்தவ சமயத்துக்கு மாறியிருந்த இம்மர்வார், 1901இல் ஹேபரைத் திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் சந்தித்து, அன்பை வெளிப்படுத்தியிருந்தாலும், பொருளாதார தற்சார்பை விரும்பிய இம்மர்வார் தொடக்கத்தில் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. அவர் அஞ்சியது போலவே திருமண வாழ்வு இருந்தது. வேதியியல் ஆய்வுகளில் தனிப்பட்டு இம்மர்வார் ஈடுபடுவது தடைப்பட்டதுடன், அதே துறையைச் சேர்ந்தவரான கணவரின் ஆய்வுகளுக்கு அவர் செய்த ஏராளமான பங்களிப்புகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. முதல் உலகப்போரின்போது ஜெர்மெனியின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தீவிர ஆதரவாளராக இருந்த ஹேபர், அதற்கு உதவியாக வேதியியல் ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். போரின் தொடக்கத்திலிருந்தே பிற நாடுகள் வேதியியல் ஆயுதங்களை முயற்சித்திருந்தாலும், 1915 ஏப்ரல் 22இல் பெல்ஜியத்தின் ஈப்ரெ நகரில் நடைபெற்ற யுத்தத்தில், ஹேபர் தயாரித்து, ஜெர்மெனி பயன்படுத்திய நச்சு வாயுவே, ராணுவ வரலாற்றின் முதல் வெற்றிகரமான நச்சுவாயுத் தாக்குதலாகியது. அறிவியலை குரூரமாகப் பயன்படுத்துவதாகவும், காட்டுமிராண்டித்தனம் என்றும் கணவரை இம்மர்வார் கண்டித்தாலும், அவர் பொருட்படுத்தவில்லை. ஹேபரின் ஆய்வகத்தில் அவருடன் சேர்ந்து ஆய்விலல் ஈடுபட்டிருந்த இம்மர்வாரின் வகுப்புத் தோழர் ஒருவரும், நச்சு வாயுவால் உயிரிழந்த பின்னணியில், தன் கணவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுட்டுக்கொண்ட இம்மர்வார் மகனின் மடியில் உயிரிழந்தார். அவர் இறந்த அரை மணி நேரத்திலேயே, ரஷ்யா மீதான தாக்குதலைச் செயல்படுத்தச் சென்ற அவர் கணவர் ஹேபர், வேதிப் போர்முறையின் தந்தை என்றழைக்கப்படுகிறார். அம்மோனியாவைச் செயற்கையாக உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக, 1918இல் நோபல் பரிசும் பெற்றார் ஹேபர்.

தேவிகா இறந்த நாளின்று 60களில் கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என பல கதாநாயகிகள் அறிமுகமாகித் திரையில் மின்னினாலும், வண்ணப் படங்களின் விகிதம் கூடினாலும் 50களின் நாயகிகளும் அவர்களுடன் சரி சமானமாகப் போட்டியிட்டார்கள். அவர்களில் தேவிகாவுக்கும் முதன்மையான இடம் உண்டு. தேவிகா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானவை. அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த உதவிய ஒவ்வொரு சினிமாவுமே தென்னகத் திரை வரலாற்றின் பொற்கால அத்தியாயம். கிடைத்தத் தரமான வேடங்களில் அதி அற்புதமாக வாழ்ந்து காட்டியவர். இன்றளவும் அனைத்துத் தமிழர்களின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்தவர் தேவிகா! ‘வேர்க்கடலைத் தோல்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்பொலியும்… ’ அது தேவிகாவின் ஷூட்டிங் என்று, லைட் மேன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் உள்ளிட்டத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எளிதில் அடையாளம் காட்டி விடும். ‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்கு டப்பிங் சினிமா முதல் முதலாக தேவிகாவை தமிழக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. பாவ மன்னிப்பு, கர்ணன், நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, வாழ்க்கைப்படகு, வானம்பாடி, நீலவானம், மறக்க முடியுமா?, பழநி, சாந்தி, பந்தபாசம், அன்புக் கரங்கள், முரடன் முத்து, ஆனந்தஜோதி, ஆண்டவன் கட்டளை, அன்னை இல்லம் என்று தொடர்ச்சியாக பல நல்ல படங்களைக் கொடுத்தவர் தேவிகா. கொஞ்சமும் சோடை போகாத நடிப்பு அத்தனை படங்களிலும். அவற்றில் சில படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் தேவிகாவின் கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் எப்போதும் சோடை போனதில்லை. சினிமா ஸ்டாராக அறிமுகமான சூழல் குறித்த தேவிகாவின் நினைவலைகள்- ‘எனக்குச் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள சித்தூர். சகோதரிகள் இருவர். ஒரு சகோதரர். பழமையில் ஊறிய குடும்பம். ஆகவே கட்டுப்பாடுகள் ஜாஸ்தி. வீட்ல சினிமா மேல அத்தனை நல்ல அபிப்ராயம் கிடையாது. என்னோட பாட்டிக்குக் கலைகள்ள ஈடுபாடு ஜாஸ்தி. கர்நாடக சங்கீதம்னா உசுரை விட்டுடுவாங்க. அருமையாப் பாடவும் செய்வாங்க. ஒரு நவராத்திரி சமயம். பாட்டி பாட நான் மகிஷாசுர மர்த்தினியா வேஷம் போட்டுக்கிட்டு நடனம் ஆடியிருக்கேன். நடிப்பு, நாட்டியம்னு நான் எடுத்த முதல் அவதாரம் அது. பாட்டிக்கு ஜோசியத்துல அபாரமான நம்பிக்கை. பேத்தியோட எதிர்காலம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்குற ஆசை என்னை விட பாட்டிக்கே அதிகம். குடும்ப ஜோதிடர் கிட்டே என் ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் பார்க்கச் சொன்னாங்க. ‘கலைத்துறையில் உங்கக் குழந்தைக்கு மிகப் பிரமாதமான பேரும் புகழும் சித்திக்கும்’னு ஜொதிடர் ஆருடம் சொன்னாராம். வயலின், பாட்டு கிளாஸ்னு வீட்டிலேயே வகுப்புகள் ஆரம்பமாயின. என் அக்காவுக்குப் பாட்டில் ஆர்வம் கிடையாது. நான் நல்லா பாடுவேன். ஆடல் பாடல்ல முழுத் தேர்ச்சி பெறுவதற்குள் பாட்டியின் ஆர்வம் மற்றும் ஜொசியத்தில் கூறியது போல் அரிதாரம் பூச வேண்டியதாயிற்று. ’ – அப்படீன்னு தேவிகா சொல்லி இருந்தார் தேவிகாவின் இயற்பெயர் பிரமீளா. வீட்டில் செல்லமாக ‘ராணி’ என்றும் அழைத்தார்கள். சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளிக் கூட முன்னாள் மாணவி. வி.என். ரெட்டி இயக்கிய ‘புட்டிலு’ தெலுங்கு படத்தில் நடனமாடத்தான் தேவிகாவுக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. டைரக்டர் வி.என். ரெட்டி. இயக்குநர் அதன் நாயகி ஜமுனாவிடம், ‘ராணி பெரிய நடிகை ஆகி விடுவாள்’ என்பாராம். ஜமுனாவின் முகம் அதைக் கேட்டு கோபத்தில் தாறுமாறாகச் சிவக்குமாம். ‘ரேசுகா’ இரண்டாவதாக வெளியானது. என்.டி. ராமாராவுடன் இணைந்து தேவிகா நடித்த முதல் படம். மிகப் பெரிய வெற்றி. ‘நாட்டுக்கு ஒரு வீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் பரவலாக ஓடியது. சென்னையில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களில் பிரமீளாவை இனம் கண்டு கொண்டனர் பள்ளித் தோழிகள். வகுப்பில் அவர்களது கேலி கிண்டல் தாங்க மாட்டாமல் படிப்பு பாதியில் நின்றதும் அதை அடுத்து வெள்ளித் திரை தாரகை ஆனதும் நீண்ட கதை.. பின்னாளில் இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி மூன்று படங்களிலும் நாயகியாக நடித்தவர் தேவிகா. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் நாயகியாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜயகுமாரி. ஆனால் அவர் தனக்கு இணையாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்குப் பரிந்துரைத்ததுடன் அல்லாமல், அந்த நிலைப்பாட்டில் பிடிவாத மாகவும் இருந்ததால் அவருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டவர் தேவிகா. ஒருவிதத்தில் தேவிகா நன்றி சொல்ல வேண்டியது நல்வாய்ப்பைத் தவறவிட்ட விஜயகுமாரிக்குதான். படத்தில் கதாநாயகி சீதாவாகவே மாறிவிட்டார் என்றும் சொல்லலாம். மிக அழுத்தமான ஒரு பாத்திரம் அது. தனக்குள்ளாகவே குமைந்து, வெளியில் சொல்ல முடியாத துயரங்கள் மனதில் பாரமாக அழுத்த, அதை மறைத்துக்கொண்டு போலியாகச் சிரித்து கணவனின் உடல்நலம் பெற வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, முன்னாள் காதலனை நம்பவும் முடியாமல் ஒரு டாக்டரான அவரிடம் கடுமை காட்டவும் விரும்பாமல் அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம். அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். இரு ஆண்களுக்கு இடையில் மனத் தவிப்போடு நடமாட வேண்டிய ஒரு பெண்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ‘சொன்னது நீதானா?’ பாடல் காட்சியில் அவரது தவிப்பும் துயரமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். காதலில் தோற்றுப் போன பெண்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதைத் தன் படங்களில் அழுத்தமாகச் சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர். அவரது ‘கல்யாணப் பரிசு’ படத்துக்கு முன்னர் காதலில் தோற்ற கதாநாயகிகள் இயக்குநரால் கொல்லப்பட்டார்கள் என்பதே வரலாறு. 1962ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தேவிகா கொண்டாடப்பட்டார். சிறந்த மாநில மொழிப்படத்துக்கான விருதும் வெள்ளிப் பதக்கமும் இப்படம் வென்றது. தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்த ஒரு பாத்திரமாகவும், அந்தப் படத்தை முதன்முதலாகப் பார்த்தபோது, தன்னை மீறிய மன அழுத்தத்தால் கட்டுண்டு, கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுததாகவும் தேவிகா குறிப்பிட்டிருக்கிறார். தேவிகாவை மட்டு மல்லாமல், பல ஒட்டு மொத்தப் பெண்களையும் கவர்ந்த படம் இது. ’நெஞ்சம் மறப்பதில்லை’ நாயகி கண்ணம்மாவை யாருக்குதான் பிடிக்காது. இரு மாறுபட்ட வேடங்களை முற்பிறவி, இப்பிறவிகளில் அவர் எடுத்திருந்தாலும் கிராமிய மணம் கமழ அள்ளி முடிந்த கூந்தலும், கணுக்காலுக்கு மேலான பாவாடை தாவணியில் கள்ளம் கபடம் இல்லாத ஏழைப் பெண்ணான கண்ணம்மாவே முதலிடம் பிடித்த தேவிகா இதே நாளில்தான் மறைந்தார்.

கே. பாலாஜி, -தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இறந்த தினமின்று. கே. பாலாஜி கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். கொஞ்சம் டீடெய்ல்ஸ் ப்ளீஸ் என்று கட்டிங் கண்ணையா-வுக்கு மெசெஜ் அனுப்பிய பத்தாவது நிமிடத்தில் வந்த ரிப்போர்ட் இது: சென்னையில், நரசுஸ் ஸ்டுடியோவில், புரொடக் ஷன் மேனஜராக பணிபுரிந்தவர். அவ்வையார் படம் மூலம், நடிகரானார். தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில், துணை நடிகராக நடித்து, பிரபலமானார். 966-ல், ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ என்ற பட நிறுவனத்தைத் துவக்கி, படத் தயாரிப்பில் இறங்கினார். ‘ரீமேக்’ படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். பில்லா, தீ, வாழ்வே மாயம், கிரீடம் உட்பட, 54 படங்களை தயாரித்துள்ளார்.இவரது தயாரிப்பில், சிவாஜி கணேசன், 17 படங்களில் நடித்துள்ளார். இவரது தயாரிப்பில் வெளிவந்தவற்றில், 90 சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன கோலிவுட்டில். ஒரு தயாரிப்பாளராக கே.பாலாஜி சாதனை புரிந்திருக்கிறார். பாலாஜி-சிவாஜி காம்பினேஷன் ரீமேக் படங்களாக எடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். அவர் எடுத்த படங்கள் ஒரு பத்து பதினைந்து வருஷங்கள் தோல்வியே அடைந்ததில்லை. ரீமேக்தான் செய்வார். வெற்றி பெற்ற படங்களாக பார்த்து தமிழுக்கு கொண்டு வருவார். பெரும்பாலும் சிவாஜி ஹீரோ. எம்எஸ்வி இசை. சிவாஜியை வைத்து அவர் எடுத்த மொக்கைப் படங்களான நீதிபதி, தீர்ப்பு எல்லாம் கூட செமை ஓட்டம் ஓடியது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் தயாரித்தவர் இவர்தானாம் – 17 படங்கள். நீதி, எங்கிருந்தோ வந்தாள், திருடன், தியாகம், தீபம் என்று சிவாஜி கூடவும், தீ, பில்லா, விடுதலை என்று ரஜினி கூடவும், சவால், சட்டம் என்று கமல் கூடவும் வெற்றி மேல் வெற்றி. பில்லா ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம். அவர் எடுத்த முதல் படத்தில் ஜெமினி ஹீரோவாம் – அண்ணாவின் ஆசை என்று பேராம். ஒரு பேட்டியில் அவர் ஒரு முறை தன ரீமேக் ரகசியத்தைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு முறையும் பம்பாய் போய் இறங்கும்போது டாக்சி டிரைவரிடம் பேச்சு கொடுப்பாராம். என்ன படம் நன்றாக இருக்கிறது, என் இப்படி சொல்கிறீர்கள் என்று அவரிடம் ஒரு பேட்டி எடுப்பாராம். அதை வைத்துதான் இந்த படத்தை ரீமேக் செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பாராம். அவருக்கு அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியது. ரஜினியை தமிழ் திரையுலகிற்கு நிரந்தர சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘பில்லா’. திரைப்படம் என்றால் அது மிகையாகாது. அப்படத்தை தயாரித்தவர் இவரே. அந்த படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து பெருமளவில் பேசப்பட்டார். ‘ரஜினியைப் போல தயாரிப்பாளர்களை மதிக்கும் ஹீரோக்கள் இப்போது இல்லாமல் போனதாலேயே புதிய படங்கள் எடுப்பதை நிறுத்திக் கொண்டேன்’ என பில்லா படத்தின் ரீமேக் (அஜித் படம்) தொடக்க விழாவில் பாலாஜி கூறினார். இவருடைய இந்த பேச்சு தமிழ் திரையுலகில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது இப்பேர்பட்டவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘டயாலிசிஸ்’ என்ற ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்நிலையில் தனது 84 வயதில் இதே May 2ல் காலமானார்.

சத்யஜித் ரே 103ஆவது பிறந்த தினம் – மே 2 உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவே பொதுவாக அறியப்படும் சத்யஜித் ரே, கூடுதலாக, எழுத்தாளர், இசையமைப்பாளர், ஓவியர், புத்தகப் பதிப்பாளர், வரைபட வடிவமைப்பாளர், சித்திர எழுத்துக்கள் எழுதுபவர், சிற்பக்கலை வல்லுநர் என்ற பல திறமைகளுக்குச் சொந்தக்காரர். இவரது தாத்தா உபேந்திரா கிஷோர் ராய் எழுத்தாளர், பதிப்பாளர், தத்துவவாதி, வானவியல் நிபுணர் மற்றும் அன்றய சமுதாய இயக்கமான ப்ரம்மசமாஜத்தின் முக்கிய அங்கத்தினர். இவர் தந்தை சுகுமார் ராய் விமர்சகர், வங்க மொழி எழுத்தாளர், சிறுவர் இலக்கியம் படைத்தவர் என்று குடும்பமே கலைகளில் சிறந்த விளங்கிய ஒன்று. இந்தச் சூழ்நிலையில் 1921ம் ஆண்டு மே மாதம் 2ம் நாள் சுகுமார் ராய் சுமத்ரா தம்பதியினருக்கு மகனாக சத்யஜித் ரே பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே தந்தையை இழந்த சத்யஜித் ரே தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பட்டம் பெற்ற ரே சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியம், வரைகலை, வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல் ஆகிய கலைகளைக் கற்றுக்கொண்டார். ஒரு பிரித்தானிய விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ரே பின்னர் பதிப்பகம் ஒன்றில் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பாளராகப் பொறுப்பேற்றார். ஜிம் கார்பட் எழுதிய புத்தகங்கள், ஜவாஹர்லால் நேரு எழுதிய இந்தியாவைக் கண்டுணர்தல் (Discovery of India) போன்ற புத்தகங்களின் அட்டைப்படங்களை வடிவமைத்தார். அப்போதுதான் வீபூதிபூஷன் பந்தோபாத்யாய் எழுதிய பதேர் பாஞ்சாலி நாவலின் சிறுவர் பதிப்பைக் கண்டடைந்தார். இந்த நாவல் சத்யஜித் ரேயின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது என்றால் அது மிகையல்ல. தனது வேலை நிமித்தமாக லண்டன் சென்ற ரே அங்கே பல்வேறு உலகத் திரைப்படங்களைப் பார்த்தார். மீண்டும் இந்தியா திரும்பிய ரே பதேர் பாஞ்சாலி நாவலைத் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். தயாரிப்பாளர்கள் யாரும் இந்தப் படத்திற்குப் பணம் தர முன்வராத காரணத்தால் தன் சேமிப்பையும், தனது மனைவியின் நகைகளையும் விற்றுப் படம் எடுக்கத் தொடங்கினார் ரே. பின்னர் நேருவின் சிபாரிசினால் அன்றய வங்காள அரசு பண உதவி செய்ய முன்வந்தது. வெளியான உடனேயே பதேர் பாஞ்சாலி படம் உலகமெங்கும் பெரும் புகழ்பெற்றது. இந்திய சினிமாவை பதேர் பாஞ்சாலிக்கு முன்னென்றும் பின்னென்றும் பிரிக்கவேண்டும் என்ற நிலைமை உருவானது. அப்பு என்ற கிராமத்தில் வசிக்கும் சிறுவனின் கதை இது. இதனைத் தொடர்ந்து வளர்ந்துவிட்ட அப்புவுக்கும் அவன் தாய்க்குமான உறவுச்சிக்கலைச் சொல்லும் அபராஜிதோ, அப்புவின் மணவாழ்க்கையைப் பேசும் அப்பு சஞ்சார் ஆகிய படங்களையும் சத்யஜித் ரே இயக்கினார். இந்தியாவின் வறுமையைக் காசாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என 36 படங்களை இவர் இயக்கியுள்ளார். திரைப்படங்களைத் தாண்டி, வங்காள மொழியின் சிறுவர் இலக்கியத்திற்கும் ரே பெரும் பங்காற்றியுள்ளார். ப்ரொதோஷ் சந்திரா மித்ரா என்ற துப்பறிவாளர், பேராசிரியர் ஷான்கோ என்ற அறிவியலாளர் என்ற பாத்திரங்களை உருவாக்கி பல சிறுவர் கதைகளையும் இவர் எழுதி உள்ளார். வங்காள மொழியில் எழுத்துருவங்களை உருவாக்குவதிலும் ரே தலைசிறந்து விளங்கினார். திரைப்படத்துறையில் ரேயின் பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பாரத்ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. வாழ்நாள் சாதனையாளர் என்று இவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகமும், டெல்லிப் பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. இதுபோக இந்திய அரசின் திரைப்பட விருதுகளும்.

பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர், எலைஜா ஜெ.மெக்காய் பிறந்த நாள் கறுப்பினத்தவரில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றுக்கான காப்புரிமை பெற்றவர் என்று போற்றப்பட்ட எலைஜா ஜெ. மெக்காய், 1909-ல் புக்கர் டி வாஷிங்டன் என்பவர் எழுதிய ‘ஸ்டோரி ஆஃப் தி நீக்ரோ’ (Story of the Negro) என்ற புகழ்பெற்ற நூலில் உள்ளது. அதேநேரம், கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, பெரிய அளவில் அங்கீகாரம் மறுக்கப்பட, அதைப் பற்றி கவலைப்படாத எலைஜா, ஏறக்குறைய 50 சாதனங்களுக்கு காப்புரிமை பெற்றார். தான் கண்டறிந்த உயவிடுவான் (Lubricator) சாதனங்களை உற்பத்தி செய்ய முதலீடு இல்லாததால், தனது முதலாளிகள், முதலீட்டாளர்களிடம் இவற்றுக்கான உரிமங்களை விற்றுவிட்டார். இதனால், இவர் கண்டறிந்த பல சாதனங்கள் பற்றிய குறிப்புகளில் கண்டுபிடிப்பாளராக இவரது பெயர் இடம்பெறவில்லை. இறுதியாக, தான் கண்டறிந்தவற்றை உற்பத்தி செய்வதற்காக 1920ல் தன் பெயரில் ஒரு தொழிற்சாலை தொடங்கினார். அங்கு இவரது பெயர் தாங்கிய உயவிடுவான் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தவரும், உயவிடல் நுட்பத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான எலைஜா ஜே.மெக்காய் ஒரு நான்கு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்தார். அதில் இருந்து முழுமையாக குணமடையாமலே அக்டோபர் 10, 1929ல் தனது 85-வது அகவையில், ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ள மிச்சிகன் மாநிலம் டிட்ராயிட் பெருநகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!