காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்பு..!

வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ கணேச சர்மா சன்னியாசதீட்சை பெற்றார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அட்சய திருதியை தினமான இன்று (புதன் கிழமை) அதிகாலை சந்நியாஸ்ரம தீட்சை வழங்கினார்.

சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் நடைபெற்றது. இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து கோவியில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.

கருடாசனம் நிலையில் அமர்ந்து ஸ்ரீ கணேச சர்மா குருவை வணங்கினார். ஸ்ரீ கணேச சர்மாவுக்கு சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு தண்டத்தை வழங்கினார்.

முன்னதாக கோவில் திருக்குளத்தில் ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். இளையமடாதிபதிக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையமடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நாமம் சூட்டப்பட்டது. பின்னர் மடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 வது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!